சர்க்கரை நோய் வருவது எதனால்?

சர்க்கரை நோய் வருவது எதனால்?

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

வயது 63. கடந்த 25 வருடங்களாக சர்க்கரை நோயாலும், உயர் ரத்த அழுத்தத்தாலும் சிரமப்படுகிறேன். தற்போது வலது கை, இடது கால் மரத்துப் போகிறது. கால் பாத எரிச்சலும் உள்ளது. கூடவே மலச்சிக்கலும். பிராஸ்டெட் சுரப்பி வீக்கத்தின் காரணமாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் தூக்கமும் கெடுகிறது. இவை நீங்க வழி என்ன?

“குணகர்மவிகல்பம்’ என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவாகட்டும், செய்யும் செயலாகட்டும், சாப்பிடும் மருந்தாகட்டும் இவை அனைத்திலும் குணமும்; கர்மமும் நிறைந்துள்ளன. குணத்திற்கு உதாரணமாக எளிதில் செரிக்காதவை, எளிதில் செரிக்கக்கூடியவை, குளிர்ச்சியானவை, சூடானவை, எண்ணெய்ப் பசையை உடலுக்குத் தருபவை, வறட்சியை ஏற்படுத்துபவை போன்ற உணவு வகைகளைக் குறிப்பிடலாம். கர்மம் என்றால் செயலைச் செய்பவை, உதாரணமாகக் கடுக்காய்த் தோலைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்குகிறது, தேன் சற்று தூக்கலாகவும், நெய் சற்று குறைவாகவும் குழைத்து வாய்ப்புண்ணில் பூச அது விரைவில் குணமடைவதும் செயல்திறனால் ஏற்படுகின்றன.

இந்தக் குணமும் கர்மமும்தான் சர்க்கரை வியாதியையும் தோற்றுவிக்கின்றன. ஒரே இருக்கையில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்யும் உத்யோகம், அதிக நேரம் படுக்கையில் படுத்து உறங்குதல், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, நீர்வாழ் மிருகங்களையும் அதிகமாக உணவில் சேர்த்துச் சாப்பிடுதல், அடிக்கடி பால் சாப்பிடுதல், புதிய அரிசி, வெல்லத்தினால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுதல் போன்ற காரணங்களால் நம் உடலில் நெய்ப்பு, குளிர்ச்சி, உடல்கனம், மந்தநிலை, ரத்தத்திலும், சதையிலும் கொழுப்பு, வழுவழுப்பு போன்ற குணங்கள் அதிகரிக்கின்றன. இதை வெளியேற்றுவதற்கான வழியை உடல் தேடுகிறது. சிறுநீரகம் இந்தக் குணங்களை இழுத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. இதை அறியாது காரணத்தைத் தொடரும்போது இந்தக் குணங்கள் ரத்தத்திலும் சிறுநீரிலும் மிகைப்பட்டு காணுவதால் ரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர்ப் பரிசோதனையில் நாம் சர்க்கரை நோயாளி என்ற தீர்ப்பு வழங்கப்பட்டு அதன்பிறகு தினமும் ஒரு பயம் காலந்த வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.

முன் குறிப்பிட்ட காரணங்களுக்கு நேர் எதிரான செயல்களைச் செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். அதாவது ஓர் இருக்கையில் அதிகம் அமர வேண்டாம், குறைந்தது ஒருமணிநேரமாவது நடக்கவேண்டும். பகல் தூக்கம் கூடாது, மாமிச உணவில் கட்டுப்பாடு, அரை லிட்டர் அளவுதான் பால், அரிசியைக் குறை, இனிப்புப் பண்டங்கள் வேண்டாம் போன்ற மருத்துவரின் கட்டளைகளை ஏற்று அவற்றிற்கு நேர் எதிரான கசப்பு, துவர்ப்பு, காரச் சுவைகளை உணவில் சேர்க்கத் தொடங்கும்போது பல ரஸôயன மாற்றங்களை நம் உடல் சந்திக்கிறது. இந்தச் செயல்களின் வாயிலாக, குடலில் வாயுவின் சீற்றம் மிகைப்படுகிறது. காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை வாயுவிற்கு மிகவும் அனுகூலமானவை. வாயுவின் சீற்றம் ஏற்படுவதால் நீங்கள் குறிப்பிடும் மரத்துப் போதல், கால் பாத எரிச்சல், மலச் சிக்கல், பிராஸ்டேட் சுரப்பி வீக்கம் போன்றவை ஏற்படும்.

குடலில் வாயுவின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த விளக்கெண்ணெய் நல்ல மருந்தாகும். விளக்கெண்ணெய்யை இளஞ்சூடாக வயிற்றின் மீது உருட்டித் தேய்க்கவும். வலது கீழ் வயிற்றுப் பகுதியில் தொடங்கி இடது பக்கமாகக் கீழ் வயிற்றுப் பகுதி வரை சுமார் 20-25 நிமிடங்கள் தடவி விடவும். தொப்புளின் உள்ளேயும் நன்றாக எண்ணெய்யை ஊறவிடவும். கை, கால் மரத்துப் போன பகுதிகளிலும், கால் பாதத்திலும் விளக்கெண்ணெய்யை வெதுவெதுப்பாகத் தடவவும். நன்றாக ஊறிய பிறகு வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்.

விளக்கெண்ணெய்யைக் கலந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளும் தங்களுக்கு நல்ல பலனைத் தரக்கூடும். சுகுமாரம் கஷாயத்துடன் 1/4, 1/2 ஸ்பூன் ஹிங்குதிரிகுணம் எனும் எண்ணெய் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட நல்லது. இம்மருந்து மலச்சிக்கலைப் போக்கி, பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். குடல் வாயுவின் சீற்றத்தை அடக்கி, நரம்புகளுக்கு வலுவூட்டும்.

2 Comments

  1. கல்யாணராமன் 01/06/2013

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline