தென்னந்தோப்பு மழை நீர் சேகரிப்பு

தென்னந்தோப்பு மழை நீர் சேகரிப்பு

 

தென்னந்தோப்பு மழை நீர் சேகரிப்பு

பணப் பயிரான தென்னை கோடையை தாங்கி வளரும் குணமுடையது. தென்னை சாகுபடி பரப்பளவில் தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும், தேங்காய் உற்பத்தியில் 3-ம் இடத்திலும் உள்ளது. இதற்கு காரணம் தோப்புகளில் தண்ணீர் சேமிப்பில் உள்ள குறைபாடுகள் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. நெட்டை ரக தென்னை மரங்கள் வருடத்திற்கு 125 முதல் 150 காய்களும், குட்டை நெட்டை மற்றும் ஒட்டு ரகம் 300 முதல் 400 வரை தேங்காய்களையும் தருகின்றது.

50 சதவீதம் மகசூல் :

தென்னை மரங்கள் ஒரு நாளைக்கு 55 லிட்டர் முதல் 65 லிட்டர் வரை தண்ணீரை பூமியிலிருந்து எடுத்து கொள்வதாக கணக்கிடப்படுகிறது. தென்னையின் வேர்கள் 250 அடிக்கு மேல் நீளமாக தண்ணீர் கிடைக்கும் இடம் தேடி செல்கிறது. மழை பெய்யும் போது தோப்பில் கிடைக்கும் தண்ணீர், நிலத்தடி நீர் மூலம் அல்லது வாய்க்கால் மூலம் பாய்ச்சும் தண்ணீர் வேகமாக ஆவியாகி சூரிய வெப்பத்தால், மேல் மண் சீக்கிரம் காய்ந்து வறண்டு விடுகிறது. இதனால் அடிக்கடி தென்னந் தோப்புகளில் தண்ணீர் பாய்ச்ச வேண்டியது உள்ளது. பூமியின் மேல் பரப்பில் சரியாக தண்ணீர் சேமிப்பு இருந்தால் தான் தென்னை மரங்கள் தேவையான அளவு நீரை எடுத்துக் கொள்கிறது என்பதும், அத்தகைய தென்னை மரங்களில் பிஞ்சுகள் அதிகம் பிடித்து மகசுல் 50 சதவீதம் அதிகரிக்கிறது என்பதும் திருவையாறில் உள்ள தென்னை ஆராய்ச்சி மையம் செய்த ஆராய்ச்சியில் தெரியவந்தது.

மண் அரிப்பு தடுப்பு:

மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. தென்னந் தோப்புகளில் நான்கு ஓரங்களிலும் வரப்பு அமைக்க வேண்டும். மேடு பள்ளம் பார்த்து குறுக்கு நெடுக்குமாக வரப்பு அமைக்க வேண்டும். தண்ணீர் வழிந்து ஓடிவிடாமல், தடுக்க வேண்டும்.
இதன் மூலம் தென்னந் தோப்பில் உள்ள தேவையில்லாத உப்புத் தன்மை குறையும். தொடர்ந்து கிணறுகளில் ஊற்று பெருகி நீர் மட்டம் உயரும். தொடர்ந்து மழை அதிகமாக பெய்தால், தோப்புக்குள் மழை நீர் சேமிப்பு குட்டை ஒன்று அமைத்து, அதில் உபரியாக கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். அதில் மீன் வளர்த்து கூடிதல் வருமானத்தை பெறலாம். மேலும் நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.

கரையான்:

தென்னை மரங்களை சுத்தம் செய்து மேலுரமாக கோகோஸ் (ஆர்கானிக் உரம்) வைக்கும் போது விழும் மட்டைகள், மற்ற மரங்களில் உள்ள தழைகள்,காய்ந்து விழும் சருகுகள் ஆகியவற்றை எரிக்காமல், தென்னை மரங்களின் தூர் பாகத்தை சுற்றி 2 அல்லது 3 அடுக்குகள் போட வேண்டும். கரையான் மருந்தை 10 பங்கு மணலில் கலந்து லேசாக தூவி கரையானை கட்டுப்படுத்த வேண்டும்.வண்டல் மண், தொழு உரம், மூன்று கூடை அளவு தூவி விடவும். ஓரு மட்டை மக்கும் போது அதிலிருந்து சுமார் 7 கிலோ எரு கிடைக்கிறது.

மண் புழு உரம்:

தென்னை மரத்தை சுற்றி ஓலை மட்டை பரப்பிய இடத்தை 100 நாட்களுக்கு பிறகு சோதனை செய்து பார்த்தால், ஏராளமான மண் புழுக்கள் தெரியும். கழிவு மட்டை, மக்குகளை சாப்பிடுவதற்காக மண் புழுக்கள் தென்னை மரங்களை சுற்றி குடி வந்துள்ளதை அறிய முடிகிறது. ஓரு மண் புழு ஓரு நாளைக்கு சுமார் 52 முறை பூமிக்குள் 1 அடி ஆழம் வரை சென்று வருகிறது.
காற்றில் 78 சதவீதம் நைட்ரஜன் உள்ளது. இது இடி,மின்னல் ஏற்படும் போது, உண்டாகும் வெப்பத்தால் தாக்கப்பட்டு ‘நைட்ரிக் ஆக்சைடு ‘ ஆகிறது. பின்னர் மழைநீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மண்ணில் கலக்கிறது. நமக்கு தெரியாமல் பூமியில் நடக்கும் நுண்ணுயிர் கிரியையால் தழைச்சத்தாகி அதனை தென்னை மரங்கள் எடுக்கிறது. மழை காலத்தில் மழை நீருடன் யூரியா கரைசல் கலந்து, பூமியில் விழுவதால் புல். பூண்டுகள், பயிர்கள் பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது.

மழைநீர் சேமிப்பு:

மழை பெய்யும் போது, தென்னை மரம் வழியாக தண்ணீர் வழிந்து இறங்கி தூர் பகுதியில் மழைநீர் சேமிக்கப்படுகிறது. மட்டை,ஓலை, கழிவுகள் பரப்பி இருப்பதால், கடுமையான வெயில் அனல் காற்றில் இருந்து வரும் வெப்பதை கூட சருகுகள் தாங்கி கொள்கிறது. மேலும் வெப்பம் ஊடுருவது தாக்கப்பட்டு ஈரம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் பூமி குளிர்ச்சியுடன் இருக்கும். மழை நீருடன் கலந்து வந்த நைட்ரஜன் நிலை நிறுத்தப்பட்டு தென்னை மரங்களில் வேர்கள் உறிஞ்சுகின்றன.

கழிவுகள்:

உரி மட்டை, உரி மட்டை தூள், உமி, மரத்தூள், இழை, தழைகள், வாழை, தாழை, கரும்பு சக்கை சருகுகள் என்று ஒரத்தில் ஒதுக்கும் கழிவுகள் அனைத்தையும் தென்னை மரங்களை சுற்றிலும் இரண்டு அடுக்குகள் போட்டு, தென்னந் தோப்புகளில் மழை நீர் சேமிப்புக்கு பயன்படுத்தலாம்.இதனால் சுற்றுப் புற சூழல் பாதுகாக்கப்படுகிறது.
தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் ரசாயன உரங்கள் கொடுப்பதை தவிர்க்கவும்,மேல் உரமாக மட்டை இடுக்குகளில் ஆர்கானிக் உரமான கோகோஸ் உர மருந்தை பயன்படுத்தவும். இதன் மூலம் பிஞ்சு பூ உதிர்வதை தடுத்து அதிக அளவு மகசூலினை பெறலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline