மாசில்லாத காற்றை சுவாசிக்க செண்பக மரங்கள்

செண்பக மரங்கள்

 

செண்பக மரங்கள்

மாசில்லாத காற்றை சுவாசிக்க செண்பக மரங்கள்

சுற்றுப்புறத்துக்கு சுகம் தரும் செண்பக மரம் நட்டு வளர்க்க வேண்டும் என்று வனத்துறை யோசனை தெரிவித்துள்ளது. அழியும் நிலையில் உள்ள காட்டு செண்பக மரங்களை இனப்பெருக்கம் செய்யும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது.

மக்கள் தொகை, வீடு, வாகனங்களின் எண்ணிக்கையால், சுற்றுப்புறச் சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்க உதவும் மரங்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில் கூட, சமீபகாலமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க பொதுநல அமைப்புகள் குரல் கொடுத்து வரும் நிலையில், வனத்துறையும் தனது பங்களிப்பாக, செண்பக மரங்களை நட்டு வளர்க்க யோசனை தெரிவித்துள்ளது.

“மக்னோலயேசி’ என்ற தாவர இயல் குடும்பத்தில் “மைக்கேலியா சம்பகா’ என்ற அறிவியல் பெயரைக் கொண்ட சண்பகமரம், செண்பக மரம் என அழைக்கப்படுகிறது. இதன் சிறப்புகளை தென்னிந்திய தாவரவியல் வல்லுனர்கள் மேத்யூ, ஜான் பிரிட்டோ விரிவாக விளக்கியுள்ளனர்.
செண்பக மரத்தின் இலைகள் நீண்டு வளர்ந்து, மேற்புறம் பசுமையாகவும், பின்புறம் உரோமங்கள் மண்டிக் கிடப்பதாலும், காற்றில் உள்ள தூசுகளை அகற்றும் தன்மையை கொண்டுள்ளது. மஞ்சள் நிறமாக உள்ள மலர்களின் வாசனை காற்றோடு கலந்து, சுற்றுப்புறத்தை மிக ரம்மியமாக வைத்திருக்க உதவுகிறது.

செண்பக பூக்களில் இருந்து கிடைக்கும் கெட்டியான பசை, வேதியியல் பொருட்களால் கரைத்து எடுக்கப்பட்டு, பலவித வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. விதை, வேர், பட்டையில் பல வேதியியல் எண்ணெய், அல்கலாய்டுகள், ஒலியிக் சினாயிக் மற்றும் பால்மிடிக் உட்பட பொருட்கள் உள்ளன. மரங்கள் மிளிரும் தன்மையை கொண்டுள்ளன.
மரங்கள் எடை குறைவாகவும், உறுதித் தன்மை அதிகமாகவும் உள்ளதால், கடந்த காலங்களில் விமானக் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது; வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. கட்டைகளைக் காய்ச்சி வடிப்பதன் மூலமாக ஒரு வகையான கற்பூரமும் தயாரிக்கப்படுகிறது. மேலும் இது கைவினைப்பொருட்கள் தயாரிப்பிலும் முக்கியப் பங்காற்றுகிறது. கடல் மட்டத்துக்கு மேல் 1,000 அடி வரையுள்ள சோலைக் காடுகளில் இயற்கையாகவே இம்மரங்கள் வளரும்; எளிதாக இனப்பெருக்கம் செய்யவும் முடியும்.

சாலையின் இருபுறம், வீட்டு முகப்பு, கோவில், குளக்கரை மற்றும் பொது இடங்களில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன; மலை மாவட்டமான நீலகிரியில், கூடுதலாக நடவு செய்தால், சுற்றுப்புறச் சூழல் ரம்மியமாக இருக்கும்.
இதன் மற்றொரு வகையான “மைக்கோலியா நீலகிரிக்கா’ என்ற பெயரைக் கொண்ட வெள்ளை வண்ண மலர்களை கொண்ட காட்டு  செண்பகம் மரங்கள், அழிவின் விளிம்பில் உள்ளதால் நடவு செய்ய வேண்டும்.

4 Comments

  1. Gopalakrishnan M 21/02/2020
  2. K.Sundaravadivel 25/02/2020
  3. Madhu 14/05/2020
  4. Aarthi Kumar 29/03/2022

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline