சப்போட்டா கூட்டணி

சப்போட்டா கூட்டணி

நாகர்கோவிலில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேல தெரிசனங்கோப்பு.தென்னை, பெருநெல்லி என தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்கிறார் மணியன்.

“கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த காலகட்டத்திலேலே அப்பாவோட சேர்ந்து விவசாயத்தையும் பார்த்து கொண்டுதான் இருந்தேன். அந்த நேரத்தில் எங்களுக்கு முழுக்க நெல் விவசாயம்தான.

கட்டுபடியான விலையில்லை, வேலையாட்கள் பற்றாக்குறைனு ஏகப்பட்ட பிரச்சனை.அதனால் கொஞ்சம் இடத்தில் தென்னை, வாழையை சாகுபடி செய்தோம்.எங்கள் பகுதியில் அதிகமாக காற்று வீசுகிற பகுதி.

அதனால் வாழை மரங்கள் சரிந்து பெருந்தொல்லையாக இருந்தது.அந்த சமயத்தில்தான் தற்செயலாக பெருநெல்லி தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டேன்.

அதுதொடர்பானத்தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டு வந்த நான்,உடனடியா சாகுபடியிலும் இறங்கிவிட்டேன்.
எனக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் அதிகம்.

நெல்லி போடணும்னு முழவு எடுத்ததும் என்னோட ரெண்டு ஏக்கர் நிலத்தை இயற்கை விவசாயத்துக்குத் தயார்படுத்தினேன். ஒரு வருடத்துக்கு எந்த விவசாயமும் பண்ணாமல், தழைச்சத்துக்காக சணப்பு விதைத்து, மடக்கி உழுது போட்டேன்.

நன்றாக பக்குவப்பட்டதும், சோதனை அடிப்படையில் இயற்கை முறையில் ரெண்டு ஏக்காலேயும் பெருநெல்லியை நட்டு, ஊடுபயிரா சப்போட்டாவையும் சாகுபடி செய்தேன்.நல்ல மகசூல் கிடைக்கவே.

ஐம்பது ஏக்கரில் பெருநெல்லி போட்டுட்டேன். இன்னும் ஒரு சில மாதத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும்”.

சாகுபடி முறை

நெல்லி சாகுபடிக்கு செம்மண் நிலம் ஏற்றது. அதிலும் மூன்று அடிக்கு கீழ் குறுஞ்சரல்கள் உள்ள மண்ணாக இருந்தால், மிகவும் நல்லது.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மே மாதமும், மற்ற மாவட்டங்களில் ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களிலும் நடவு செய்யலாம்.நெல்லியை இயல்பான நடவு முறை, அடர் நடவு முறை என இரண்டு முறைகளில் நடவு செய்யலாம்.

இயல்பான நடவு முறையில் செடிக்குச் செடி மற்றும் வரிசைக்கு வரிசை 18 அடி இடைவெளி இருப்பதுபோல நடவேண்டும்.

இப்படி நடும்போது ஏக்கருக்கு 130 செடிகள் வரை நடலாம். அடர் நடவு முறையில் மரத்துக்கு மரம் மற்றும் வரிசைக்கு வரிசை பத்து அடி இடைவெளியே போதும்.இதில் ஏக்கருக்கு 430 மரங்கள் வரை நடலாம்.

இயல்பு நடவு முறையில் நடவு செய்யும்போது இடைவெளி அதிகமாக இருப்பதால், ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்.
நெல்லியில் மூன்றாவது ஆண்டில் இருந்துதான் வருமானம் என்பதால்,முதல் இரண்டு ஆண்டுகளுக்கான பராமரிப்புச் செலவை ஈடுகட்ட, பயறு வகைகளைப் பயிர் செய்யலாம்.

இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.பயறு வகைகளை அறுவடை செய்ததும் அதன் செடிகளையே நெல்லிக்கு மூடாக்காகப் போட்டு விடலாம்.

மரவள்ளி, வாழை, சப்போட்டா எனவும் நடவு செய்து பராமரிப்புச் செலவுகளை ஈடுசெய்யலாம்.

‘நெல்லி சாகுபடிக்கு அதிக தண்ணீர் உள்ள நிலம் சரிப்பட்டு வராது, மூன்றடி ஆழம் மற்றும் மூன்றடி அகலத்துக்கு குழி எடுத்து,காய்ந்த இலை,சருகளைப் போட்டு அதன் மேல் மண்ணைப் போட்டு மூடவேண்டும்.

அதற்கு மேல் பத்து கிலோ அளவு தொழுவுரத்தைக் கொட்டி,தோண்டி வைத்திருக்கும் மேல் மண்ணை போட்டு மூடிய பிறகு, நெல்லிச் செடியை நடவு செய்ய வேண்டும்.

செடியைச் சுற்றி வட்டப்பாத்தி அமைத்து ஒரு கிலோ மண்புழு உரம் போடவேண்டும்.நடவு செய்த முதல் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

தொடர்ந்து முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசனம் செய்யவேண்டும்.ஆறு மாதங்களுக்குப் பிறகு, செடிக்கு வாட்டம் இல்லாமல் அவ்வப்போது தண்ணீர் பாய்ச்சினாலே போதும்.

பெருநெல்லியைப் பொறுத்தவரை ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு சமயத்தில் காய்ப்புக்கு வரும்.

அதற்கு ஏற்ற மாதிரி, காஞ்சன், கிருஷ்ணா, சக்கையா, என்.ஏ-7 என பல்வேறு ரகங்களையும் கலந்து நட்டால், ஆண்டு முழுவதும் வருமானம் பார்க்கலாம்.நெல்லியை நடவு செய்த நான்கு மாதங்களிலேயே பூ பூக்க ஆரம்பித்து விடும்.அவற்றை உதிர்த்து விடவேண்டும்.

மூன்று வருடங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டும். அதன் பிறகு காய்ப்புக்கு அனுமதித்தால் நெல்லி ருசியாக இருப்பதுடன் மகசூலும் கூடும்.

நெல்லியின் ஆயுள் காலம் நாற்பது ஆண்டுகள்.ஆனால், ஒவ்வொரு பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை காய்ப்புத் திறன் குறையும்.அந்த நேரத்தில் மரத்தின் பக்க கிளைகளை வெட்டி விட வேண்டும். மீண்டும் விரல் தடிமனுக்கு கிளை வந்ததும் காய்க்க ஆரம்பித்து விடும்.

ஒரு ஏக்கரில் பெருநெல்லியும், ஊடுபயிராக சப்போட்டாவும் சாகுபடி செய்ய மணியன் சொல்லும் செலவு -வரவு கணக்கு

விவரம் :

செலவு…ரூ.16,400

வரவு…ரூ.95,000

நிகர லாபம்..ரூ.78,600

குழியெடுத்தல், செடி, நடவுச்செலவு ஒரு முறை மட்டுமே. அடுத்தடுத்த ஆண்டுகளில் அவையும் வருமானத்தில் சேர்ந்து விடும்.

இவர் சப்போட்டா கன்றை அரசுத் தோட்டக்கலைத் துறையில் இருந்து இலவசமாக பெற்றுள்ளதால், அதற்கான செலவும் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை (மேற்படி கணக்கு மணியன் சாகுபடி செய்யும் முறைகளை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இதை ஒப்பீட்டுக் கணக்காக மட்டுமே எடுத்துக் கொள்ளவும்).

நெல்லியை நடவு செய்த முதல் மூன்று ஆண்டுகளுக்கு மண்புழு உரம், கம்போஸ்ட் உரக்கலவையை மரத்துக்கு இரண்டு கிலோ வீதம், ஆறு மாதத்துக்கு ஒரு முறை வைக்க வேண்டும்.

நான்காவது ஆண்டில் மண்புழு உரம், கம்போஸ்ட் கலவையை மூன்று கிலோ வரை அடிப்பகுதியில் இருந்து ஒன்றரை அடி தள்ளி குழியெடுத்து அதில் போட்டு, மேல் மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும்.

மண்புழு உரத்தில் உள்ள பதினாறு வகை நுண்ணுயிரிகள் வெயில்பட்டு செயல்படாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், மண் போட்டு மூடி விடுவதால் நுண்ணுயிர்களின் செயல்பாடு முழுமையாகக் கிடைக்கும். முதல் நான்கு ஆண்டுகளுக்கு இதேபோல் உரங்களைக் கொடுத்தாலே மண் வளமாகிவிடும். பிறகு எந்த உரமும் தேவைப்படாது.

தோட்டத்தில் உள்ள புல், களைச் செடிகளைக் களைத்து செடிகளைச் சுற்றி மூடாக்கு போட்டுக் கொள்ளலாம். இதைத் தவிர வேறு எந்தப் பக்குவமும் தேவையில்லை.

நெல்லியைப் பொறுத்தவரை சாறுண்ணி, தண்டுத் துளைப்பான் தாக்குதல் அதிகமாக இருக்கும். சாறுண்ணிகள் இலையில் உள்ள பச்சயத்தைச் சுரண்டி விடுவதால், இலைகள் வெளிறிப் போய்விடும்.

தண்டுத் துளைப்பான், தண்டுக்குள் சென்று தங்கி விடுவதால் மகசூலும் குறைந்து விடும். பஞ்சகவ்யா அடிப்பதன் மூலம் சாறுண்ணிகளையும், தண்டுத் துளைப்பானையும் கட்டுப்படுத்தலாம்.

சாதாரணமாகவே தண்டுத் துளைப்பான்களை அடையாளம் கண்டுவிட முடியும். மரங்களில் இருக்கும் இவற்றை சிறிய குச்சியை வைத்துக் குத்தி, வெளியே எடுத்து விட வேண்டும். பொதுவாக, பிப்ரவரி முதல் மே ஜுலை முதல் செப்டம்பா என ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்யலாம்.

பல்வேறு ரகங்களையும் கலந்து நட்டிருந்தால், ஆண்டு முழுவதும் அறுவடை இருக்கும். ஓராண்டுக்கு ஒரு ஏக்கரில் இருந்து சராசரியாக நான்கு டன் முதல் 5 டன் வரை மகசூல் கிடைக்கும். இயற்கை முறை விளைபொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் குறைந்த பட்சம் கிலோவுக்கு 20 ரூபாயும், அதிகபட்சமாக 40 ரூபாயும் கிடைக்கும்.
சப்போட்டாவுக்கு தனியாக எந்தப் பராமரிப்பும் தேவைப்படாது.

நான்கு நெல்லிக்கு மத்தியில் ஒரு சப்போட்டா என்ற கணக்கில் நெல்லியைப் போலவே குழி எடுத்து நடவேண்டும்.

“நெல்லிக்கு ஊடுபயிரா சப்போட்டாவை நட்டு வைத்தது தவிர தனியாக எந்தப் பராமரிப்பும் செய்யவில்லை.

உரமும் கொடுக்கிறதில்லை. நெல்லிக்கு மட்டும்தான் உரம். ஆனாலும் சப்போட்டா நல்ல மகசூல் கொடுத்து காண்டு இருக்கிறது. சாதாரணமாக சப்போட்டாவை கிலோ 5 ரூபாய்னு வெளிவியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள்.

இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்கிற கடைகளில் கிலோவுக்கு 25 முதல் 30 ரூபாய் வரைக்கும் கிடைக்கிறது.

தொடர்புக்கு
மணியன்,
தெரிசனங்கோப்பு
அலைபேசி: 94431-27132

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline