ஜீவாமிர்தத்தில் விளைந்த 48 டன் கரும்பு! ( Sugarcane – organic )

உப்புத் தண்ணியிலும் உருப்படியான வெள்ளாமை…
ஜீவாமிர்தத்தில் விளைந்த 48 டன் கரும்பு!

998710_483267721748177_942457317_n

‘‘தண்ணி உப்பாவே இருக்கு.
இதுல என்னத்த வெள்ளாமை பண்ணி…
என்னத்த ஆகப்போகுது
இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நபரா நீங்கள்..?
கவலையேப்படாதீங்க. தண்ணி, எவ்வளவு கடினத்தன்-மையா இருந்தாலும்… அதை வெகுசுலபமா சரிபண்றதோட… நல்ல விளைச்சலையும் கட்டாயம் எடுக்கலாம்’’ என்று நம்பிக்கை ஊட்டுகிறார், கரூர் மாவட்டம், பணிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன். இவர், சமீபத்தில் இயற்கை விவசாயச் சாதனைக்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திடம் வேளாண் செம்மல் விருது பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரைத்தேடிச் சென்றபோது… பச்சைப்பசேலென்று ஆளுயரத்துக்கு வளர்ந்து நின்ற கரும்புகள், தோகைகளை ஆட்டி வரவேற்க, அவற்றோடு நின்றபடி தானும் வரவேற்ற கோபாலகிருஷ்ணன், ‘‘எனக்குச் சொந்தமா நிறைய நிலம் இருக்கு. அதுல நான் தொடர்ந்து இயற்கை முறையில விவசாயம் செய்துகிட்டிருக்கேன். போன வருஷம், என்னோட மாமனாருக்கு சொந்தமான ரெண்டு ஏக்கர் நிலமும் என் பொறுப்புக்கு வந்துச்சு. ஆனா, இந்த ரெண்டு ஏக்கர் நிலத்துல இருக்கற கிணத்துத் தண்ணி கடுமையான உப்பு. நான் சோதனை பண்ணி பாத்தப்போ, ணி.சி. 5.7 இருந்துச்சு. இருந்தாலும், இந்தத் தண்ணியை வெச்சுதான் வெள்ளாமை பண்ண முடியும்கிற நிலைமை.

மாமனார், ஏகப்பட்ட உரங்களைக் கொட்டிதான் கரும்பு, நெல், சூரியகாந்தினு விவசாயம் பாத்துகிட்டிருந்தார். ஆனா, பெரியஅளவுக்கெல்லாம் விளைச்சல் கிடைக்கல. இப்ப அதையெல்லாம் மாத்தி, இயற்கை முறை விவசாயத்தால தளதளனு கரும்பை விளைவிச்சிருக்கேன். முன்னெல்லாம் ஏக்கருக்கு 20 டன் கரும்பு மகசூலா கிடைச்சுது. இப்ப 48 டன் வரைக்கும் விளைவிச்சுருக்கேன். எல்லாம் இயற்கை வழி விவசாயத்தோட புண்ணியம்தான்.

இதைச் சாதிக்கறது பெரிய கம்பசூத்திரமெல்லாம் கிடையாது. எங்கயும் அலையாம சாதாரணமா எல்லோரும் சுலபமா செய்ய முடியுற தொழில்நுட்பம்தான். ஜீரோ பட்ஜெட் சுபாஷ் பாலேக்கர் சொல்ற ஜீவாமிர்தக் கரைசல்ல லேசா மாற்றம் செஞ்சு, கரும்புக்கு பயன்படுத்திப் பாத்தேன். அருமையான விளைச்சலைக் கொடுத்துடுச்சு”.
-பசுமை விகடன்
10 டிசம்பர் 2009 தேதியிட்ட இதழிலிருந்து….

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *