வீட்டு மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்தி

வீட்டு மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்தி

solar

 

வீட்டு மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திச் சாதனங்களைப்பொருத்தி மின் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க ரூ. 20,000 முதலீட்டு மானியம் வழங்கப்படும்.அதில், சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மூன்றாண்டுகளில் 3,000 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திச் சாதனங்கள் மற்றும் நிலையங்கள் நிறுவப்பட வேண்டும் .

சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் வீட்டு மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திச் சாதனங்களைப் பொருத்தி மின் உற்பத்தி செய்வதன் மூலம் அதிக அளவில் மின்சார உற்பத்தி இலக்கை அடைய முடியும் .
இதனை ஊக்குவித்து பெரும்பாலான வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் முன் வந்து இச்சாதனங்களைப் பொருத்தும் வகையில் அத்தகைய வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வழங்கி வரும் 30 சதவீத மானியத்துடன் கூடுதலாக தமிழக அரசின் சார்பில் உற்பத்திச் சார்ந்த ஊக்கத் தொகையும் வழங்க ஆணை.

இதன்படி, இந்த வீட்டுக் கூரை மின் உற்பத்திச் சாதனங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றிற்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இரண்டு ரூபாயும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு ரூபாயும், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு 50 பைசாவும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
தற்போது தமிழக அரசின் சார்பில் முதலீட்டு மானியம் வழங்குமாறு கோரிக்கைகள் வந்துள்ளதை ஏற்று, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள உற்பத்திச் சார்ந்த ஊக்கத் தொகை அல்லது கிலோவாட் ஒன்றிற்கு 20,000 ரூபாய் முதலீட்டு மானியம் மேற்கூரையில் சாதனங்களைப் பொருத்தி மின் உற்பத்தி செய்யும் வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் முதல்கட்டமாக 10,000 வீட்டு மின் நுகர்வோர் பயன் பெறுவர்.

தமிழ்நாடு மின் வாரியத்தில் ஏறத்தாழ 2.2 லட்சம் மின் மாற்றிகள் பொருத்தப்பட்டு நுகர்வோர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 10 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மின் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரம் வழங்கவும், புதிய பயனீட்டாளர்களுக்கு தாமதமின்றி மின் இணைப்புகள் வழங்கிடவும், பழுதான மின்மாற்றிகளை மாற்றிடவும் புதிய மின் மாற்றிகளை கொள்முதல் செய்தல் மிகவும் அவசியமாகிறது.

இதுவரை ஆண்டொன்றிற்கு சராசரியாக 10,000 மின் மாற்றிகளுக்கும் குறைவாகவே வாங்கப்பட்டு வந்துள்ளது. மின் மாற்றிகள் பற்றாக்குறை காரணமாக மின் நுகர்வோர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாவகிறார்கள். இதனைக் களையும் பொருட்டு இதுவரை இல்லாத அளவாக 500 கோடி ரூபாய் செலவில் 20,000 புதிய மின் மாற்றிகள் கொள்முதல் செய்யப்படும்.

மின்சாரத்திற்கானத் தேவை அதிகரித்து வரும் நிலையில் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரத்தை உறுதி செய்யும் பொருட்டு புதிய உயர்வழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் வழித் தடங்கள் அமைக்க வேண்டியது அவசியமாகும். இந்த ஆண்டு 850 கோடி ரூபாய் செலவில் 15,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய உயர்வழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் வழித் தடங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline