தெரிந்துக் கொள்வோம் – பசும்பால்

பசும்பாலைக் கறந்த சூட்டில் அப்படியே குடிப்பது நல்லது. அது சுலபமாக ஜீரணமாகிவிடும். கறந்த சூடு ஆறிய பிறகு, அந்தப் பால் கடினமானதாகிவிடும்.

அதன்பின் அப்படியே குடித்தால் செரிக்காது. கூடவே, மார்பில் கோழை சேர்ந்து, சளித் தொந்தரவு வரும். எனவே, அதன்பின் கொதிக்க வைத்து அருந்துவதே நல்லது!

காலையில் வெறும் வயிற்றில் பால் சாப்பிடுவது நல்லது. அதன்பின், பசி நன்றாக எடுத்த பிறகுதான் டிபன் சாப்பிடவேண்டும். இருமலோ, தொண்டையில் கிச்…கிச் தொந்தரவோ உள்ளவர்கள், பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டுச் சாப்பிடலாம்.

பால் சாப்பிட்ட பிறகு, புளிப்பான பழங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. இரவில் இட்லி, புளிப்பான சாம்பார் என டிபன் சாப் பிட்டபிறகு, உடனே பால் சாப்பிடுவதும் ஆபத்தான பழக்கம்!

பாலில் ரெடிமேட் சத்து பவுடர்களைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் பழக்கம் இப்போது அதிகமாகி இருக்கிறது. குழந்தைகளுக்கு ஊட்டம் தர, இந்தச் சத்துபானங்கள் அவசியம்என நினைக்கிறார்கள் பலர்.

பாலில் இந்த பவுடர்கள் சேர்த்தபிறகு, அதன் கடினத்தன்மை மேலும் அதிகரிப்பதால் அது செரிமானம் ஆகக் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, அதற்கேற்றாற் போல, மற்ற சாப்பாடு அயிட்டங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

காலை டிபன் கூடவோ, இரவு டிபன்கூடவோ இந்தப் பானத்தைத் தருவதைத் தவிர்க்கவேண்டும். அதிகாலை அல்லது மாலை என உணவு வேளைக்கு இடைப்பட்ட நேரங்களில்தான் குடிக்கத்தரவேண்டும்.

‘வெளுத்ததெல்லாம் பாலுனு நம்பிடுவேன்’ என அப்பாவிகளைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். இப்போது வெளுப்பாக வரும் எதையுமே பால் என்று நம்பிவிடக்கூடாது.

முன்பெல்லாம் ‘பால் சாப்பிட்டால் செரிக்காது’ என்ற ஒரே பிரச்னை மட்டும் தான் இருந்தது. இப்போது ‘பால் அலர்ஜி’ என்ற புதுப் பிரச்னையும் சேர்ந்துகொண்டு விட்டது!

பசு மனசு நிறைந்து கொடுக்கும் பால்தான் அருமருந்து. இப்போது ஹார்மோன் ஊசிகளை எல்லாம் போட்டு, பசுவின் மடியிலிருந்து பாலை உறிஞ்சி எடுக்கிறார்கள். பாலைத் தரும் பசுவைப் புனிதமாக கருதுவது இந்திய கலாசாரம்.

சரி… தயிர், வெண்ணெய், நெய் பற்றி… பால்காரர் எடுத்து வருவதும், பாக்கெட் பாலும்தான் பெரும்பாலான நகரங்களில் கிடைக்கின்றன. அது பசும்பாலா, எருமைப் பாலா அல்லது இரண்டும் கலந்ததா… எதுவுமே தெரியாது!

பலர் இந்தப் பாலை வெறுமனே பொங்கும்வரை கொதிக்க வைத்தால்போதும் என நினைத்து, பொங்கி நுரை கிளம்பி வந்ததுமே அடுப்பில் இருந்து இறக்கிவிடுகிறார்கள்.

இது தவறு! பால் கொதித்தால் மட்டும் போதாது… ஒரு பங்கு பாலுக்கு நான்கு பங்கு தண்ணீர் ஊற்றிப் பாலைக் காய்ச்ச வேண்டும். ‘அதுதான் ஏற்கெனவே பால்காரரே தண்ணீரைக் கலந்துவிடுகிறாரே’ என ஆதங்கப்படுகிறவர்கள் வேண்டுமானால் தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

தண்ணீர் சுத்தமாகச் சுண்டி, பழைய ஒரு பங்கு அளவு ஆகும்வரை கொதிக்கவிட வேண்டும். (ஆனால், இன்றைய அவசரயுகத்தில் இதற்கெல்லாம் ஏது நேரம் என்கிறீர்களா? இதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயம்!) கொதித்ததும் ஸ்டவ்வை நிறுத்திவிடக்கூடாது.

ஐந்து முதல் பத்து நிமிடங்கள் லேசான சூட்டில் அப்படியே வைத்திருந்து, அதன்பிறகே ஸ்டவ்விலிருந்து பாலை எடுக்க வேண்டும். ஆனால், அதற்காகப் பாலை எந்நேரமும் அடுப்பிலேயே கொதிக்கவைப்பதும் தவறு.

டீக்கடைகளில் எப்போதும் அடுப்புச் சூட்டிலேயே இருக்கும் பால் வயிற்றுக்கு ஏகப்பட்ட உபாதைகள் தரும்.

மேலும் சில தனியார் பால் நிறுவனங்கள், பாலில் பல்வேறு ரசாயனங்களையும் கலந்து விற்பனை செய்கின்றன. எனவே, நல்ல தரமான பால் நிறுவனங்களின் பொருட்களை மட்டும் வாங்குவது உடலுக்கு நல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline