பதினெண் சித்தர் மூலிகைப் பொழில்

பதினெண் சித்தர் மூலிகைப் பொழில்

சங்ககால மூலிகைகளுக்கு பாழடைந்து கிடந்த இந்த இடத்தை சீரமைப்பதற்காக பலஆண்டுகளாக அலைந்து திரிந்தேன். ஒரு சமயத்தில், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதி கிடைத்தது. பின்பு, பொதிகைமலை, கொல்லிமலை, ஜவ்வாதுமலை, ஏற்காடு மலை மற்றும் வயல் வெளிகளில் 20 ஆண்டுகளாக தேடித்தேடி சேகரித்த மூலிகைக் கன்றுகளைக் கொண்டு, சுமார் 3 வருட உழைப்பால் இம்மூலிகைத் தோட்டத்தை உருவாக்கி முடித்தேன்.

மூலிகை யானை நெருஞ்சி

 

தேவதாரு, கற்பூரம், அகில், நீர்க்கடம்பு என 300 க்கும் மேற்பட்ட மரங்களும், சீந்தில், கோவை சிறுகுறிஞ்சான், பெருங்குறிஞ்சான்,பிரண்டை என 100க்கும் மேற்பட்ட கொடிகளும், நீலக்கொடுவேலி, செம்பரத்தை வெள்ளை என 300 க்கும் மேற்பட்ட புதர்தாவரங்களும், மஞ்சள்கரிசாலை, கொட்டைகரந்தை, யானைநெருஞ்சில் என 250 க்கும் மேற்பட்ட ஒருபருவத் தாவரங்களும் கருமஞ்சள், கஸ்தூரிமஞ்சள் என 50க்கும் மேற்பட்ட கிழங்கு வகைகளும், பதினெண் சித்தர் மூலிகைப் பொழிலில் உள்ளன. இப்போது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் புளி, அரபுநாட்டை பிறப்பிடமாக கொண்டது. நம் மண்ணிற்குரிய குடம்புளி,பிணர்புளி, ராஜபுளி, புளிச்சங்காய் போன்ற புளிவகை மரங்களை இங்கு வளர்த்து வருகிறேன். இதற்கென தானியங்கி நீர்பாய்ச்சும் கருவிகளும் வைத்துள்ளேன். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்.

இன்றைக்கு தமிழ்மொழி பல வழிகளில் அழிந்து வருகிறது. ஆனால் மூலிகைகளின் பெயர்களில் தான், எந்த மொழிக்கலப்பும் இல்லாமல் தமிழ்வாழ்ந்து வருகிறது. ‘வெயில் நுழைவறியா குயில் நுழைபொதும்பர்’ என்ற சங்கக்காலப்பாடலின் படி, வெயில் நுழைய முடியாத அளவிற்கு பசுமையான அடர்த்தியை இந்த இடத்தில் உருவாக்குவதுதான் என்கனவு. தற்போது, 1000க்கும் மேற்பட்டமரங்கள், தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன.

இப்பொழில் மூலம் சுத்தமான நறுமணக் காற்று கிடைக்கிறது. அரியவகை பறவையினங்களை காலை, மாலை வேளைகளில் இங்கு காணமுடிகிறது. ஏராளமான வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள் சுற்றி வருகின்றன. ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. பாபநாச மக்கள் காலையில் நடைப்பயிற்சிக்காக இங்கு வந்துசெல்கிறார்கள். இதன் மூலம் அவர்களது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்வு கிடைக்கிறது. மூலிகைத் தோட்டத்தை சுற்றி நடப்பதற்கு வசதியாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலமாற்றத்தின் கோலம், இன்று மூலிகைகளின் பெயர்கள் கூட பலரும் அறியாநிலை உள்ளது. நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை, களை என்று எண்ணி அழித்த நாம் இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது அவை நம் கண்ணில் அகப்படுவதில்லை. மூலிகை வளங்களையும்,அவற்றின் பயனையும் இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் பதினெண் சித்தர் மூலிகைப் பொழிலை உருவாக்கியுள்ளேன். பள்ளி,கல்லூரி மாணவர்கள் எங்கள் மூலிகைத் தோட்டத்தை சுற்றிப் பார்க்க வரலாம். மூலிகைச் செடிகள், மரக்கன்றுகள் தேவைப்படுவோர் மற்றும் பள்ளியில் மூலிகைத் தோட்டம் அமைக்க விரும்புவோர் எங்களை தொடர்பு கொள்ளலாம். பணம்எதுவும் தேவையில்லை” என்கிறார், மைக்கேல் ஜெயராஜ்.

பதினெண் சித்தர் மூலிகைப் பொழிலில் மூலிகைகள் வளர்கிறது என்பதைவிட மூலிகைகள் வாழ்கிறது என்றே சொல்லலாம்.

தொடர்புக்கு: 98421 66097

Tags:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

6 Comments

  1. Malathy 28/01/2017
  2. rani.t 14/05/2018
  3. Yuvaraj 20/11/2018
  4. P.RANGARAJAN 27/02/2020
  5. ராஜா 21/02/2021
  6. வெங்கடேஷ் 01/06/2021

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline