பாரம்பரிய விவசாயம்

முன்னல்லாம், வீட்டுத் தேவைக்கு, அரிசி வேணும்னா… மூணு மாசத்துக்கு ஒரு முறை, நெல்லை அரைச்சி, அரிசியாக்கிடுவோம். ஆனா, இப்போல்லாம் ஒரு வருஷத்துக்குத் தேவையான அரிசிய, தயார் பண்ணி வைக்கிறோம். மூணு மாசத்துல, அரிசியாக்கி சாப்பிட்டா, சாப்பாடு சுவையாவும், மணமாவும் இருக்கும். நாள் கூடகூட அரிசியோட வாசனை மறைஞ்சுடும். பட்டணத்துல இருக்கறவங்களுக்கு… சோத்துக்கும் மணம் இருக்குங்கிற விஷயம் தெரியுமாங்கிறது சந்தேகம்தான்.

இதுகூட பரவாயில்ல, கடையில இருந்து அரிசியை வாங்கிட்டுப் போய், காற்றோட்டம் இல்லாமா அடைச்சி வைச்சிடறாங்க. இதனால, வண்டு புடிச்சி, மொத்த அரிசியும் வீணா போயிடுது. சாப்பாட்டுக்குப் பயன்படுத்துற அரிசியைக் காற்றோட்டமா இருக்கிற மாதிரி சேமிச்சி வைங்க. இல்லனா, மொத்த அரிசியும் வண்டு புடிச்சி, கெட்டுப்போயிடும்.

வீட்டுத் தோட்டத்துல… நத்தைங்க நடமாடுறத கண்டா சிலருக்கு அலர்ஜியா இருக்கும். அதுவும் பொம்பளைங்க, நத்தையைப் பார்த்தா, செடிங்க பக்கமே போக மாட்டாங்க. நத்தை நடமாட்டத்தைத் தடுக்க, முட்டையோட ஓடுங்களை செடிகளுக்குப் போட்டா, நத்தைங்க அந்தப் பக்கம் வராது. முட்டை ஓடும் மட்கி, உரமாகி, செடிங்களும் செழிப்பா இருக்கும்.

பசு மாடுங்க… கன்னு போட்டவுடனே, அதை கண்ணும் கருத்துமா பார்த்துக்கணும். ஏன்னா, ‘இன்றைய கன்று நாளைய பசு’னு சொல்லுவாங்க. அந்த வகையில, கன்னுக் குட்டிய கவனமா வளர்க்கணும். கன்னுக்குட்டிங்க… ஆறு மாசம் வரையிலும் பால் குடிக்கும். தினமும் பால் குடிச்சவுடனே, சிலசமயம் சின்னப்புள்ளைங்க சட்டைய மெல்லுற மாதிரி, கன்னுக்குட்டிங்க தாய்ப் பசுவோட உடம்பை நாக்கால நக்கிட்டு இருக்கும். அதோட தோல் மேல படிஞ்சுகிடக்குற உப்புச் சுவைக்காகத்தான் இப்படி செய்யுது.  நாக்கால் நக்கும்போது… மாட்டுத்தோல்ல இருக்கிற முடிங்க… கன்னுக்குட்டி வயித்துக்குள்ள போயிடும். ஒரு கட்டத்துல இந்த முடிங்க வயித்துக்குள்ள உருண்டையா சுத்திக்கிட்டு, கன்னுக்குட்டியோட உசுருக்கே உலை வெச்சுடும். கன்னுக்குட்டியோட நாக்குல உப்பைத் தடவிவிட்டா… மாட்டை நக்கமா இருக்கும்.

பழத்தோட்டங்கள்ல… அணில், குரங்கு தொல்லை அதிகமா இருக்கும். இந்தப் பிரச்னைக்கு சுலபமான தீர்வு இருக்கு. சிங்கப்பூர் செர்ரி செடியை, பழத்தோட்டத்துல நட்டா, அணிலு, குரங்குங்க… முதல்ல இந்தப் பழத்தைத்தான் சாப்பிடும். இதனால, தோட்டத்துல இருக்கற பழங்களுக்கு அதிக சேதம் வராது. அதுமட்டுமில்லீங்க, இந்த சிங்கப்பூர் செர்ரி பழத்தைத் திங்க, விதவிதமான பறவைங்க தோட்டத்துக்கு வரும். அந்தப் பறவைங்களோட எச்சம் மூலமா, சந்தனம்…. மாதிரியான அரிய வகை செடிங்க நம்ம தோட்டத்துல வளரும்!

‘இவரு பெரிய இவரு…, கேழ்வரக, கிழிச்சி நட்டுப்புடுவாரு’னு ஊருகாட்டுப் பக்கம் சொல்வாங்க. ஏன்னா, மத்தபயிருங்க மாதிரி, கேழ்வரகு நாத்து தனித்தனியா இருக்காது. குத்துக்குத்தா இருக்கும். நாத்து ஒடிஞ்சுப் போகாம, பக்குவமா கிழிச்சி நடவு செய்யணும். கேழ்வரகைக் கிழிச்சி நடலைன்னா… பயிரு பக்குவமா வளராது. அதனாலதான், அப்படி சொல்லி வெச்சுருக்காங்க.

‘சோளம் விதைக்கையில… சொல்லிப்புட்டு விதை’னு தெம்மாங்குப் பாட்டு கூட உண்டு. அதென்ன… சோளம் விதைக்கும்போது மட்டும் சொல்லிப்புட்டு விதைக்கச் சொல்றாங்கனு தோணும். இளஞ்சோளப் பயிருங்கள்ல விஷத்தன்மை இருக்கும். அதை, ஊர்ல இருக்கற ஆடு, மாடுங்க கடிச்சா… அவ்வளவுதான். சொக்கிப்போய் சுருண்டு விழுந்துடும். கொஞ்சம் கவனிக்காம வுட்டா, வாயில்லாத அந்த ஜீவன்களோட உசுரைக் காப்பாத்தறது ரொம்பவே கஷ்டமுங்க. அதனாலதான், சோளம் விதைச்சா, ஊரு முழுக்கச் சொல்லி வைக்க சொன்னாங்க.

விதைப்பு, நடவுனு விவசாய வேலை எது தொடங்கினாலும், அதை வடக்குப் பக்கமா சனி (ஈசான்ய) மூலையில இருந்துதான் தொடங்குவோம். அதுவும், தேங்கா, பழம் வெச்சு சாமி கும்பிட்டுத்தான், வேலைய ஆரம்பிக்கிறது பழக்கம். இதுக்குக் காரணம் என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு, வடகிழக்குப் பருவ மழைதான் ஆதாரம். அதனால, அந்த மழை வர்ற திசைய வணங்கற விதமாத்தான், நாம சனி மூலையில இருந்து வேலையைத் தொடங்குறோம்.

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.