விருதுநகர் மாவட்டத்தின் கடைக் கோடியில் கிடக்கிறது தேவதானம் கிராமம். ஊரெங்கும் பச்சைப் பசேல் மரங்கள் கண் சிமிட்டி அழைக்கின்றன. ‘‘எல்லாம் நம்ம வெத்தலை யாவாரி தலைமலை செய்ற வேலைதான்!’’
‘‘கோடி ரூவாயை ஒரு தட்டுலயும், ரெண்டு மரக்கன்னுகளை இன்னொரு தட்டுலயும் வெச்சு, ‘ரெண்டுல எது வேணும்?’னு கேட்டா, யோசிக்காம மரக்கன்னை எடுத்துக்கிடுற மனுஷன்!’’ என்று எல்லோரும் அடையாளம் காட்டுவது தலைமலையை!
மனிதரைத் தேடிப்பிடித்தால் வெள்ளந்திச் சிரிப்புடன் வரவேற்கிறார்…
‘‘பத்து வருஷத்துக்கு முன்ன ஒரு சம்பவம். ஊருக்கு வெளியே இருக்கிற பஸ் ஸ்டாப்ல வயசான ஒரு அம்மா பஸ்ஸுக்காக நின்னாங்க. அந்த இடத்துல ஒதுங்கி நிக்க நிழல் எதுவும் இல்லைன்னு எதிர் திசையில ஒரு மர நிழலில் போய் நின்னாங்க. பஸ் வந்தப்போ, வேகமா ஓடிப் போய் பிடிக்கப் போனதுல தடுமாறி கீழ விழுந்துட்டாங்க. பஸ்ஸை அவங்களால பிடிக்க முடியல. பாக்கப் பாவமா இருந்துச்சு.
நிழலுக்காக ஒதுங்க போய்தானே இப்படி அடி பட்டாங்க. நாளைக்கு வயசான காலத்துல நமக்கும் அதுதானே நடக்கும்னு நினைச்சேன். அன்னிக்கே ஒன்பது மரக்கன்னுகளை வாங்கியாந்து அந்தப் பகுதியில நட்டேன். அது கொஞ்சம் கொஞ்சமா வளர்றதையும், பஸ்ஸுக்காக காத்திருக்கிறவங்க அந்த நிழல்ல ஒதுங் கிறதையும் பாக்கும்போது மனசுக்குள்ள அப்படியரு சந்தோஷம் வரும். குழந்தையில்லாத எனக்கு அந்த மரங்கள் தான் பிள்ளைகளா தெரிஞ்சது.
சைக்கிள்ல வெத்தலையைக் கட்டிக் கிட்டு வியாபாரத்துக்குப் போறவன் நான். ஒரு நாளைக்கு நூத்தம்பது ரூபா வருதுனா, எண்பது ரூபா தனியா எடுத்து வெச்சுருவேன். அப்படிச் சேர்ற காசுல மரக்கன்னு வாங்கியாந்து ஊர்ல பொறம்போக்கு நிலத்துல வளக்க ஆரம்பிச்சேன். வேலை முடிஞ்சதும், பொழுதோட வந்து எல்லாத்துக்கும் தண்ணி ஊத்துவேன். செடிகளுக்குத் தகர வேலி போட்டு, அது வளந்து மரமாகுற வரைக்கும் நெதமும் கண்காணிப்பேன்.
ஒரு கட்டத்துல மரங்களோட எண்ணிக்கை ஆயிரத்தி ஐநூறைத் தாண்டிருச்சு. அவ்வளவையும் நான் ஒருத்தனே பாத்துக்க முடியாதுனு ஒரு வேலையாள் போட்டேன். எல்லா கன்னுகளுக்கும் நெதம் தண்ணி ஊத்துறதுதான் அவருக்கு வேலை.
ஊர் முழுக்க நான் மரம் நடுறதைப் பாத்த ஊர்க்காரங்க சிலபேர், தங்களோட சொந்த எடத்துல வளக்குறதுக்கு கன்னு கேட்டாங்க. ‘ஊர் பசுமையா இருக்கணும்.. அது பொது எடமா இருந்தா என்ன..? தனியார் எடமா இருந்தா என்ன..? அதனால கன்னு கேக்குற மக்களுக்கு என்னோட சொந்த செலவுலயே வாங்கி, அவங்க வீட்டுக்கே போய் நட்டுக் கொடுக்க ஆரம்பிச்சேன். இதுக்காகவே ஒரு நாத்தங்கால் போட்டிருக்கேன்.
என் உடம்புல சைக்கிள் மிதிக்க தெம்பு இருக்குற வரைக்கும் மரம் நட்டுக்கிட்டே இருப்பேங்க.’’ என்று கண்களில் ஒளி பொங்கச் சொன்னார் தலைமலை.
தலைமலையின் முயற்சியால் இப்பகுதியில் வளர்ந்து நிற்கும் மரங்களின் எண்ணிக்கை பத்தாயிரத் தைத் தொடும். இந்த சாதனைக்காக குஜராத் மாநில அரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இவருக்கு விருதுகளை வழங்கியிருக்கின்றன.
தேவதானம் கிராமச் சாலை யோரத்தில் தான் வைத்து வளர்ந்த நிற்கும் மரங்களை நமக்கு காட்டியபடியே வந்த தலைமலை, ஒரு மரத்தின் அடியில் நின்றபடி…‘‘உடம்பும் உசுரும் மனு ஷனுக்கு மட்டுமா இருக்கு..? முளைச்சு நிக்கிற மரம் ஒவ்வொண்ணும் மூச்சு விடுற சத்தம் கூட எனக்கு கேட்கும்!’’ என்றபடி புங்கை மரத்தின் கிளை களை ஆசையோடு தடவிக்கொடுத்தார்.
விழும் விதைகளெல்லாம் விருட்சங்களாவதில்லை என்றாலும் விருட்சங்களின் ஆரம்பம் தலைமலை போன்ற நல்ல விதைகள்தானோ!