காட்டை கட்டிக் காக்கும் கரீம்!
காட்டிற்குள் ஆதிவாசிகள் குடிசைக் கட்டி வாழ்வதை அறிவோம். ஆனால், 32 ஏக்கரில் ஒரு காட்டையே உருவாக்கி, அதில் வீடு கட்டி வாழ்கிறார் கேரளாவை சேர்ந்த அப்துல் கரீம்.
காசர்கோடு மாவட்டம், நீலேஸ்வரத்தில் இருந்து, 25 கி.மீ., துாரத்தில் பரப்பா அருகே மிகச்சிறிய ஊர் புளியங்குளம். ஆங்காங்கே சில வீடுகள்; கொஞ்சம் ஆட்கள் நடமாடுகிறார்கள். என்றாலும், இந்த ஊரின் பெயரை உலகிற்கே சொல்கிறது கரீம் உருவாக்கிய காடு.
வானுயர்ந்த மரங்கள், கிளைபரப்பி நிற்கும் செடி, கொடிகள், மருந்து மணம் வீசும் மூலிகைகள், காட்டு பழங்கள் தின்று களித்து கொஞ்சும் கிளிகள், கெஞ்சும் வானம்பாடிகள், பெயர் சொல்லத்தெரியாத பூச்செடிகளுக்குள் பூத்திருக்கும் வண்ணத்துப்பூச்சிகள், பச்சை பரப்பில் பாய்ந்து பறக்கும் மயில்கள், முந்திச் செல்லும் முயல்கள், அவ்வப்போது எட்டி பார்க்கும் பாம்பு படைகள், நடுவே குளமும், கிணறும் என ஒரு அடர்ந்த வனமாக காட்சி அளித்து, நம்மை வரவேற்கிறது கரீமின் காடு.
மனிதன் காட்டை அழிப்பது நிஜம். மனிதனால் காட்டை உருவாக்க முடியுமா? இது கனவா? இது எப்படி சாத்தியமாயிற்று?
‘வன மனிதன்'(பாரஸ்ட் மேன்) என்று அழைக்கப்படும், அப்துல் கரீம் கூறுகிறார்…நான் ஒரு வியாபாரியின் மகன்; நடுத்தர குடும்பம். கல்லுாரியில் பி.யு.சி., வரை படித்தேன். விமான டிக்கெட் முகவராக மும்பை, சென்னையில் பணிபுரிந்தேன். 1970 களில் அரபு நாடுகளுக்கு, கேரளாவில் இருந்து பிழைப்பு தேடிச் சென்றவர்கள் ஏராளம். அவர்களுக்கு விமான டிக்கெட் வாங்கித்தந்து, அனுப்பி வைப்பது என் வேலை.
நானும், பணி நிமித்தமாக அடிக்கடி துபாய் செல்வேன். அங்கேயும் கொஞ்ச நாள் பணிபுரிந்தேன். நகர வாழ்க்கை சோர்வு தந்த போது, என் ஊரில் ஒரு வீடு கட்டி, சுற்றிலும் நுாறு மரங்கள் நட்டு வாழ எண்ணினேன். இதற்காக, 1977ல், புளியங்குளத்தில், யாருக்கும் வேண்டாத தரிசு பூமியில், ஐந்து ஏக்கர் நிலம்
வாங்கினேன். அப்போது அந்த இடம், மேட்டுப் பகுதியாக, பாறைகள் சூழ்ந்து காட்சியளித்தது. அருகில் தண்ணீரும் இல்லை.
வீடு கட்டுவதற்குள், கொஞ்சம் மரங்கள் நட்டால் என்ன என்று தோன்றியது. அரேபியாவில் பாலைவன பூமியில் கூட, ஷே க்குகள் மரக்கன்று நட்டு, லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவதை பார்த்து இருக்கிறேன். அதே போன்று, நுாறு மரக்கன்று நட்டேன். ஒரு கி.மீ., துாரத்தில் இருந்து தண்ணீர் எடுத்துவந்து ஊற்றினேன். 99 கன்றுகள் கருகின. ‘சம்பாதித்த பணத்தை, மரம் நட்டு காலி செய்கிறார்’ என உறவினர்கள் கிண்டலடித்தனர். என்றாலும், ஒரு கன்று வளர்ந்து சற்று நம்பிக்கை தந்தது.
வன அலுவலகம் சென்று, மேலும்மரக்கன்றுகள் வாங்கினேன். வேலைக்கு ஆட்கள் அமர்த்தி மரங்கள் தொடர்ச்சியாக நட்டேன். கொஞ்சமாய் வளரத்தொடங்கின. வருமானத்திற்காக பயிர்கள் நடாமல், நிழல் தரும், காற்று தரும், காட்டு மரங்களையே நட்டேன். இயற்கை உரம் தான் பயன்படுத்தினேன். சில ஆண்டு கழிந்ததும், அருகில் உள்ள நிலங்களையும் வாங்கினேன். ஒரு சிறிய வீட்டை கட்டி விட்டு, மீதி பகுதி முழுவதும் மரங்கள் வளர்த்தேன். வேறு வேலைக்கு செல்லவில்லை.
பத்தாண்டு உழைப்பிலும், கவனிப்பிலும் மரங்கள் வளர்ந்தன. எங்கிருந்தோ பறவைகள் தேடி வந்து அமர்ந்தன. அவை விதைகள் கொண்டு வந்து விதைத்தன. இதனால், நான் நடாத, புதிய மரங்கள் உருவாகின. மூலிகைச் செடிகள் தானாக முளைத்தன.
பாம்பு, முயல், அணில், காட்டுக்கோழி, மயில், நாய்கள் விருந்தாளிகளாய் வந்தன. தண்ணீர் காணாமல் இருந்த தரிசு நிலம், காடு வளர்ந்ததும், தானாக தண்ணீரை வார்த்தது. பறவை, விலங்குகளுக்காக இரண்டு குளங்கள் வெட்டினேன். ஊர் மக்களுக்காக, இரண்டு கிணறுகள் தோண்டினேன். இப்போது பக்கத்து கிராமங்களும் இந்த வனத்தால் பசுமை ஆகி விட்டன; இங்கிருந்து தான், இலவசமாக துாய குடிநீர் எடுத்து செல்கிறார்கள்.
மரக்கன்று இலவசம்
பத்தாண்டுகளாக நான் புதிய மரங்களை நட வில்லை; அதனை என் பறவைகள் பார்த்துக் கொள்கின்றன. இப்போது என் வேலை காட்டை பாதுகாப்பது மட்டுமே. தானாக உருவாகும் மரக் கன்றுகளை, யார் கேட்டாலும், இலவசமாக தருகிறேன்.இப்போது சுற்றுச்சூழல் மாசு, உலகம் வெப்பமயமாதல் பற்றி பேசுகிறோம். ஆனால், 27 ஆண்டுகளுக்கு முன்பே இந்த காட்டின் முன்பு, நான், ‘பாலிதீன் பைகள் அனுமதி இல்லை’ என்று அறிவிப்பு பலகை வைத்தேன். நான் பிறந்த இந்த பூமிக்கு எதாவது செய்ய வேண்டும்; இயற்கையோடு வாழ வேண்டும் என்று நினைத்தேன். அதன் விளைவு தான் இந்த கரீம் காடு.
விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வந்து பாராட்டினார். ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள், இங்கு வந்து பாடம் படித்து சென்றிருக்கிறார்கள். காட்டை கெடுத்து விடுவார்கள் என்பதால் சுற்றுலா பயணிகளை, மது அருந்தி வருபவர்களை அனுமதிப்பது இல்லை. ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள், முன் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே இப்போது அனுமதிக்கிறேன்.
எனக்கு 71 வயதாகிறது; இது வரை நோய்கள் வந்தது இல்லை. இந்த காட்டிற்குள் தினமும் இரண்டு கி.மீ., நடந்தால் போதும், நோய்கள் நெருங்காது! என் காலத்திற்கு பிறகு, வருமானம் தராத காட்டை, அரபு நாடுகளில் பணியாற்றும், என் குழந்தைகள் பாது காப்பார்களா என்ற கவலை எனக்குண்டு,என்று கண்கலங்கினார், காட்டின் நாயகன் கரீம்!
800 மர இனங்கள்
இங்கு 800க்கும் மேற்பட்ட மர இனங்கள்; 400க்கும் மேற்பட்ட செடி இனங்கள் உள்ளன. அத்தனையும் இவருக்கு அத்துப்படி; நிறைந்த தாவரவியல் அறிஞர் போல, அவற்றின் பெயர்களை குறிப்பிடுகிறார்.’இங்கு மொத்தம் எத்தனை மரங்கள் இருக்கும்’ எனக்கேட்ட போது, ‘யாருக்கு தெரியும்; உங்களால் முடிந்தால் இங்கு தங்கி ஒவ்வொன்றாக எண்ணிப் பாருங்கள்,’ என்றார் நகைச்சுவையாக.’25 கி.மீ., துாரத்தில் உள்ள, நீலேஸ்வரத்தில் அதிகப்பட்ச வெப்ப நிலை 34 டிகிரி செல்சியஸ் என்றால், காடு வாழும் இந்த கிராமத்தில் 24 டிகிரி செல்சியஸ் தான்! மழை பொழிவும் அதிகம். இது தான் மரம் வளர்ப்பதால் கிடைக்கும் நன்மை’ என்கிறார்.
ஒவ்வொரு மரங்களோடும் பேசுகிறார்; கட்டி அணைக்கிறார்.’ஜனாதிபதி மாளிகையில் துாங்கச் சொன்னாலும், வேண்டாம் என்பேன். எனக்கு இந்த காட்டு வீடே சொர்க்கம்’ என்று கூறி விட்டு நம்மிடம் இருந்து விடை பெற்று, வீட்டை நோக்கி நடந்தார். ராஜநடையாய் அந்த முதியவர் செல்லும் போது, பறவைகள் அவற்றின் மொழியில் இவரோடு பேசுகின்றன. இரவில் பெய்த மழையில், மிச்சம் வைத்து இருந்த மழைத்துளிகளை, மரக்கிளைகள் இவர் மேல் பொழிகின்றன.இயற்கையை நேசிப்ப வருக்கு, இயற்கை தரும் பரிசு இதுவாகத்தானே இருக்கும்!
தொடர்புக்கு
kareemforest@gmail.com
நன்றி
ஜீ.வி.ரமேஷ்குமார்
படங்கள்: என்.விக்னேஷ் ,கே.மணிகண்டன்