கல்லுப்பட்டி கோபாலய்யா..

தான் பிறந்த மண்ணுக்கும், தான் சார்ந்த மனித சமூகத்திற்கும் நித்தமும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் இரவு பகல் பாராது செயல்படும் 83 வயது இளைஞர் ராஜகோபால் பற்றிய பதிவுதான் இது.
Tamil_News_large_110175720141028200535
தங்களது வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் வழிகாட்டும் மனிதர் குல மாணிக்கமாக கருதும் அந்த பகுதி மக்கள் அவரை மிகவும் மரியாதையுடன் கோபாலய்யா என்றே குறிப்பிடுகின்றனர்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் இருந்து ஒய்வு பெற்றவர்.விவசாயத்தை உயிராக நேசிக்கும் குடும்ப பின்னனி கொண்டவர் என்பதால் ஒய்வு பெற்றதுமே கலப்பையை எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டார்.

இவர் விவசாயத்தில் இறங்கிய போதுதான் ஒன்றை கவனித்தார்.

1955 -60 வது ஆண்டுகளில்தான் பசுமைப்புரட்சி என்ற பெயரிலும் நவீன விவசாயம் என்ற பெயரிலும் விவசாயம் ரசாயாணமாக்கப்பட்டது.விளை பொருட்கள் நஞ்சாக்கப்பட்டது.

அதுவரை பராம்பரிய விவசாயமே நடைபெற்றது.விதைத்துவிட்டு வந்தால் போதும் பிறகு அறுவடைக்கு மட்டுமே போய்க்கொண்டிருந்த காலமது.

மண்ணுக்குள் இருந்து நுண்ணுயிர்கள் எல்லாம் பூச்சிக்கொல்லி மருந்துகளால் தன் சக்தியையும் ஜீவனையும் இழந்திருந்தது.

இப்போது பராம்பரிய விவசாயம் செய்துவந்த அந்த தலைமுறை முடங்கிப் போய்விட்டது. இப்போது விவசாயம் செய்துவரும் மற்றும் செய்யவரும் புதியவர்களுக்கு பராம்பரிய விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத நிலை.ரசாயண உரங்களுடன் மட்டுமே உறவாட தெரிந்த கொடுமை.

பூச்சிகளிடம் இருந்து காப்பாற்றுகிறோம் என்று சொல்லி திராட்சை,முட்டைகோஸ் போன்ற உணவு பொருட்களை பூச்சி கொல்லி மருந்தில் முக்கி முக்கி எடுக்கிறார்கள்.இதன் காரணமாக என்னதான் கழுவி சாப்பிட்டாலும் அதனுள் ஊடூருவிக்கிடக்கும் ரசாயண நஞ்சு நம் கணையத்தில் இருந்து கர்ப்பப்பை வரை பிரச்னையை ஏற்படுத்தத்தான் செய்யும்.

இது திராட்சைக்கு மட்டுமில்லை ரசாயணமருந்துகள் தெளித்து உருவாக்கப்படும் எல்லா விதமான காய்கறிகள் பழங்கள் என்று எல்லாவற்றுக்கும் பொதுவானதே.

இதன் காரணமாக எனக்கு சொந்தமான தோட்டத்தில் பழைய பராம்பரிய முறையிலான விவசாயத்தை மட்டுமே மேற்கொள்கிறேன்.வீரிய ரகங்களை விட்டுவிட்டு நாட்டு ரக காய்கறிகளை பயிர் செய்கிறேன்.விளை குறைவாக கிடைத்தாலும் பராவாயில்லை மக்களுக்கு நஞ்சில்லாத உணவுப்பொருளை கொடுக்கும் திருப்தி ஏற்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமான முறையில் இயற்கை விவசாயம் செய்வது எப்படி என்பதை சொல்லித்தருகிறேன் அன்று மதியமே இயற்கை உணவு விருந்தும் வழங்குகிறேன் அதன் செயல்முறையுைம் சொல்லித்தருகிறேன்.

இப்படி வார்த்தைக்கு வார்த்தை இயற்கையை போற்றும் ராஜகோபால் கடந்த 18 ஆண்டுகளாக மதுரை அரவிந்த மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண்சிகிச்சை முகாமினை நகர் நல கமிட்டி என்ற அமைப்பின் மூலமாக நடத்திவருகிறார்.இந்த முகாமின் மூலம் இதுவரை 26 ஆயிரம் பேர் பலன் பெற்றுள்ளனர்.14 ஆயிரம் பேர் அறுவை போன்ற சிகிச்சை பெற்றுள்ளனர்.

எந்த நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும் இவரது அடுத்த கனவு கல்லுப்பட்டியில் இயற்கை வைத்தியசாலை அமைக்கவேண்டும் என்பதாகும்.இவருடன் பேசுவதற்கான எண்:98421 75940.

நன்றி :தினமலர்

One Response

  1. மாரிசெல்வம் 04/11/2014

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline