இயற்கை வேளாண்மையில் கலக்கும் பெண்கள்

2 கிலோ விதையில் 35 மூட்டை நெல்! இயற்கை வேளாண்மையில் கலக்கும் பெண்கள் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 8 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி விட்டதாகச் சொல்கிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு. முப்போகம் சாகுபடி நடந்த தஞ்சையில் வயற்காடுகள் கான்கிரீட் காடுகளாகி விட்டன. தண்ணீர் பிரச்னை, இடுபொருள் விலை உயர்வு, உற்பத்திக்குத் தகுந்த விலை இல்லாமை போன்ற காரணங்களால் விவசாயத் தொழில் நம் மண்ணில் இருந்து அந்நியமாகிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் உளுந்தூர்பேட்டையில் உள்ள சாரதா ஆசிரமத்தின் அக்ஷய கிருஷி கேந்திரா அமைப்பு, பாரம்பரிய நெல் ரகங்களை தேடியெடுத்து, செலவற்ற நம் ஆதி விவசாய நுட்பத்தைப் பயன்படுத்தி சாகுபடி செய்வதோடு, பெண்களின் கையில் விதையைக் கொடுத்து முன்மாதிரி விவசாயிகளை உருவாக்கும் நம்பிக்கை அளிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், குழியடிச்சான், குடவாழை, காட்டுப்பொன்னி, வெள்ளைக்கார், குருவிக்கார், கம்பஞ்சம்பா, காட்டுச்சம்பா, சிவப்புக் குருவிக்கார், செம்பாளை, கவுனி, சேலம் சம்மா என்று ஆயிரத்துக்கும் அதிக நெல் ரகங்கள் தமிழகத்தில் இருந்தன. இந்த ரகங்களை விளைவிக்க தண்ணீர் தேவையில்லை… ஈரம் போதும்… கடும் வறட்சியையும் தாக்குப்பிடிக்கும். வெள்ளத்திலும் தலைநிமிர்ந்து நீண்டு நிற்கும். நம் ஆதி விவசாயத்தில் உரங்களுக்கோ, பூச்சி மருந்துகளுக்கோ இடமில்லை. இலையும் தழையும் கால்நடைக் கழிவுமே இடுபொருட்களாகின. விதைக்கிற விவசாயி அறுக்க மட்டுமே வயலுக்குச் செல்வார். எதிர்பார்ப்புக்கு அதிகமாக விளைந்து தள்ளின வயற்காடுகள். விளைந்த தானியங்கள் உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் இருந்தன. பசுமைப் புரட்சி இந்த மரபைக் குலைத்து வயற்காடுகளை ரசாயனத்துக்கு அடிமையாக்கி விட்டது. புதிது புதிதாக பூச்சிகளும், அவற்றை அழிக்க பூச்சி மருந்துகளும் குவிகின்றன. இடுபொருள் வாங்கியே விவசாயி போண்டியாகும் சூழல் உருவாகிவிட்டது. நவீன விவசாயம் பாரம்பரிய விவசாயத்தை விவசாயிகளிடம் இருந்து பறித்துக் கொண்டது. உரத்தைத் தின்றுத் தின்று வயற்காடுகள் மலடாகிவிட்டன. நம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த குட்டை ரகங்கள் தண்ணீரையும் தாங்கவில்லை; வெயிலையும் தாங்கவில்லை. போதாக்குறைக்கு அண்டை மாநிலங்களின் துரோகம். காவிரி, பாலாறு, தென்பெண்ணை, பவானி, அமராவதி அனைத்தும் மறிக்கப்படுகின்றன. இச்சூழலில் அக்ஷய கிருஷி கேந்திரா நம் கைவிட்டுப்போன பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடிக் கண்டுபிடித்து, ஆக்க சக்திகளான பெண்களின் வழியாக விவசாயத்தை மீட்டுருவாக்கம் செய்து வருகிறது. 120 கிராமங்களைச் சேர்ந்த 1,500 பெண்கள் நம் பாரம்பரிய இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்திருக்கிறார்கள். “விவேகானந்த சேவா பிரதிஷ்டான் அமைப்போட ஒரு அங்கம்தான் அக்ஷய கிருஷி கேந்திரா. கடன் இல்லாத, நஞ்சு இல்லாத, நீர்வளம் குன்றாத, மண்வளம் மங்காத, நீடித்து நிலைத்த விவசாயத்துக்கு திரும்பவும் நம் விவசாயிகளை கொண்டு சேர்ப்பதுதான் அக்ஷய கிருஷி கேந்திராவின் நோக்கம். அந்தக்கால விவசாயம், சந்தைக்கு தொடர்பில்லாதது. விவசாயத்துக்குத் தேவையான எல்லாமே கிராமங்கள்ல கிடைக்கும். விளைவிக்கிற பொருள் மக்களை வளமாக்கும். தண்ணீர் ஒரு பிரச்னையாகவே இல்லை. குறைந்த அளவே தேவைப்படும். நதிகள் பொய்த்தாலும் மழைநீர் போதுமானதாக இருந்தது. உரம், பூச்சி மருந்து, ஊக்க மருந்தெல்லாம் அவசியமே இல்லை. வீட்டுக்கு வீடு மாடுகள் இருக்கும். அதன்மூலம் கிடைக்கிற பால், விவசாயிக்கு ஒரு உபரி லாபத்தைக் கொடுக்கும். மாட்டின் கழிவு பயிருக்கு உரமாகும். மேற்பகுதி வீட்டுக்கு, நடுப்பகுதி மாட்டுக்கு, கீழ்ப்பகுதி காட்டுக்கு என ஒரு பழமொழியே உண்டு. அறுத்த நெல் வீட்டுக்குப் போகும். நடுப்பகுதி வைக்கோல் உரம் தந்த மாட்டுக்கு உணவாகும். கீழ்ப்பகுதி திரும்பவும் உரமாக பூமிக்குப் போயிடும். இதுதான் நம் பாரம்பரிய விவசாயம். இன்றைக்கு விவசாயம் நலிவடைந்ததுக்கு முக்கியக் காரணம் கால்நடைகளை இழந்ததுதான். எந்த விவசாயி வீட்டிலும் மாடுகள் இல்லை. பாரம்பரிய இயற்கை விவசாயத்துக்கு திரும்பப் போக கால்நடைகள் வேண்டும். எங்கள் அமைப்பு மூலம் 120 கிராமங்களில் சுய உதவிக்குழுக்களை அமைத்தோம். மாடுகள் வாங்கிக்கொடுத்தோம். ஊருக்கு ஊர் ஒரு பால் ஸ்டோர் திறந்தோம். எல்லா பெண்களும் பாலை ஸ்டோரில் விற்பனை செய்யலாம்.

ஆரோக்யா, ருசி பால் நிறுவனங்கள் நேரடியாக ஸ்டோருக்கு வந்து பாலை கொள்முதல் செய்கிறார்கள். விவசாயத்தில் நட்டம் வரக் காரணமே இப்போ உள்ள நவீன குட்டை ரகங்கள்தான். இந்தப் பயிர்களுக்கு அதிக தண்ணீர் தேவை. வறட்சியை தாங்காது. விளைச்சலும் குறைவு. குள்ளமாக இருப்பதால் சிறு மழைக்கே மூழ்கி அழுகி விவசாயியை கடனாளி ஆக்கிவிடும். தவிர, மாட்டுக்கு வைக்கோல் கூட மிஞ்சாது. நம் பாரம்பரிய ரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவித சிறப்பு வாய்ந்தவை. காட்டுயானம் ஏழடி வளரும். எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும் கம்பீரமாக தலையாட்டும். மாப்பிள்ளைச் சம்பா எட்டடி வளரும். இந்த ரகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விவசாயிகளிடம் மட்டும்தான் உள்ளன. தமிழகம் முழுவதும் சுற்றி 85 பாரம்பரிய நெல் ரகங்களை கண்டுபிடித்தோம். இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள உழைக்கச் சித்தமாக இருக்கிற 1,500 பெண்களைத் தேர்வு செய்து ஓரிடத்தில் திரட்டினோம். பல பேர் நவீன விவசாயம் செய்து போட்ட முதலீட்டைக் கூட எடுக்க முடியாமல் விவசாயத்தை விட்டே விலகுகிற சூழலில் இருந்தார்கள்.

அவங்களுக்கு மண்புழு உரம், பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மீன் அமிலம், பீஜாமிர்தம், பழக்கரைசல் என இயற்கை விவசாயத்துக்கு அவசியமான பொருட்களை தயாரிக்க பயிற்சி கொடுத்தோம். தலா 2 கிலோ விதை நெல் கொடுத்து, அடுத்த வருஷம் 4 கிலோவாக திருப்பித்தரக் கூறினோம். நாங்களே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய நம்பிக்கையை இந்தப் பெண்கள் விதைச்சிருக்காங்க. அந்த 2 கிலோவை பயன்படுத்தி 20 மூட்டை, 25 மூட்டை நெல் அறுவடை பண்ணியிருக்காங்க. இந்த நெல்லுக்கு மிகப்பெரிய சந்தையும் உருவாகி உள்ளது… என்று முகம் மலரச் சொல்கிறார் சத்திய பிரணா. அக்ஷய கிருஷி கேந்திராவின் உதவி இயக்குனர். சிறப்பாக சாகுபடி செய்த பெண்களுக்கு பலராமர் விவசாய விருது வழங்கி ஊக்கப்படுத்தியிருக்கிறது இந்த அமைப்பு. இந்த விருதைப் பெற்றுள்ள ஈ.குரும்பூர் பகுதியைச் சேர்ந்த சித்ரா, நவீன வேளாண்மை செய்தவர்.

பொன்மணி, 36, 37 போன்ற நவீன ரகங்களைப் பயிரிட்டவர். பயிற்சியில் பங்கேற்ற இவருக்கு சீரகச்சம்பா விதை 2 கிலோ வழங்கப்பட்டது. “எங்க வீட்டுக்காரருக்கு இதுல நம்பிக்கையில்லை. ஆனா, நான் மாற்றத்துக்கு தயாரா இருந்தேன். இதே மாதிரிப் போனா விவசாயத்தை விட்டுட்டு வேற வேலைக்குப் போக வேண்டியதுதான். உழைப்புக்கேத்த கூலியும் கிடைக்கலே. விளைச்சலுக்கு விலையும் கிடைக்கலே. உரம் வாங்குன செலவைக்கூட ஈடு செய்யலே. நம்ம மூதாதைகள் உரமோ, பூச்சி மருந்தோ இல்லாமத்தான் விவசாயம் பண்ணினாங்க. 100 வயசு வரைக்கும் வாழ்ந்தாங்க. நமக்கு 20 வயசுலயே ஹார்ட் அட்டாக் வருது. நீரிழிவு வருது. எல்லாத்துக்கும் ஒரே தீர்வு நம்ம பழைய விவசாய முறையை கையில எடுக்கிறதுதான்னு முடிவுக்கு வந்துட்டேன். ஒற்றை நாற்று நடவுவிட்டு 30 சென்ட்டுக்கு நட்டேன். மாட்டுச் சாணத்தை குழியில நிரப்பி வச்சிருந்தேன். அதை அள்ளி வந்து வயலுக்குள்ள கொட்டினேன். பூச்சி பிரச்னை வரவேயில்லை. வறட்சி, மழை எதுவும் பயிரோட வளர்ச்சியைப் பாதிக்கலே. நாலு மாசத்துல 21 மூட்டை அறுவடை செஞ்சேன். வழக்கமா விளையுற நெல்லை தேடிப்போயி விற்கணும். சீரகச் சம்பாவை வீடு தேடி வந்து வாங்கிட்டுப் போனாங்க. சாதாரண நெல்லு மூட்டை 700 ரூபாய்க்கு விக்கும். சீரகச் சம்பா 1 மூட்டை 2,000த்துக்கு போச்சு. உழைப்பைத் தவிர உரமோ, பூச்சி மருந்தோ ஒத்தைப் பைசா முதலீடு இல்லை. கிடைச்சதெல்லாம் லாபம்தான்! என்று உற்சாகமாகச் சொல்கிறார்

சித்ரா. புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிந்தாமணியின் கணவர் சடையன் காலமாகிவிட்டார். “ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கு. குதிரைச்சம்பாதான் பயிரிடுவேன். ஏக்கருக்கு 20 மூட்டை கிடைக்கும். உரம், கழைக்கொல்லி, பூச்சி மருந்துன்னு நிறைய செலவாகும். கணக்குப் போட்டுப் பாத்தா வரவும் செலவும் சமமாத்தான் இருக்கும். உழைப்பு நட்டம். இவங்க சொல்றதுல முதல்ல எனக்கு நம்பிக்கை வரலே. உரம் போடாம, பூச்சிக்கொல்லி அடிக்காம பயிர் எப்படி வளரும்னு நினைச்சேன். எல்லாமே செயல்முறையா செஞ்சு காமிச்சாங்க. 2 கிலோ பாசுமதி விதை வாங்கிட்டுப் போனேன். மாட்டுச் சாணத்தை மக்க வச்சு வயல்ல போட்டு விதைச்சு விட்டேன். நாத்தைப் பிடுங்கி ஒத்தைப்பயிர் சாகுபடி முறையில நட்டேன். லேசா பூச்சி அடிச்ச மாதிரி இருந்துச்சு. வேப்பந்தழை, நுனாத்தழை, நொச்சித்தழை, கொளுஞ்சி, பூனாஞ்செடியை அரைச்சு கரைச்சு பயிர்ல தெளிச்சேன். அவ்வளவுதான்… 35 மூட்டை அறுவடை பண்ணினேன். இதை விற்க மனசு வரலே. என்னய மாதிரி விவசாயம் செஞ்சு விரக்தியடைந்த விவசாயிகளுக்கு விதையா கொடுக்கணும்னு நினைக்கிறேன்… என்கிறார் சிந்தாமணி. உமாராணி மாப்பிள்ளைச் சம்பா சாகுபடி செய்து சாதித்திருக்கிறார். “ஏழடிக்கு மேல பயிர் வளந்துச்சு. 22 மூட்டை நெல்லு கிடைச்சுச்சு. இடையில கொஞ்ச நாள் தண்ணி கட்ட முடியலே. ஆனா, பயிர்ல கொஞ்சங்கூட பச்சை மாறலே. இடையில பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் கரைசல் மட்டும் தெளிச்சேன். போர் நிறைய வைக்கோலும் கிடைச்சிருக்கு. அடுத்து கூடுதலா ஒரு ஏக்கர் நடப்போறேன்… என்கிறார் உமாராணி.

தனலட்சுமி சேலத்துச் சம்பா நட்டு அறுவடை செய்துள்ளார். “ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்கு. மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா சக்கரை நோயே வராதாம். கவுனி அரிசி சாப்பிட்டா நெடுநாள் புண்ணெல்லாம் ஆறிடுமாம். கருங்குருவை, யானைக்கால் நோய்க்கு மருந்தாம். பால்குட வாழை சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்களுக்கு தாய்ப்பால் நல்லா ஊறுமாம். சேலத்துச்சம்பா சாப்பிட்டா உடம்பு சோர்வு ஓடிப்போகுமாம். நெல்லோட வாசனையே வித்தியாசமா இருந்துச்சு. 25 மூட்டை விளைஞ்சுச்சு. மூட்டை 2,000 ரூபாய்க்கு வித்துச்சு… என்கிறார் தனலட்சுமி. பா.கிள்ளனூர் தமிழ்ச்செல்வி சீரகச்சம்பாவும்,

கு.கள்ளக்குறிச்சி குணசுந்தரி காட்டுப்பொன்னியும் நட்டுள்ளார்கள். “பொன்னிங்கிறது நம்ம மண்ணோட அடையாள ரகம். இன்னைக்கு கர்நாடக பொன்னின்னு பேரு மாறிப்போச்சு. எல்லாரும் இன்னைக்கு அதிசயப்பொன்னின்னு ஒரு ரகத்தை பயிர் பண்றாங்க. அதெல்லாம் இடையில வந்தது. லேசா தண்ணி நின்னா அழுகிப்போகும். விலையும் கிடைக்காது. காட்டுப்பொன்னி 5 அடிக்கு வளந்துச்சு. 1 கிலோ விதைச்சேன். 10 மூட்டை கிடைச்சுச்சு. உரம் போடாம விளைவிக்கிறதால அரிசியே மருந்தாயிடுது. இன்னைக்கு இருக்கிற எல்லா சிக்கலுக்கும் இந்த பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில சாகுபடி பண்றதுதான் தீர்வு… என்கிறார் தமிழ்ச்செல்வி. ஒரு காலத்தில் உலகுக்கே சோறளந்த பூமி இது. இன்று அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்கும் அளவுக்கு சிறுத்துப்போய் விட்டது. தமிழக விவசாயப் பாரம்பரியம் வெற்று சரித்திரமாகிவிடுமோ என்று அச்சமெழுந்த காலத்தில் பெண்கள் உத்வேகத்தோடு தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். விவேகானந்தர் 100 இளைஞர்களால் இந்த தேசத்தை மாற்றிவிட முடியும் என்று நம்பினார். இப்போது 1,500 பெண்கள் கிடைத்திருக்கிறார்கள். நம்பிக்கைத் துளிர்க்கிறது!

One Response

  1. பால்ராஜ்கண்ணப்பன் 10/07/2015

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline