அரதப்பழசான துருபிடித்த சைக்கிள், அதன் கேரியரில் ஒரு மண்வெட்டி மற்றும் கடப்பாரை, இரண்டு பக்கமும் தொங்கும் பழைய பிளாஸ்டிக் குடங்கள்…
இதுதான் ஐம்பத்தி மூன்று வயது ‘பசுமை’ நாகராஜனின் அடையாளம். தினமும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தன் சைக்கிளைக் கிளப்பிவிடுவார். நேராக போய் நிற்பது… சாலையோரங்களில்! அன்றைக்கு புதிதாக செடிகளை நடவேண்டி யிருந்தால் அதை நட்டு தண்ணீரை ஊற்றுவார். ஏற்கெனவே தான் நட்டு வைத்திருக்கும் செடிகளுக்கும் தண்ணீரை ஊற்றுவார். இப்படியே, கடந்த முப்பது வருடங்களாக நாகராஜன் வளர்த்தெடுத்திருக்கும் மரங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டும்!
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள காஞ்சிக்கோவில் கிராமத்தில், தனக்குச் சொந்தமான சின்னஞ்சிறு வீட்டிலிருக்கும் கைத்தறியில் தினமும் ஏதாவது துணியை நெய்தெடுத்தால்தான் குடும்பத்துக்கே சாப்பாடு. இத்தகைய ஏழ்மைச் சூழலிலும் சுற்றுச்சூழல் மீதான ஆர்வம்தான் அவரை ‘பசுமை’ நாகராஜன் என்றாக்கியிருக்கிறது.
”அப்ப எனக்கு பதினேழு வயசு இருக்கும். எங்க ஊர்ல இருக்கற மரத்தடியில ஒருநாள் நின்னுக்கிட்டிருந்தேன். ‘ஊரெல்லாம் காய்ஞ்சி கிடக்கே… பச்சை பசேல்னு மரம், செடியோடவும் தளதளனு பூவோடவும் இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்?’னு மின்னல் மாதிரி என்னோட மனசுக்குள்ள ஒரு நினைப்பு வந்துபோச்சி. அடுத்த நிமிஷமே, ‘ஊர் முழுக்க நாமளே மரங்களை நட்டா என்ன?’னு இன்னொரு மின்னல். அன்னிக்கே ஒரு மரக்கன்னு ரோட்டோரமா நட்டேன். அது நல்லா வளர ஆரம்பிக்கவும், அதைப் பார்த்து பார்த்து எனக்குள்ள சந்தோஷம் பொங்க ஆரம்பிச்சிடுச்சி. தொடர்ந்து மரங்களை நடறதுனு முடிவெடுத்தேன். ஒரு நாளைக்கு எவ்வளவு மரக்கன்னுகளை நட முடியுமோ, அவ்வளவு நட்டேன். விடியற்காலை அஞ்சி மணிக்கெல்லாம் சைக்கிள்ல குடத்தை கட்டிக்கிட்டு கிளம்பிடுவேன். வழியில் ஏதாவது பொதுக் குழாயில தண்ணியைப் பிடிச்சி ஒவ்வொரு மரத்துக்கா ஊத்துவேன். காலையில பத்து மணி வரைக்கும் இதை முடிச்சிட்டு, அதுக்குப் பிறகு தறியில போய் உட்காருவேன். மறுபடியும் சாயங்காலம் அஞ்சு மணிக்கு கிளம்பினா, ராத்திரி ஏழு மணிக்குதான் வீடு திரும்புவேன்.
ஆரம்பத்துல, ‘எதுக்கு இந்த வெட்டிப்பொழப்பு’னு சிலர் கேலி பேசினாங்க. நான் காதுல போட்டுக்கலை. நான் நட்ட மரங்கள், என்னை கேலி செஞ்சவங்களுக்கும் சேர்த்து இப்ப நிழலையும் மழையையும் தரும்போது மனசுக்கு இதமா இருக்கு” என்று சொல்லி, வானத்தைப் பார்த்தவர்,
”புங்கன், வாகை, வேம்பு, அரசு, ஆல், இச்சி, பூவரசன், வாதநாராயணானு ஊர்முழுக்க நான் வெச்ச மரங்கள் செழிச்சி நிக்குறத பார்த்தா அசோக சக்கரவர்த்தியே நேர்ல வந்து பாராட்டிட்டு போறமாதிரி ஒரு நெனப்புங்க.
என்னோட இந்த ஆர்வத்துக்கு தடை போடாம, தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்திக்கிட்டிருக்கிறது என்னோட வீட்டுக்காரி பிரேமா. அவளைத்தான் உண்மையிலயே பாராட்டணும்” என்று நெகிழ்ச்சியோடு முடித்தார் நாகராஜன்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழகம் முழுக்கவே கடும் வறட்சி… குடிக்கவே தண்ணீர் இல்லை என்கிற நிலையில் காஞ்சிக்கோவில் கிராமமும் திணறியது. ஆனால், நாகராஜனின் இயற்கை சேவைக்கு எந்தவித தடங்கலும் வரக்கூடாது என்பதற்காக, ‘அவர், எந்த குழாயடிக்கு குடத்தோடு வந்தாலும், உடனடியாக வழிவிட்டுவிடவேண்டும்’ என்று ஊரில் தீர்மானமே போட்டு உற்சாகப் படுத்தியிருக்கிறார்கள். அவர்கள்தான் ‘பசுமை’ நாகராஜன் என்ற பட்டத்தையும் சூட்டி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாகராஜனை வாழ்த்தி பல்வேறு சமூக நல அமைப்புகளும் பட்டங்கள் கொடுத்து கௌரவித்துள்ளன