விரால் மீன் வளர்ப்பு

விரால் மீன் வளர்ப்பு

 

விரால் மீன் வளர்ப்பு

 

ஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ர்  வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும் என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் கருத்து. இதை அடியோடு தகர்க்கும் விதத்தில், “ஒரு சென்ட் அளவுக்கு குளமும் அதில் நிரப்பும் அளவுக்கு நீரும் இருந்தாலே போதும். விரால் மீன் வளர்த்து அதிக லாபம் ஈட்ட முடியும்” என்கிறார் திருநெல்வேலியில் சேவியர் கல்லூரியில் இயங்கி வரும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் இயக்குநர் ஹனீபா. சொல்வதோடு மட்டுமல்லாமல் அதற்கான பயிற்சியையும் இலவசமாக வழங்கி வருகிறது. இந்த மையம். விரால் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதுதான் இந்த மையத்தின் முக்கிய நோக்கம். அந்த வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதி உதவியோடு ‘விரால் மீன்களைப் பாதுகாத்தல், அவற்றை இனபெருக்கம் செய்தல், விவசாயிகளுக்கு விரால் வளர்ப்புத் தொழில்நுட்பங்களை விளக்குதல் போன்றவைகளைச் செயல்படுத்தி வருகிறது இம்மையம்.

மையத்தின் இயக்குநர் ஹனீபா நம்மிடம் “பொதுவா மீன் வளர்க்கறாங்க. விரால் மீன் பக்கம் திரும்பறதேயில்ல. ஆனா, சாப்பாட்டு மீன்களில் விரால், அவுரி, குறவை, விரால் மீன் நல்லா சதையாவும் சுவையோடவும் இருக்கும். முள்ளும் கம்மியா இருக்கறதால நிறையபேர் விரும்பி சாப்பிடுவாங்க. இதுல சில மருத்துவக் குணங்களும் இருக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கும், இளம் தாய்மார்களுக்கும் இது நல்ல உணவு. ஆனா, தேவைக்குத் தகுந்த அளவுக்கு இங்க உற்பத்தி கிடையாது. பார்க்கறதுக்கு பாம்பு மாதிரி இருக்கறதால, இதை பாம்புத் தலை மீன்’னும் சொல்வாங்க. விரால் மீன்ல ஏறத்தாழ 30 ரகங்கள் இருக்கு. இந்தியாவுல பெருவாரியா இருக்குற பத்து ரகங்களுக்கும் நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கு. ஆனா, சரியான வழிகாட்டுதல் இல்லாததால தமிழ்நாட்டுல பெரியளவுல விரால் மீன் வளர்ப்புல யாரும் ஈடுபடுறதில்ல. மீன் பண்ணைகளில் விரால் மீன் குஞ்சுகளும். அதுக்கான உணவுகளும் பரவலா கிடைக்காததும் இன்னொரு காரணம். இப்போ எங்க மையத்தோட தொடர் பிரசாரத்தால திருநெல்வேலி சுற்றுப்புறத்துல நிறைய பேருக்கு விரால் மீன் பத்தின விழிப்பு உணர்வு வந்து, அதை வளர்க்க ஆரம்பிச்சுருக்காங்க” என்றவர், விரால் மீன் வளர்ப்புப் பற்றி விரிவானத் தகவல்களைத் தந்தார்.

விரால் மீன் குஞ்சு கிடைக்கும் இடம்

ஒரு விரால் மீனுக்கு எட்டுல இருந்து பத்து சதுர அடி வரைக்கும் இடம் தேவை. ஒரு ஏக்கர் அளவுக்கு குளம் எடுத்தா அதுல 5,000 மீன்கள் வரை வளர்க்கலாம். ஒரு முறைக்கு 7,000 குஞ்சு களை விட்டா அதுல தப்பிப் பிழைச்சு 5,000 மீன்கள் வரை வளந்துடும். அதேமாதிரி உணவுகள சரியான விகிதத்துல கொடுத்துப் பராமரிச்சா ஒவ்வொரு மீனும் பத்தே மாசத்துல முக்கால் கிலோ எடை வந்துடும். அந்த எடைதான் விக்கிறதுக்கு ஒவ்வொரு சரியான அளவு. ஒரு கிலோ விரால் மீன் குறைந்தபட்சம் 250 ரூபாய்க்கு விற்பனையாகும். சீசன் சமயங்கள்ல அதிகபட்சமா 350 ரூபாய் வரைக்கும் கூட விற்கும். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னான்னா இது இறந்துடுச்சுனா கொஞ்சநேரத்துலேயே சதை நைஞ்சு போயிடும். அதனால, உயிரோடதான் விற்பனைக்குக் கொண்டு போகணும். அப்பதான் வாங்குவாங்க. இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயங்கள்ல மட்டும் கவனமா இருந்தா விறுவிறுனு லாபத்தைப் பார்க்க முடியும்.

விரால் மீனை ஏக்கர் கணக்கில் குளம் வெட்டி தான் வளர்க்கணும்னு இல்லை. தோட்டத்துல சின்ன இடம் இருந்தாலேகூட போதும். வீட்டுக்குப் பின்னாடி ஒரு சென்ட் அளவுக்கு நிலம் இருந்தாகூட அதுல 50 மீன் வரை வளர்த்துடலாம். விருப்பப்படறவங்களுக்கு இலவசமா பயிற்சி கொடுக்கறதோட, மீன் குஞ்சுகளையும் உற்பத்தி பண்ணிக் கொடுக்கறதுக்கும் தயாரா இருக்கோம். அதோட விரால் மீன்களுக்கான உணவை விவசாயிகளே தயாரிச்சுக்குறதுக்கான பயிற்சியையும் கொடுக்குறோம். மீன்கள மதிப்புக் கூட்டுறதுக்கான ஆலோசனைகளையும் கொடுக்குறோம்” என்று சொன்னார். நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு, மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஆலங்குளத்தைச் சேர்ந்த இப்ராஹிம் தனது அனுபவங்களை கூறுகிறார்.
“எங்களுக்கு பேக்கரிதான் குடும்பத்தொழில். அதோட தனியா ஏதாவது தொழில் ஆர்பிக்கலாம்னு யோசித்து கொண்டு இருந்தபொழுது தான் இந்த மையம் பத்திக் கேள்விப்பட்டேன். உடனே பயிற்சி எடுத்தேன். நாங்க வாங்கிப் போட்டிருந்த காலி வீட்டு மனையில, மீன் வளர்ப்பை ஆரம்பித்தேன். ஆறு சென்ட் அளவில் ஒரு குளம்னு எடுத்து வளர்த்துக்கிட்டிருக்கேன் நல்ல லாபமானத் தொழிலாத்தான் இருக்கிற என்றவர், தன் அனுபவத்திலிருந்து வளர்ப்பு முறைகளைச் சொன்னார். அதை பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

நம்மிடம் இருக்கும் நிலத்தின் அளவுக்கும் நீரின் அளவுக்கும் ஏற்ப குளத்தின் அளவை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். விரால் மீன்கள் ஒன்றை ஒன்று சாப்பிடும் பழக்கமுள்ளவை. அதனால் ஒரே வயதுடைய மீன்களை மட்டும் ஒரு குளத்தில் வளர்க்க முடியும். வயது வித்தியாசமிருந்தால் சிறிய மீன்களை, பெரிய மீன்கள் சாப்பிட்டு விடும். அதனால் ஒரே குளமாக எடுக்காமல் நிலத்தின் அளவைப் பொறுத்து அதிக எண்ணிக்கையில் குளங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குளத்திலும் இரண்டு மாதங்கள் இடைவெளியில் தனித்தனியாக குஞ்சுகளை விடும்போது இழப்பையு்ம குறைக்க முடியும். வருடம் முழுவதும் தொடர் வருமானத்தையும் பார்க்க முடியும். மூன்றரை அடி ஆழத்துக்குக் குளம் வெட்டி, தோண்டிய மண்ணை கரையைச் சுற்றிக் கொட்டி கரையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். குளத்தின் அடியில் அரை அடி உயரத்துக்குக் களிமண்ணை (வண்டல் மண்) பரப்ப வேண்டும். பின் ஆறு சென்டுக்கு 20 கிலோ என்ற கணக்கில் தொழுவுரத்தைப் பரப்பி, நீரை நிரப்ப வேண்டும். மூன்று அடி மட்டத்துக்கு எப்போதும் குளத்தில் நீர் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

குஞ்சாக வாங்கி வந்து நாம் பத்து மாதம் வரை வளர்க்க வேண்டியிருப்பதால், நம்மிடம் ஐந்து குளங்கள் இருந்தால் இரண்டு மாத இடைவெளியில் ஒவ்வொரு குளத்திலும் மீன் குஞ்சுகளை விடலாம். குளத்தின் எண்ணிக்கையைப் பொறுத்து கால இடைவெளியை நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆறு சென்ட் அளவு குளத்துக்கு 500 குஞ்சுகளை விட வேண்டும். பிறந்து மூன்று நாட்கள் வயதுள்ள குஞ்சுகளைத் தான் கொடுப்பார்கள். குஞ்சுகளுக்கு இருபது நாள் வயது வரை நுண்ணுயிர் மிதவைகள்தான் உணவு. இவை நாம் குளத்தில் இடும் தொழுவுரத்தில் இருந்து உற்பத்தியாகி விடும். இருபது நாட்களுக்குப் பிறகு முதல் மூன்று மாதங்கள் பிரத்யேகமான தீவனம் தயாரித்துக் கொடுக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குப் பிறகு. ஆறு மாதங்கள் வரை இந்தத் தீவனத்தோடு கோழிக்கழிவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, இவை இரண்டோடு அவித்த முட்டைகளையும் கலந்து கொடுக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் மீன்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.

நோய்களும் பெரியதாக தாக்குவது கிடையாது. சில சமயம் அம்மை போன்று கொப்புளங்கள் தோன்றி, மீனின் மேல் தோல் இடையிடையே உதிர்ந்து விடும். இந்த நோய் தாக்கினால் மஞ்சளையும், வேப்பிலையையும் அரைத்து தேங்காய் எண்ணையில் குழைத்து மீனின் மேல் தடவினால் சரியாகி விடும். இவை மட்டும்தான் பராமரிப்பு. வேறு எதுவும் தேவையில்லை. பத்து மாதத்தில் மீன்கள் முக்கால் கிலோவுக்கு மேல எடை வந்த விற்பனைக்குத் தயாராகி விடும்

பத்து சென்ட் வரைக்கும் உள்ள குளம் என்றால் ஒரே ஆளே பராமரிச்சுக்கலாம். ஒரு குளத்துக்கு வேலையாள் வைத்தால் சம்பளம் கட்டுபடியாகாது. அதேமாதிரி பாதுகாப்பும் ரொம்ப முக்கியம் நாம பக்கத்துலேயே இருந்து பாதுகாக்க முடியாதுன்னா வலைகள் போட்டு பறவைகளிடமிருந்து மீன்களைக் காப்பாத்தணும். பராமரிக்குறதைப் பொறுத்துதான் லாபம் கிடைக்கும். ஒரு குளத்துல (ஆறு சென்ட்) 500 குஞ்சுகள் விட்டால் 300 மீன்கள் கண்டிப்பாக வளர்ந்துடும். நன்றாக பராமரித்தால் 450 மீன்கள் வரைகூட தேத்தி விடலாம். எப்படிப் பாத்தாலும் 200 கிலோவுல இரந்து 300 கிலோ மீன்வரைக்கும் அறுவடையாகும்

தொடர்புக்கு

நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம்,

தொலைபேசி 0462-2560670

ஹனீபா, மைய இயக்குநர்,

அலைபேசி: 94431-57415

9 Comments

  1. வீரமணி 11/06/2016
  2. Ramanathan 29/07/2016
  3. siva 17/08/2016
  4. R.veeramoorthy 04/11/2019
  5. மு பரசிவன் 04/08/2020
  6. Elu Malai 19/09/2020
  7. alagiri 19/01/2022
  8. Marithai 10/02/2022
  9. Muthukumar 17/03/2023

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline