நிலக்கடலை விதைப்பை எளிமைப்படுத்தக் கல்லூரி மாணவர்கள் எளிதான கருவியை வடிவமைத்து அசத்தியிருக்கின்றனர்.
நிலக்கடலை விதைப்பு பெருமளவு தொழிலாளர்களை நம்பியே நடக்கும். பண்படுத்தப் பட்ட மண் திடலில் ஏர் கொண்டு உழுதுகொண்டே போக பின்னால் பெண் தொழிலாளர் ஒரு கையில் களைக்கொட்டைக் கொண்டு கொத்தி, அதில் நிலக்கடலையைப் போட்டு மண்ணை மூடிக்கொண்டே வருவார்.
அனைத்துத் துறைகளிலும் தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்துவரும் நிலையில் விவசாயத்துக்குத் தொழிலாளர்கள் கிடைப்பதே இல்லை. விதைப்புக்குக் கூடுதலான செலவும் பிடிக்கிறது. இந்நிலையில் நமது நாட்டில் லட்சக்கணக்கான ஏக்கரில் நிலக் கடலை சாகுபடி செய்யப்படுகிறது.
விதைப்பில் புதுமை
இம்முறைக்கு மாற்று தேவை என்ற நிலையில் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் நிலக் கடலை விதைப்புக் கருவியை உருவாக்கியிருக்கிறார்கள். இக்கருவியைக் கொண்டு ஆட்கள் அதிகம் இன்றி, ஒருவரே நிலக்கடலையை விதைத்து விடலாம்.
விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையத்தில் உள்ள ஐ.எப்.இ.டி பொறியியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் ஜெகன், அன்பரசன், ஆனந்தராஜ் ஆகியோர் நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள ஹைடெக் ரிசர்ச் பவுண்டேஷன் உதவியுடன் இந்தக் கருவியை வடிவமைத்துள்ளனர்.
இரண்டு கொள்கலன்களைச் சுமந்தபடி 25 கிலோ எடையுள்ள இக்கருவி இரண்டு சக்கரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கருவியை ஒருவர் தனது கையால் தள்ளிக்கொண்டே போனால் சக்கரம் சுழன்று, அதன்மூலம் உள் இணைப்புக் கம்பி சுழன்று கொள்கலனில் உள்ள நிலக்கடலை துளை வழியாகக் கீழிறங்கிச் சீரான இடைவெளிகளில் விழும். முன்னால் உள்ள கலப்பை போன்ற அமைப்பு, பள்ளம் ஏற்படுத்திக் கொடுக்க அதில் கடலை விழுந்ததும் பின்னால் உள்ள பலகை போன்ற அமைப்பு மணலைத் தள்ளிக் கடலையை மூடிவிடும்.
2 ஏக்கர் விதைப்பு
‘’சாதாரண தள்ளுவண்டியைத் தள்ளுவதற்குரிய அழுத்தத்தைக் கொடுத்தால்போதும். வண்டி நகரும், கடலையும் விதைக்கும். இதன்மூலம் மிக எளிய முறையில் ஒருவரே ஒரு நாளைக்கு இரண்டு ஏக்கர் நிலத்தில் நிலக் கடலை விதைக்க முடியும். இதையே இன்னும் விரிவுபடுத்தி ஐந்து கொள்கலன்களை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார்கள் இதை உருவாக்கிய மாணவர்கள்.
“வெறும் ஐயாயிரம் ரூபாய் செலவில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இக்கருவியை வடிவமைத்திருக்கிறோம். இதையே வர்த்தக ரீதியில் உருவாக்கினால் இன்னும் செலவு குறையலாம். இதேபோலக் கடலையைப் பிடுங்கி அறுவடை செய்யவும் ஒரு கருவியை வடிவமைக்கத் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார்கள் இதை வடிவமைத்த ஹைடெக் நிறுவனத்தைச் சார்ந்த ஜெயராம், முரளி.