நம் உடம்பில் சேரும் சத்துப் பொருள்களை மொத்தம் ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம்.
1. கார்போஹைட்ரேட் (மாவுப்பொருள்)
2. ப்ரோட்டீன் (புரதம்)
3. ஃபேட் (கொழுப்பு)
4. வைட்டமின் (உயிர்ச்சத்து)
5. மினரல் (கனிமச்சத்து)
இதில் கடைசி இரண்டு வகைகளான வைட்டமின்களையும் மினரல்களையும் அளவு குறைவாக எடுக்கிறோம். குறைவாக என்றால் மில்லி கிராம் அல்லது மைக்ரோ கிராம் கணக்கில். அதனால் இந்த இரண்டுக்கும் மைக்ரோ நியூட்ரியெண்ட்ஸ் என்று பெயர்.
முதல் மூன்று வகைகளான கார்போ ஹைட்ரேட்டையும் (இனி இவற்றை கார்ப் என்று சுருக்கமாக சொல்லலாம்), ப்ரோட்டீனையும், ஃபேட்டையும் அளவு அதிகமாக எடுக்கிறோம். அதிகம் என்றால் கிராம் கணக்கில். அதனால் இந்த மூன்றுக்கும் மேக்ரோ நியூட்ரியெண்ட்ஸ் என்று பெயர். சுருக்கமாக மேக்ரோ. இந்த பதிவில் இனி இந்த கார்ப், ப்ரோட்டீன், ஃபேட் என்று சொல்லப்படுகிற மேக்ரோ பற்றி மட்டுமே பேசப்போகிறோம்.
பேலியோவிற்குள் நுழைவதற்கு முன் நாம் என்ன சாப்பிட்டோம்? இட்லி, தோசை, வடை, பொங்கல், இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டோ, கோதுமை, சோறு, பருப்பு, பயறு, பட்டாணி, சுண்டல், இவை எல்லாமே கார்ப் அதிகமாக இருக்கும் உணவுகள். இதையே நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம். மேலும், ஓடியாடி அலைந்து வேலை செய்யும் வாய்ப்பும் நமக்கு குறைந்து கொண்டே வந்தது. அதனால, இவற்றிலிருந்து உண்டாகும் க்ளூகோஸை, “எனர்ஜியாக எடுத்துக்கொள்” என்று கட்டளை இடும் இன்சுலினை கணையம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்தது. அப்படி அதிகமாக சுரந்த இன்சுலினுக்கு நமது செல்கள் பழக்கட்டுப்போனது. அதனால் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் அதிகமானது. அதனால் ஒரு உணவுக்கும் இன்னொரு உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் இயற்கையாகவே நடக்கும் ஃபேட் பர்னிங் தடைப்பட்டுப் போனது. அதனால் உடம்பு பருமனாக ஆக ஆரம்பித்தது. சிலருக்கு சர்க்கரை அளவுகள் கூடிப்போனது. பல பிரச்சினைகள் உருவாக ஆரம்பித்தது.
இதையெல்லாம் மாற்ற வேண்டும், அதுவும் எந்த ஒரு மருந்து மாத்திரை இல்லாமலும் இயற்கையாகவே சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த குழுமத்தில் இணைந்திருக்கிறோம்.
சரி. அப்படி மாறுவதற்கு முதல் படி கார்ப் அளவைக் குறைத்து உண்ண வேண்டும். எவ்வளவு குறைக்க வேண்டும். ஒரு நாளுக்கு உட்கொள்ளும் கார்பின் மொத்த அளவு 45 கிராமுக்கும் குறைவாக இருக்க வேண்டும். இதனால் என்ன நடக்கும்? இன்சுலினின் தேவை குறையும். அதனால் இன்சுலின் சுரக்கும் அளவு குறையும். நம் உடம்பில் இன்சுலின் கம்மியாக இருந்தால், இன்சுலினுக்கு நேர் எதிராக செயல்படும் க்ளூகோகான் என்னும் ஹார்மோன் சுரக்கும். லிவரிலும் மஸில்ஸிலும் எக்ஸ்ட்ராவாக மிகக் குறைவான அளவே (ஓரிரண்டு நாட்களின் தேவைகளுக்கு மட்டுமே) க்ளைகோஜன் என்னும் வடிவத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் க்ளூகோஸ் கரைந்து உடம்பிற்கு ஆற்றல் தரும். அதன் பின் கொழுப்பைக் கரைக்கக்கூடிய என்ஜைம்கள் உருவாகும். நம்முடைய உடம்பிலிருக்கும் கொழுப்பு அப்புறம் தான் கரைய ஆரம்பிக்கும்.
ஆக, நமது ஒரு நாள் உணவில் கார்ப் என்பது 45 கிராமுக்கு மிகக்கூடாது என்பது முதல் விதி.
எல்லோரும் ஒரு நாளில் மூன்று உணவாக எடுத்து பழகி விட்டோம். இந்த லைஃப் ஸ்டைலில் மூன்று மாதங்கள் இருந்தாலே பலரும் இரு நேரம் மட்டுமே உணவு உண்கின்றனர். அதைப்பற்றி அப்புறம் பேசலாம். இந்த 45 கிராமை மூன்று வேளை உணவு என்று சமமாக பிரித்தால் 15 கிராம் என்று வருகிறது. ஆக, ஒரு வேளை உணவு 15 கிராமுக்கு மிகக்கூடாது என்பது முதல் விதியின் துணை விதி.
அப்படி 45 கிராமுக்குள் என்னென்ன கார்ப் உண்ணலாம், பேலியோவில் அங்கீகரிக்கப்பட்ட கார்ப் எவை எவை, அவற்றிலெல்லாம் எத்தனை கிராம் கார்ப் இருக்கின்றன என்பதைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.