ஒரு கோழியின் கதை:
ஒரு ஊரில் ஒரு கோழி தன் இடத்தில் இருந்த உணவை உண்டு இனிமையாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அதற்கு ஒரு தானியம் கிடைக்க, அது அதை விதைத்து பயிராக்கி உண்ணலாமே என நினைத்தது.
”ஆனால் எனக்கு இந்த தானியத்தை விதைக்க உதவுவார்கள்” என புலம்பியது கோழி.
“என்னால் உதவ முடியாது, ஆனால் உனக்கு சில காபி கொட்டைகளை தருகிறேன். நீ அதை விதைத்து பணம் பண்ணுவதை விட்டுவிட்டு தானியத்தை பயிரிடுகிறேன் என்கிறாயே” என்றது வாத்து.
“என்னாலும் உனக்கு உதவ முடியாது, ஆனாலும் இந்த காபி கொட்டைகள் வளர்ந்தவுடன் அதை நான் உன்னிடமிருந்து விலை கொடுத்து வாங்கி கொள்கிறேன்” என்றது பன்னி.
“எனக்கும் அதே நிலைதான், என்னாலும் உதவ முடியாது, ஆனால் என்னால் உனக்கு இந்த காபி கொட்டைகளை விதைக்க பணம் தர முடியும்” என்றது பெருச்சாளி.
ஆக, கோழியும் தானியத்திற்கு பதிலாக காபி கொட்டைகளை விதைத்தது.
”எல்லாம் சரி, ஆனால் எனக்கு இந்த காபி கொட்டைகளை வளர்ப்பதற்கு யாரேனும் உதவ வருவார்களா” என வினவியது கோழி.
“என்னால் முடியாதுப்பா, இருப்பினும் இந்த காபி பயிர்கள் வளர என்னால் உனக்கு உரம் விற்பனை செய்ய முடியும்” என்றது வாத்து.
“எனக்கு உனக்கு உதவுவது முடியாது, இருப்பினும் இந்த காபி பயிர்கள் வளர என்னால் உனக்கு பூச்சி கொல்லிகளை விலைக்கு கொடுக்க முடியும்” என்றது பன்னி.
“என்ன உட்டுடுப்பா, உனக்கு இந்த உரத்தினையும், பூச்சி கொல்லிகளையும் வாங்குவதற்கு பணம் கடனாக தருகிறேன்” என்றது பெருச்சாளி.
ஆக, கோழி தனது கடும் உழைப்பினை காபி செடிகள் வளர உரத்தினை இட்டும், பூச்சி கொல்லிகள் அடித்தும் செலுத்தியது. அவ்வப்போது நாம பேசாம அந்த தானியத்தினை விதைத்திருந்தால் இத்தனை செலவு ஆகியிருக்காது என்கிற எண்ணம் வந்து வந்து போனபோதும் காபி செடிகள் அறுவடைக்கு பின் கிடைக்கும் பணத்தினை நினைத்து மனம் சாந்தியடைந்தது கோழி. அறுவடை காலமும் வந்தது.
”அப்பாடா, செடிகள் எல்லாம் நல்லா வளர்ந்திருக்கு; இனிமே பிரச்சினையில்ல, சரி இவற்றை யார் மூலமாக விற்பனை செய்வது? என கேட்டது கோழி.
“என்னால் முடியாது, ஆனால் உனக்கு இந்த காபி கொட்டைகளை வறுத்து பேக்கிங் செய்வதற்கு என்னுடைய தொழிற்சாலையின் உதவி உனக்கு கட்டாயம் தேவைப்படும்” என்றது வாத்து.
“ஆள உடு; இப்பல்லாம் காபி கொட்டைகள் விலை அடிமட்டத்தற்கு வந்துட்டுது” என்றது பன்னி.
“நம்மகிட்ட வராதே ஆமா, நீ உடனே என்னிடம் வாங்கின கடனையெல்லாம் திருப்பி கொடுத்துடு” என்றது பெருச்சாளி.
கோழிக்கு தான் ஏமாந்து விட்டோம்; சாப்பிடவும் எதுவுமில்லே என்பதும் புரிந்தது.
“எனக்கு யாரேனும் சாப்பிட கொடுப்பீர்களா” என்று பாவமாய் கேட்டது கோழி.
“முடியாது, உன்னிடம் சாப்பாடு வாங்குவதற்கு பைசாவே இல்ல?” என்றது வாத்து.
“முடியவே முடியாது; இங்கே எல்லாரும் காபி விதைக்க தொடங்கியதாலே சுற்றிலும் தானியங்களே இல்லாமல் போனதாலே உணவே கிடையாது” என்றது பன்னி.
“முடியாதுதான், ஆனாலும் நான் நீ கொடுக்கவேண்டிய பணத்திற்கு பதிலாக உன்னுடைய நிலத்தை எடுத்துகிறேன்; நீ வேறெங்கும் போகவேண்டாம்; இங்கேயே தங்கி எனக்கு வேலை பாரேன்” என்றது பெருச்சாளி.
இந்த கதையின் ஆங்கில மூலம் : THE TALE OF THE LITTLE RED HEN