பட்டணம் கையைச் சுட்டது.. கிராமம் நெஞ்சைத் தொட்டது!-செந்தமிழன்

ஒருங்கிணைந்த பண்ணையம்!

404842_449505161787518_1063283685_n

ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

கம்மஞ் சோறு, கருவாட்டுக் குழம்பு, பம்புசெட் குளியல், ஆத்தோர ஆலமரம், மாட்டுக் கழுத்து மணிச் சத்தம், தெருவையே திடலாக்கி விளையாடும் சிறுசுகள், மார்கழி மாசத்து கோலம், பூசணிப் பூ…
– கிராமத்துப் பாரம்பரிய விஷயங்களை இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

இவற்றையெல்லாம் நேரில் பார்க்கலாமே என்று நீங்கள் இப்போது கிராமங்களுக்குப் பயணப்பட்டால்… ஏமாந்துதான் போவீர்கள். திரைப்படங்களில் மட்டுமே இதையெல்லாம் பார்க்க முடியும் என்கிற நிலையை கிட்டத்தட்ட உருவாக்கி வைத்திருக்கிறது நவீன நுகர்வு கலாச்சாரம். கிராமங்களும் கூட பாரம்பரியத்தைப் பறக்கவிட்டு, நகரத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இத்தகையதொரு காலகட்டத்தில், “கிராமம்தான் எந்நாளும் எல்லோரையும் வாழவைக்கும்” என்றபடி பட்டணத்திலிருந்து பட்டிக்காட்டுக்குத் திரும்பியதோடு, ‘இயற்கை விவசாயம்… ஒருங்கிணைந்த பண்ணையம்…’ என்று அசத்தலாக புது வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறது நவநாகரிக காதல் தம்பதி ஒன்று.
தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள ஆச்சான்பட்டியைச் சேர்ந்தவர் செந்தமிழன் (அலைபேசி: 97917-54596). பத்திரிகையாளர், சினிமா கதாசிரியர், குறும்பட இயக்குனர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். பத்திரிகையாளர், கல்லூரி விரிவுரையாளர் என்று தானும் சளைக்காமல் பன்முகம் கொண்டவர்தான் இவரின் மனைவி காந்திமதி. சென்னைப் பட்டணத்தின் காபி ஷாப், ஷாப்பிங் மால், பீச், சத்யம் சினிமா காம்ப்ளக்ஸ் என்று சொகுசு வாழ்க்கையை விட்டொழித்துவிட்டு, இப்போது ஆச்சான்பட்டியின் நிரந்தரவாசிகளாக பிறப்பெடுத்திருக்கின்றனர் இருவரும்.

நிலம் தரும் நம்பிக்கையை வேற எதுவும் தராது!
“பத்திரிகை, சினிமானு பரபரப்பான வாழ்க்கை ஒரு கட்டத்துல சலிப்பையும், சித்ரவதையையும் கொடுக்கத் தொடங்கிச்சி. நான் விவசாயக் குடும்பத்துல இருந்து வந்தவன்ங்கிறதும் அதுக்கு ஒரு காரணம். அதுமட்டுமில்ல… ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுகாகோ எழுதின ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகத்தைப் படிச்சது, எனக்குள்ள ரொம்ப மாற்றத்தைக் கொண்டு வந்துச்சி. தமிழர் மரபு, பண்டைய விவசாயம் பத்தின புத்தகங்கள், செம்மறி ஆடு மேய்க்கறவங்களோட வாழ்க்கை முறையை மையமா வெச்சி, நான் இயக்கின ‘ஆடோடிகள்’ குறும்படம் எல்லாமும் சேர்ந்துதான் என்னை கிராமத்துக்கு திரும்ப வெச்சிடுச்சி.
‘பணத்துக்காக மாநகரத்துல நரக வாழ்க்கையை இனியும் அனுபவிக்க வேண்டாம்’னு முடிவு செஞ்சி கிராமத்துக்குத் திரும்பினப்ப, நான் கைநிறைய சம்பாதிச்சுக்கிட்டுதான் இருந்தேன். என் மனைவியும் அதேபோலத்தான். இப்ப விரிவுரையாளர் வேலையை உதறிட்டு, விவசாயத்துல என்கூட உதவியா இருக்காங்க. தொலைஞ்சிப் போன உலக வாழ்க்கையை இங்கதான் நாங்க திரும்பவும் கண்டெடுத்திருக்கோம். சுருக்கமாச் சொன்னா… நிலத்தோட இருக்கும்போது அது தர்ற நம்பிக்கையை இந்த உலகத்துல வேறெதுவும் தர்றதில்லை” என்று உற்சாகமாக பேசும் செந்தமிழன், சுறுசுறுப்பாக ஒருங்கிணைந்த பண்ணையம் என்பதை உருவாக்கி, ஊரையே திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
“இயற்கை, ‘கை’யைக் கடிக்கும்!”
“இந்த ஊருல எங்க குடும்பத்துக்கு அஞ்சி ஏக்கர் நிலம் இருந்துது. அதை குத்தகைக்கு விட்டுட்டு தஞ்சாவூருக்கு குடிபோயிட்டோம். நான் படிப்பு முடிச்சிட்டு, சென்னைக்கு வேலைக்குப் போயிட்டேன். ஒரு கட்டத்துல பட்டணத்து வாழ்க்கைதான்னு முடிவாகி, அங்கேயே தங்கிட்டேன். ஆனா, போகப்போக அது வெறுத்துப் போனதும், ஊருக்குத் திரும்பி விவசாயத்தை கையில எடுப்போம்னு எங்க நிலத்துல வந்து இறங்கிட்டேன். மண்ணைக் கெடுத்து, மனுசனையும் கெடுக்கிற ரசாயனத்தைப் பயன்படுத்தாம, இயற்கை விவசாயம்தான் செய்யணும்னு முடிவு செஞ்சுதான் ஊருக்கே வந்தேன். ‘இயற்கை விவசாயமெல்லாம் கதைக்காகாது. அதுல மகசூலே எடுக்க முடியாது. கையைத்தான் கடிக்கும்’னு ஊர்க்காரங்க சிலர் சவால் விட்டாங்க. இன்னிக்கு என்னோட இயற்கை விவசாயப் பண்ணையைப் பார்த்து அசந்து போய் நிக்கறாங்க.
ஏற்கெனவே, இயற்கை முறையில விவசாயம் செய்துகிட்டிருக்கிற நண்பர்கள், ‘பசுமை விகடன்’ல வெளியான ‘ஜீரோ பட்ஜெட்’ உள்ளிட்ட இயற்கை வேளாண்மை தொழில்நுட்பம் இதெல்லாம்தான் எனக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் கொடுத்து நிலக்கடலை சாகுபடி செஞ்சேன். நாலரை மா நிலத்துல (ஒன்றரை ஏக்கர்) 22 மூட்டை மகசூல் எடுத்தேன். கடலைக் கொடிய பிடுங்குறப்ப கொடியோட சேந்து குண்டு, குண்டா மண்புழு வந்ததைப் பாத்து அக்கம் பக்கத்து விவசாயிங்க அசந்து போயிட்டாங்க” என்று ஆச்சர்யம் பொங்கச் சொன்ன செந்தமிழன், தொடர்ந்தார்.

மீன், நாட்டுக்கோழி, வாத்து மற்றும் ஆடு!
”ஒரு பயிரை மட்டுமே வெள்ளாமை செய்றதைவிட, காய்கறி, ஆடு, மீன், கோழி, வாத்துனு ஒரே இடத்துல ஒருங்கிணைந்த பண்ணையமா செய்யறப்ப கூலியாள் செலவு குறையறதோட, தினம் தினம் வருமானம் கிடைச்சிக் கிட்டே இருக்கும். இதுதான் இதுல சிறப்பு. என்னோட அஞ்சி ஏக்கர் தோட்டத்துல, பலவகையான காய்கறிகளை விதைச்சி விட்டுட்டு, அதுக்கிடையில குளம் வெட்டி மீன் வளர்க்கறேன். கூடவே… நாட்டுக் கோழி, வாத்து, ஆடு இதையெல்லாம் வளர்த்துக்கிட்டிருக்கேன்.
அரை ஏக்கர்ல குளம் வெட்டி, நாலடிக்கு தண்ணியை நிறுத்தி, எண்ணெய் கலக்காத தவுடு ஒரு மூட்டை, கடலைப் பிண்ணாக்கு இருபது கிலோ இதையெல்லாம் அதுல கொட்டினேன். கெண்டை, கட்லா, ரோகு, புல்லு கெண்டை, விரால்னு 1,500 மீன் குஞ்சுகளை விட்டேன். மாட்டுச் சாணத்தை மட்டுமே தீவனமா கொடுக்குறதால, அதுக்குனு தனியா ஏதும் செலவு கிடையாது…” என்று சொல்லும் செந்தமிழனிடம் ஒரு மாடு கூட கிடையாது. பிறகெப்படி அதைச் சாதிக்கிறார்?
இப்படித்தான்-

“மேய்ச்சல் நிலங்களுக்கு நடுவுல என்னோட தோட்டம் இருக்கறதால, வேலியைச் சுத்தி, எப்பவும் அம்பது, அறுவது நாட்டுமாடுக மேய்ஞ்சிகிட்டிருக்கும். அதுகளோட சாணத்தை சேகரிச்சி, மீனுக்குக் கொடுக்குறது மட்டுமில்லாம… ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் தயாரிக்கவும் பயன்படுத்திக்குவேன்”
-சந்தோஷம் பொங்கச் சொல்கிறார் செந்தமிழன்.
இடைத்தரகருக்கு இல்லை வேலை!
“மீன் வளர்க்க ஆரம்பிச்ச இந்த ஒரு வருஷத்துல, 170 கிலோ மீன் பிடிச்சிருக்கேன். விவசாயத்துல இடைத் தரகர்களே இருக்கக்கூடாதுங் கிறதுதான் என்னோட குறிக்கோள். அதனால நானும் என் நண்பர்களும் சேர்ந்து மக்கள்கிட்ட நேரடியாவே மீனைக் கொண்டு போய் சேர்க்கிறோம். சராசரியா ஒரு கிலோ எம்பது ரூபாய்னு விலை போச்சு. 13,600 ரூபா கிடைச்சிது.
மாட்டுச் சாணத்தோட கோழி எருவையும் மீனுக்கு கொடுக்கலாம்னு நாட்டுக்கோழிகளை வாங்கினேன். பத்து கோழிங்க இருக்கு. அதுக தன்னால மேஞ்சிட்டு வந்துடுது. அதுக போடுற முட்டைகளை நாங்க சாப்பிடுறோம். கழிவை மீனுக்கு போடுறோம். மீன் குளத்துல அலையிற தவளை, பூச்சிகளை கவனிச்சுக்கிறதுக்காக அஞ்சு வாத்துகளை வாங்கிவிட்டிருக்கேன்.
ஊருக்காக ஒரு காய்கறித் தோட்டம்!
எங்க ஊருல 500 குடும்பம் இருக்கு. மொத்த ஊருக்கும் தினசரி 200 கிலோ காய்கறி தேவைப்படுது. அதனால ஊர்ல கூட்டம் போட்டு, நம்ம ஊருக்குத் தேவையான காய்கறியை, வியாபாரிங்ககிட்ட வாங்காம, நாமளே விளைய வைப்போம்னு முடிவெடுத்தோம். முதல் ஆளா, நானே காய்கறி சாகுபடியை ஆரம்பிச்சேன். ஒண்ணரை ஏக்கர் நிலத்துல 4 அடி அகலம் 20 அடி நீளத்துல, ரெண்டடி இடைவெளியில காய்ந்து போன இலை தழையக் கொட்டி, அதுமேல மண்ணைப் போட்டு மேட்டுப் பாத்தி அமைச்சேன். அதுல அரைக் கீரை, தண்டுக் கீரை, முள்ளங்கி, வெண்டை, கொத்தவரைனு பலவிதமான காய்கறி விதைகளைப் போட்டேன். முளைச்சி நின்ன களைகளை எடுத்து நடைபாதையில போட்டு, மூடாக்கா மாத்திடறேன்.
தண்ணி பத்தாக்குறையா இருக்குறதால பத்தாயிரம் செலவு செஞ்சி, நுண்ணீர்ப் பாசனம் (மைக்ரோ ஸ்பிரிங்லர்) அமைச்சிருக்கேன். மேட்டுப் பாத்தியில காய்கறியை நட்டு, 20 நாள்ல கீரையும், 30 நாள்ல முள்ளங்கியும், 40 நாள்ல வெண்டை, கொத்தவரையும் மகசூல் எடுத்தேன். இதுல கொஞ்சமா போட்ட கீரை, முள்ளங்கி ரெண்டையும் எங்க வீட்டுக்கும் நண்பர்களோட வீட்டுக்கும் பயன்படுத்திக் கிட்டோம். வெண்டை, கொத்தவரை இதையெல்லாம் உள்ளூர்லயே வித்துட்டோம். இதன் மூலமா நாலாயிரம் ரூபா கிடைச்சது. இன்னும் காய்ப்பு முடியல. நுண்ணீர் குழாய் அமைச்சதால… வாய்க்காலெல்லாம் சும்மா கிடந்தது. அந்த இடத்தை எதுக்காக விட்டு வைக்கணும்னு… பரங்கி, சுரை, பீர்க்கன் விதைச்சிருக்கேன். அதுக இன்னும் மகசூலுக்கு வரல.
ஆடு வளர்த்தா அதிக லாபம்!
காய்கறிப் பாத்திக்கு உரம் போடுறதுக்காக ஆறு ஆடுகளை எட்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிட்டு வந்தேன். அஞ்சி மாசம் வளர்த்து மூணு ஆடுகளை 7,500 ரூபாய்க்கு வித்துட்டேன். மிச்ச மூணு ஆட்டுல ரெண்டு சினையாயிருக்கு. பண்ணையிலிருக்கற மரங்கள்ல இருந்து அகத்தி, இலை, தழைகளை வெட்டிப் போடுறதால, ஆடுகளை மேய்க்க வேண்டிய வேலையில்லாம போயிருச்சி. அதுகளோட எருவை, காய்கறிப் பாத்தியில கொட்டிடுவேன். ஒருங்கிணைந்த பண்ணையில ஆடுகளை அதிகளவுல வளர்த்தா அது பெரிய லாபமாயிருக்கும் கிறதுக்கு நான்தான் சாட்சி.
ஒரு ஏக்கருல நீலம், பெங்களூரா, வகை மாமரங்கள்… இதுகளுக்கு இடையிலயும், வேலியோரமாகவும் முருங்கை, ஒரு மூலையில நூறு கத்திரிச் செடினு எல்லாம் கலந்து கட்டி வளர்ந்து நிக்குது. கத்திரிக்கு ஜீவாமிர்தமும், அமிர்தக்கரைசலும் கொடுக்கிறேன். நூறு கிலோவுக்கும் மேல காய் பறிச்சும், தொடர்ந்து காய்ச்சிக்கிட்டிருக்கு. மானா வாரியா கேழ்வரகு, எள் இது ரெண்டையும் விதைச்சேன். இதுல கேழ்வரகு சரியா விளையல… ஆனா, எள்ளுல 250 கிலோ கிடைச்சி, அதை ஈடுகட்டிடுச்சி.
ஒருங்கிணைந்த பண்ணைங்கறதுக்கான அடிப்படை கட்டுமானத்தைதான் இப்ப நான் செஞ்சிகிட்டிருக்கேன். இடுபொருள் செலவு எதுவும் இப்ப எனக்கு இல்லை. ஆனா, பண்ணையை சரிபண்றது, கூலி ஆள் செலவுதான் அதிகமாயிருக்கு. அதுவும் போகப்போக குறைஞ்சிடும். மீன், ஆடு, காய்கறினு தனித்தனியாதான் வருமானம் கிடைச்சிக்கிட்டிருக்கு. ஒட்டுமொத்தமா இன்னமும் வருமானம் பார்க்க ஆரம்பிக்கல. அதுக்கு நாலு வருசமாவது ஆகும்” என்று நிறுத்திய செந்தமிழன்,
“இன்னிக்கு திரும்பின பக்கமெல்லாம் தலைவிரிச்சி ஆடுற கூலியாள் பிரச்னைக்கு ஒரே தீர்வு… இந்த ஒருங்கிணைந்த பண்ணையம்தான். ஒரே ஆள், பல வேலைகளைப் பார்க்க முடியும்கிறதால அதிக ஆள் தேவை இருக்காது. அதுதான் இதுல இருக்கற சூட்சமம்” என்றார் பெருமையாக.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline