தீவனச் செலவுகளை குறைக்கும் முறைகள்

DSC04084 (8)

கால்நடை வளர்ப்பு வேளாண்மையுடன் இணைந்த உப தொழிலாக உள்ளது. எனவே, விவசாயிகள் பசுக்களை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பசுந்தீவனத்துக்கு அதிக அளவில் விவசாயிகள் செலவிடும் நிலையில், தீவனச் செலவுகளை பல முறைகளில் குறைக்க வாய்ப்புண்டு. இந்த முறைகளைப் பயன்படுத்தினால், தீவனச் செலவு பெருமளவு குறையும்.

கால்நடைகள் வேளாண்மை உற்பத்திக்கு பல வகைகளில் உதவியும் புரிகிறது. விவசாயிகளின் நிரந்தர வருமானத்துக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யவும் ஆதாரமாக உள்ளது.

இருப்பினும், கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தின் அளவில் சுமார் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே கிடைக்கிறது.

• விவசாயிகள் பேணி காக்கும் கலப்பின கால்நடைகளுக்கு சமச்சீரான சத்துள்ள தீவனத்தை ஆண்டு முழுவதும் கொடுக்க வேண்டியுள்ளது. கால்நடைகளின் பராமரிப்பில் 60-70 சதவீதம் தீவனச் செலவாக உள்ளது. இதை குறைப்பதற்கு உகந்த வழி தீவனப் பயிர்களை வளர்த்து அவைகளுக்கு உரிய அளவில் கொடுப்பதாகும்.

• மக்காச்சோளம், சோளம், தீவனக்கம்பு ஆகிய தானிய வகைகளும், கினியாப்புல், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் (கோ.3) எருமைப்புல், கொழுக்கட்டைப்புல், தீனாநாத் புல் ஆகிய புல் வகைகளும், முயல் மசால், வேலி மசால், தீவன தட்டைப்பயறு, ஆட்டு மசால், சங்குப்பூ ஆகிய பயறு வகைகளும், சூபாபுல், கிளிரிசீடியா, வாகை, வேம்பு, அகத்தி ஆகிய மர வகைகளும் என 4 வகைகளாக தீவனங்கள் அளிக்கப்படுகின்றன.

• எல்லா மண் வகைகளிலும் மழையளவு மற்றும் பாசன வசதி குறைவாக உள்ள இடங்களிலும் தீவன மரங்களை வரப்புகளிலும், தோட்டங்களின் வேலி ஒரங்களிலும் தீவனங்களைப் பயிரிடலாம்.

• தானிய வகை, புல் வகை, பயறு வகை தீவனப்பயிர்களை ஊடு பயிர் முறையில் பயிர்செய்வதன் மூலம் கால்நடைகளுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

வறட்சியில் தீவனப் பராமரிப்பு:

• வறட்சியின்போது தீவனப் பற்றாக்குறை அதிகம் காணப்படுவதால், பெரும்பாலான கால்நடைகள் விற்கப்படுகின்றன. எனவே, அந்தக் காலக்கட்டத்தில் உடைத்த இருங்குச்சோளம், கேழ்வரகு, கம்பு, சாமை, கோதுமை, கொள்ளு ஆகியவற்றை மக்காச் சோளத்துக்குப் பதிலாக 50 சதவீதம் வரை தீவனத்தில் அளிக்கலாம்.

• அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, அரிசிக்குருணை, உளுந்து, பயறு, கடலை பொட்டு போன்றவற்றை கால்நடை தீவனத்தில் 50 சதவீதம் வரை சேர்க்கலாம். விலை மலிவாக கிடைக்கும் தானிய உபபொருள்களை தீவனத்தில் கலப்பதால் தீவனச்செலவு மிச்சமாவதுடன் சத்துள்ள ஆகாரம் கிடைக்கிறது.

வேளாண் கழிவுப் பொருள்களையும் அளிக்கலாம்!

• கிழங்கு திப்பி, பருத்திக்கொட்டை, ஓடு நீக்கப்பட்ட புளியங்கொட்டை ஆகியவற்றை உடைத்து தீவனத்தில் சேர்க்கலாம்.

• அறுவடைக்குப் பின் கிடைக்கும் வைக்கோல், சோளத்தட்டை, கம்புத்தட்டை, வேர்கடலைக்கொடி, காய்ந்த புல், சூரியகாந்தி செடி, மக்காச்சோளத்தட்டை, கேழ்வரகுத் தட்டை ஆகிய கூளத் தீவனத்தையும் கொடுக்கலாம்.

• சத்துகள் குறைந்த இந்த உலர் தீவனங்களை 4 யூரியா கரைசல் தெளித்து சில நாள்கள் காற்றுப் புகாமல் பாதுகாத்து வைப்பதன் மூலம் சத்துள்ள கூளத் தீவனம் கால்நடைகளுக்கு கிடைக்கும். யூரியாவைக் கொண்டு ஊட்டமேற்றிய தீவனத்தை ஆறு மாத வயதைக் கடந்த மாட்டிற்கு 4-5 கிலோ வரை அளிக்கலாம்.

• ஆடுகளுக்கு சோளத்தட்டையுடன் காய்ந்த உளுந்தஞ்செடி, துவரைச் செடி, நிலக்கடலைக் கொடி, சவுண்டல், கிளிரிசிடியா, மர இலைகள், கொடுக்காப்புளி, கருவேல் ஆகியன நல்ல உணவாகின்றன. காய்ந்த பயறுவகை தீவனமும் சாலச்சிறந்ததாகும்.

கரும்புச் சோகை, சக்கைகளும் நல்ல உணவு:

• கரும்புச்சோகை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. தினசரி 20 – 25 கிலோ வரை அளிக்கலாம்.

• சூரியகாந்தி செடி, விதை நீக்கிய சூரியகாந்திப் பூ ஆகியவற்றை உணவாக வைக்கலாம்.

கருவேல், வேலிக்கருவேல், சவுண்டல் விதைகள், புளியங்கொட்டை, மாங்கொட்டை ஆகியவற்றை தீவனமாகப் பயன்படுத்தலாம். விதைகளை 20 -30 சதவீதம் வரை தீவனத்தில் சேர்க்கலாம்.

மர இலைகள்:

• மர இலைகள் சத்துள்ள தீவனமாக அமைந்துள்ளது. அகத்தி, சவுண்டல், கிளிரிசிடியா, கொடுக்காப்புள்ளி, வாகை ஆகியவற்றின் இலைகளில் புரத சத்து அதிகமாக உள்ளது.

• அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் விச சத்து அற்ற கால்நடைகள் விரும்பி உண்ணும் மர இலைகளை கோடை காலத்தில் அளித்து தீவனப்பற்றாக்குறையை போக்கலாம்.

• மர இலைகளுடன் வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, கேழ்வரகு தட்டை போன்றவற்றையும் கோதுமைத்தட்டையும் சேர்த்து அளிக்க வேண்டும். மர இலைகளை பால் தரும் மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 10-15 கிலோ வரை அளிக்கலாம். ஆடுகளுக்கு 3 – 3.5 கிலோ வரை ஒரு நாளைக்கு கொடுக்கலாம். மேலும் மர இலைகளையும் கால்நடைகளுக்கு அளிக்கலாம்.

• மர இலைகளை தீவனமாக அளிக்கும் போது கீழ்க்கணட வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.

• மர இலைகளை பிற புல், உலர்ந்த தீவனத்துடன் சிறிது சிறிதாக அளிக்க வேண்டும். மர இலைகளை உலரவைத்து அதன் ஈரப்பதம் 15 -20 கீழே உள்ள நிலைகளில் அளிப்பது சிறந்தது. மர இலைகள் மீது 2 உப்பு அல்லது வெல்லக் கரைசலை தெளித்தால் உண்ணும் திறன் அதிகமாகும். மர இலைகளை விரும்பு உண்ணாத கால்நடைகளை விரும்பி உண்ணும் கால்நடைகளின் அருகில் கட்டி வைத்து மர இலைகளை தீவனமாக அளிக்கலாம்.

முக்கியமான கவனிக்க வேண்டியது :

• மாலை, இரவு நேரங்களில் தீவனமிட்டால் கால்நடைகள் நல்ல முறையில் உண்ணும். வெயில் நேரத்தில் மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது.

• சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும்.

• விஷ சத்துள்ள தீவனப் பயிர்களை கால்நடைகளுக்கு கொடுக்கக் கூடாது.

• தீவனத் தட்டைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளிப்பதால் கழிவுகள் குறையும்.

• மழையின்றி வாடும் இளம் சோளப்பயிரில் மாடுகளை விட்டு மேய்க்கக் கூடாது. இளம் சோளப்பயிரில் உள்ள சைனிக் அமிலம் நச்சுத்தன்மை உடையதால் இதனை உண்ணும் கால்நடை இறக்க நேரிடும்.

• முழு தீவனத்தையும் ஒரே நேரத்தில் அளிக்காமல் இரண்டு அல்லது மூன்று தடவை பிரித்து சிறிது சிறிதாக அளித்தல் நல்லது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline