துளசி செடியை வளர்க்க டிப்ஸ்

thulasi
இந்துக்களுக்கு துளசி செடி ஒரு புனிதமான ஒன்று. மேலும் இந்த செடியை விஷ்ணு பகவானுக்கு நிகராக மதிப்பளித்து வருகின்றனர். இத்தகைய செடியை பல இந்துக்கள் வீட்டில் வளர்த்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த செடி சில வீடுகளில் வாடி வெறும் குச்சி மட்டும் இருக்கும். இதற்கு சரியான பராமரிப்பானது கொடுக்கவில்லை என்று அர்த்தம். என்ன தான் செடியை கடவுளாக நினைத்து மதித்து வளர்த்தாலும், முறையான பராமரிப்பு இருந்தால் மட்டுமே நன்கு செழிப்புடன் வளரும். அதிலும் துளசி செடிகளில் பல வகைகள் உள்ளன. இவை புனிதமானது மட்டுமின்றி, அதற்கேற்றாற் போல் பல நோய்களை குணமாக்கவும் வல்லது.

* துளசி செடிக்கு நேரடியான சூரிய வெளிச்சம் ஆகாது. எனவே துளசிச் செடியை சூரிய வெப்பம் நேரடியாக படும் இடத்தில் வைத்து வளர்க்காமல், அளவாக வெயில் படும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.
* துளசி செடிக்கு அதிகப்படியான ஈரப்பசையானது மிகவும் பிடிக்கும். எனவே கோடைகாலமாக இருந்தால், ஒரு நாளைக்கு 3 முறையும், குளிர்காலமாக இருந்தால், ஒருநாளைக்கும் இரண்டு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு வேளை துளசிச் செடியானது சூரிய வெளிச்சம் அதிகம் உள்ள இடத்தில் வைத்தால், அதற்கு இன்னும் அதிகப்படியான நீரானது தேவைப்படும்.
* துளசி செடிக்கு, ஈரப்பசையை தக்க வைக்கும் மண் மிகவும் அவசியம். எனவே தான் துளசி செடியானது பெரும்பாலும் களிமண்ணில் வளர்கிறது. ஏனெனில் மண்ணிலேயே களிமண் தான் அதிகப்படியான ஈரப்பசையை தக்கக் வைக்கக்கூடியது.
* துளசி செடியை செழிப்புடன் வளர்ப்பதற்கு எந்த ஒரு கெமிக்கல் உரம் தேவையில்லை. ஆனால் செடியை வைப்பதற்கு முன், அதற்கு ஈரத்தை தக்கவைக்கும் ஈர வைக்கோலை வைத்து, பின் மண்ணை போட்டு, செடியை வைக்க வேண்டும். இதனால் செடியானது வறட்சியடையாமல் இருக்கும். சொல்லப்போனால், துளசி செடிக்கு, அந்த வைக்கோல் கூட தேவையில்லை. அது இல்லாமலேயே நன்றாக துளசிச் செடி வளரும்.
* துளசி செடியில் பூக்கள் வளர ஆரம்பித்துவிட்டால், துளசிச் செடியின் இலையிலிருந்து வரும் வாசனை மட்டும் போவதில்லை, அதன் வளர்ச்சியும் தான் தடைப்படும். எனவே செடியில் பூக்கள் வளரை ஆரம்பித்துவிட்டால், அந்த பூக்களை அகற்றிவிட வேண்டும். முக்கியமாக, பூக்கள் மலரும் வரை காத்திருக்காமல், அது மொட்டாக இருக்கும் போதே அகற்றிவிட வேண்டும்.
* துளசி செடிக்கு எந்த ஒரு பூச்சிக்கொல்லி மருந்தும் தேவையில்லை. ஏனெனில் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையானது, செடியை பூச்சிகள் தாக்காமல் தடுக்கும். இவையே துளசி செடியை வளர்ப்பதற்கான சில டிப்ஸ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline