நாம் உண்ணும் உணவு சரியானதுதானா?

நாம் உண்ணும் உணவு சரியானதுதானா ? – கண்டுபிடிக்க ஒரு எளிய வழி

 

நாம் உண்ணும் உணவு சரியானதுதானா ?

அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். .

ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டுபோகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும்.

விளையாடும்போதும் ஓடும்போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.

அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள். அதன்காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம்.

உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாதபோதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது. அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே!

அடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டுபண்ணும். அதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள்.

எண்ணைகொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டுபண்ணும்.

ஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும். காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால்தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.

இந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் அப்படித் தாகத்தை உண்டுபண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும்.

அதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப்படுவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன.

இயற்கை உணவுகள் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை

பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை.

இனியாவது இவற்றை அதிகம் எடுத்துக்கொள்வோம்.
ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம் !

-சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline