ஸ்பைருலினா

ஸ்பைருலினா’

“எங்கட நாட்டிலிருந்து ஏதிலியர்களாக (அகதிகளாக) இந்தத் தமிழ் மண்ணுக்கு வந்தம். எங்கட மண்ணுக்குப் போகும்போது ‘ஸ்பைருலினா’ ( Spirulina ) என்னும் ஒரு அமுதசுரபியை எடுத்துச்செல்ல இருக்கறம்” என்று பெருமையுடன் சொல்கிறார்கள், சென்னை அருகே அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் ஈழத் தமிழர்கள்.
தஞ்சம் புகுந்த நாட்டில் சொந்த உழைப்பில் வாழவேண்டும் என்ற உணர்வோடு தேடலைத் துவக்கிய இந்த ஈழத் தமிழர்களுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம்… ‘ஸ்பைருலினா’!

10414898_842125645807825_534176188727230476_n

ஒருவகை சுருள் பாசித் தாவரமான இதை சத்துணவாக, அழகு சாதனப் பொருளாக பல்வேறு வகையில் உலகம் முழுக்கவே பயன்படுத்து கிறார்கள். இந்தப் பாசி வளர்ப்பு, மேலை நாடு களில் பிரபலம். ஆனால், தமிழகத்தைப் பொறுத்த மட்டில் அவ்வளவாக இன்னும் பிரபலம் அடையாத அபூர்வம் இது!
‘ஈழ ஏதிலியர் மறு வாழ்வுக் கழகம்’ என்ற அமைப்பின் மூலம் ஈழத் தமிழர்கள் இந்தப் பாசி வளர்ப்பைச் செய்து வருகிறார்கள்.
சென்னையிலிருந்து செல்லும் பழைய மாமல்லபுரம் சாலையில் சிறுசேரி தொழில்நுட்பப் பூங்காவுக்கு சற்று முன்னதாக இருக்கும் நத்தம் கிராமத்தில்தான் அமைந்திருக்கிறது இந்த அகதிகள் முகாம். மறுவாழ்வு தொண்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரத்தின ராஜசிங்கம் ‘ஸ்பைருலினா’ பற்றி ஆர்வம் பொங்கப் பேசுகிறார்.

“எங்கள் முகாமில் இருந்த குழந்தைகளும், வயதுக்கு வந்த பெண்களும் ஊட்டச்சத்து குறைவால் மிகவும் மெலிந்து இருந்த காரணத்தால் ‘ஸ்பைருலினா’ சாப்பிடச் சொன்னார் ஒரு டாக்டர். ஸ்பைருலினா மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பாசி. தினமும் காலையில் எழுந்தவுடன் ஸ்பைருலினா பவுடரை இரண்டு கிராம் எடுத்து ஒரு தம்ளர் நீரில் சர்க்கரை, எலுமிச்சம்பழம் சேர்த்துக் குடித்தால் போதும்… உடல் விரைவில் பலமாகும். ஆனால், இதன் விலை மிகவும் அதிகம். அதனால் காசு கொடுத்து வாங்கிச் சாப்பிட யோசித்துக்கொண்டு இருந்தோம். அப்போதுதான் மதுரையில் உள்ள ‘ஆன்டெனா டிரஸ்ட்’ என்ற அமைப்பு, இந்த பாசி வளர்ப்புப் பயிற்சி தருவதாக அறிந்தோம்.
நானும் எங்களது அமைப்பைச் சேர்ந்த எட்டு பேரும் அங்கே 15 நாள் பயிற்சி எடுத்துக் கொண்டோம். பயிற்சியை முடித்த கையோடு பாசி வளர்ப்பில் இறங்கினோம். பயிற்சி எடுத்த இடத்திலிருந்து தாய்ப்பாசி வாங்கி வந்து வளர்க்க ஆரம்பித்த நாங்கள், இப்போது 18 தொட்டிகளில் வளர்க்கின்றோம். தினமும் 324 சதுர மீட்டரில் இரண்டரை கிலோ உலர்ந்த பாசியை அறுவடை செய்கிறோம். மாதம் சராசரியாக 60 கிலோ கிடைக்கிறது. ஒரு கிலோ பாசி ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் வருமானம் வருகிறது. ஆறு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சம்பளம், பாசிக்கான இடுபொருட்கள் செலவு எல்லாம் சேர்த்து 30 ஆயிரம் போக, 30 ஆயிரம் ரூபாய் மாதம் லாபம் வருகிறது.
தமிழ்நாட்டில் இரண்டு, மூன்று இடங்களில் மட்டுமே இந்த பாசி வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் ஸ்பைருலினா, வெளிநாடுகளுக்குதான் ஏற்றுமதியாகிறது. நாடுவிட்டு நாடுவந்து நாங்கள் கற்றுக் கொண்ட இந்தத் தொழில்நுட்பத்தைத் தமிழக விவசாயிகளுக்கும், சுய உதவிக் குழு பெண்களுக்கும் கற்றுத்தர தயாராக இருக்கிறோம்” என்கிறார் ரத்தின ராஜ சிங்கம் (செல்: 98840-00413).
காசை அள்ளும் கல்வியைக் கற்றுக்கொடுக்கக் காத்திருக்கிறார்கள். நீங்கள் தயாரா, கற்றுக் கொள்ள?!
வளர்ப்பு முறை…
ஸ்பைருலினா வளர்க்க மிதமான வெயில் (28 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ்) தேவை. அது நம் தமிழகத்துக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. வளர்க்கப்படும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் இதனை வளர்க்கக் கூடாது. பிளாஸ்டிக் மற்றும் சிமென்ட் தொட் டிகளில் வளர்க்கலாம். தொட்டியின் நீளம் 10 அடி. அகலம் 5 அடி. உயரம் 1.5 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். அதிக வெப்பமான காலங் களில் 23 செ.மீ. வரை யிலும், மழைக்காலங் களில் 20 செ.மீ. வரை யிலும் தண்ணீர் இருப் பது நல்லது. தொட்டி யின் நீள, அகலங்களை நமது தேவைக்கேற்ப கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.

பாசி வளர்வதற்கான ஊடகம் ஒரு லிட்டர் தயாரிப்பதற்கு, சோடியம் பைகார்பனேட் 8 கிராம், சோடியம் குளோரைடு 5 கிராம், யூரியா 0.2 கிராம், பொட்டாசியம் சல்பேட் 0.5 கிராம், மெக்னீசியம் சல்பேட் 0.16 கிராம், பாஸ்பரிக் அமிலம் 0.052 மில்லி, பெரஸ் சல்பேட் 0.05 மில்லி சேர்க்க வேண்டும். இதில் ஒரு கிராம் தாய்ப்பாசியைச் சேர்க்க வேண்டும். ஆயிரம் லிட்டர் ஊடகம் என்றால் ஒரு கிலோ தாய்ப்பாசி சேர்க்க வேண்டும். தினமும் பாசி அறுவடை செய்த பின்பு இந்த அளவு கலவையைச் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். தொட்டியின் மீது பாலீத்தின் கூரை அமைக்க வேண்டும். இதனால் தூசி, பனிநீர், புழு, பூச்சிகள் வளர்ச்சி ஊடகத்தில் விழாதவாறு காக்கலாம். வளர்ச்சி ஊடகத்தில் அடிக்கடி நீர் மாற்றத் தேவையில்லை. 3 மாதத்துக்கு ஒருமுறை தொட்டியைச் சுத்தம் செய்து புதிதாக தாய்ப்பாசி விட வேண்டும். இப்படி செய்வதால் பாசி வேகமாக வளரும். பாசியை இயற்கை முறையிலும் வளர்க்க முடியும். இதற்கான ஆராய்ச்சி ஒரு பக்கம் நடந்து வருகிறது.
தினமும் பகல் வேளையில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கு ஒருமுறை ஊடகத்தைக் கலக்கிவிட வேண்டும். இப்படிச் செய்வதால் தொட்டி முழுவதும் ஒரே சீரான வெப்பம் இருக்கும். பாசி வளர்க்கும் நீர் நன்னீராக இருந்தால் நல்லது. தினமும் வெயில் ஏறுவதற்குள் பாசியினை அறுவடை செய்துவிட வேண்டும். நம் கையில் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் இருக்கும். அவை பாசி வளர்ப்பைப் பாதிக்கும் என்பதால் கையால் நீரைத் தொடக்கூடாது.
அறுவடை எப்படி?
பொதுவாக காலை 6 மணியிலிருந்து 8 மணிக்குள் பாசியினை தினமும் அறுவடை செய்ய வேண்டும். வெயில் ஏற ஏற, பாசி அறுவடை அளவு குறையும். தொட்டியிலிருக்கும் பாசியை அள்ளி, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருக்கும் இரட்டைச் சல்லடை மீது ஊற்ற வேண்டும். மேற்புறம் உள்ள சல்லடையில் தூசிகள் படிந்துவிடும். அடிப்புற சல்லடையில் பச்சை நிறப் பாசி, புதினா சட்னி போல தேங்கியிருக்கும். இதை ஒரு மெல்லிய வலையில் வைத்து 50 கிலோ எடையுள்ள கல்லால் ஒரு நிமிடம் அழுத்தினால் பாசியில் உள்ள உப்பு நீர் வலை வழியாக வெளியேறிவிடும். பின்பு இடியாப்பம் பிழியும் குழலில் போட்டுப் பிழிந்து, வெயிலில் ஒருநாள் காயவைக்க வேண்டும். பிறகு, மாவு அரைக்கும் இயந்திரத்தில் போட்டுத் தூள் செய்து பாக்கெட்டில் அடைத் தால்… ‘ஸ்பைருலினா’ தயார்!
கதை கேளு… கதை கேளு!’
‘மனுஷன் பொறக்கறதுக்கு சுமார் 350 கோடி வருஷத்துக்கு முன்னாடியே தோன்றின ஒரு வகையான நுண்ணுயிரிதான் நான் (ஸ்பைருலினா). 1965-ம் வருஷம் ஆப்பிரிக்காவுல கடுமையான பஞ்சம். மக்கள் ரொம்ப வறுமையில வாடினாங்க. அப்ப பெல்ஜியத்திலிருந்து ஓர் ஆய்வுக்குழு ஆப்பிரிக்காவுக்கு வந்து. சார்டு என்ற பகுதியில வசிச்ச மக்கள் மட்டும் பஞ்சத்தால பாதிப் படையாம ரொம்ப ஆரோக்கியமாவே இருந்ததைக்கண்டு ஆச்சர்யப்பட்டுப்போச்சி அந்தக் குழு. அதுக்கு காரணமே நான்தான். அங்க இருக்கற ஏரியில வளர்ந்து கெடக்கற என்னை எடுத்து, அவங்க சாப்பிட்டுக்கிட்டிருந்ததுதான் அவங்களோட ஆரோக்கியத்துக்கு காரணமே. கிட்டத் தட்ட அவங்களோட சாப்பாட்டுல 70 சதவிகிதம் நான்தான். இதை தெரிஞ்சிகிட்ட பெல்ஜியம் குழுதான் வெளி உலகுக்கு என்னை அறிமுகப்படுத்திச்சி! இதுதான் என்னோட கதை’

Source :Facebook

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline