இரட்சகனே சீக்கிரம் வா….
இந்தியாவில் தேர்தல் திருவிழா காலம். எல்லோரும் ரொம்ப பிஸியாக தங்களின் அடுத்த இரட்சகனை தேர்ந்தெடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த (ஆறறிவு) மனித குலத்தை நினைக்கும்போது மிகவும் கேவலமாக உள்ளது. தினமும் சில நூற்றுக்கணக்கான பறவைகள் எங்கள் வீட்டிலிருந்து 1 கிமீ தூரத்தில் உள்ள குளத்திற்கு வந்து செல்கின்றன. அவற்றுக்குள் கட்சி, கொடி, தலைவன், ஊழல், சாதி, மதம், கொலை, கொள்ளை, இலஞ்சம் என எதுவும் இல்லை (மிக முக்கியமாக) கற்பழிப்பு என்பது இல்லவே இல்லை. தங்களுக்கான உணவைத் தேடிக்கொண்டு அமைதியாக மாலையில் தங்கள் கூடுகளுக்கு திரும்புகின்றன. மேலே வானத்தைப் பார்த்து துப்பிக்கொண்டேன். என் முகத்தில் எச்சில் துளிகள்…
எத்தனையோ தேர்தலை இந்த நாடு மட்டுமல்ல இந்த உலகமே அடிக்கடி சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நம் வாழ்க்கையை பாலிஷ் போட்டு மெருகேற்ற நமக்கு ஒரு இரட்சகன் வந்துவிட மாட்டானா என்று நம்பிக்கையில் வோட்டு போடுகிறார்கள் கொஞ்சம் கூட தன்னம்பிக்கையில்லாத இந்த மக்கள், அவர்கள் வாழ்க்கையில் விழுவது மொத்தமும் மண் மட்டுமே.
உலகிலுள்ள எல்லா அரசாங்கமும் தங்கள் கஜானாக்களை பெருமுதலாளிகளுக்கு (கார்ப்பரேட்) விற்று பல வருடங்கள் ஆகிவிட்டது. எனவே இந்த தேர்தல் என்பது கார்ப்பரேட்கள் அவர்களுக்காக, அவர்களால், அவர்கள் நடத்தப்படுவது ஆகும். இன்னும் புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமானால் உலகத்திலுள்ள 2500-3000 பெருமுதலாளிகள் தான் இந்த உலகத்திலுள்ள 700+ கோடி மக்களை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
எனவே நாம் தேர்ந்தெடுக்க காத்திருக்கும் ஏதாவது ஒரு கட்சியை சேர்ந்த இந்த இரட்சகன் (அவன் யாராக இருந்தாலும் சரி) மொத்தத்தில் கார்ப்பரேட்களின் அடிமை. அவன் 5 ஆண்டும் கார்ப்பரேட் கக்கூஸை மட்டுமே கழுவ போகிறான். நாமும் ஒவ்வொரு 5 ஆண்டுகளிலும் நம் காய்ந்த குண்டியை ஒவ்வொரு இரட்சகனிடமும் காட்டிக்கொண்டுதான் இருக்கிறோம். அது இன்றுவரை கழுவியபாடில்லை.
இது புரியாமல் கருமம் எந்தப் பக்கம் போனாலும், “அவன் வந்தா இத பண்ணுவான்… இல்ல இந்த ஊழல் பெருச்சாளி வந்துரவே கூடாது… அந்த நாயிலாம் எலக்ஷன்ல நிக்குது அத செருப்பாலே அடிக்கணும்…” எனப் பேசிப் பேசி பொழுதைப் போக்குகிறார்கள். அதற்கேற்றார் போல ஊடகங்களும் நன்றாக தீனி போடுகின்றன.
இதற்கிடையில் சங்கரன்கோவிலில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒரு குழந்தையை, ரோபோட்டை கொண்டு 6 மணிநேர போராட்டத்திற்குப் பின் காப்பாற்றி விட்டார்கள் என பெருமையாக ஊடகங்கள் பேசிக் கொள்கின்றன. அந்த ரோபோட்டை வடிவமைத்தவர்களை (உங்களுக்கு ஏதாவது ஒரு விருது கன்பார்ம்) பேட்டியும் எடுத்து போடுகிறார்கள் இந்த மானங்கெட்டவர்கள்.
மனித மூளை சீழ்பிடித்து எப்படியெல்லாம் யோசிக்கிறது, குழந்தைகள் தொடர்ந்து ஆழ்துளை கிணற்றில் விழுந்து கொண்டிருந்தால் அதன் படிப்பினை ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புணர்வை இன்னும் கூட்ட வேண்டும் என்பதாக தான் இருக்க வேண்டும். ஆனால் கேவலம் அதற்கு ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டு, இனி எல்லோருமே தங்கள் குழந்தைகளை பிடித்து ஆழ்துளை கிணற்றுக்குள் தள்ளி விட்டு கொண்டு இந்த கருவியால் எடுத்தும் கொள்ளலாம் என்பதாகவே இருக்கிறது.
விரைவில் ஏதாவது ஒரு நிறுவனம் இதனை அதிக அளவு உற்பத்தி செய்து சந்தைப்படுத்தலாம். ஏழைகளுக்கு அரசு மானியம் கட்டாயம் வழங்கப்படும்.
தொடர்ந்து ஆழ்துளை கிணற்றில் விழுந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கூட ஒரு பாதுகாப்பை வழங்க முடியாத இந்தப் பொறுப்பற்ற சமுதாயம், தங்களை எப்படி இந்த தேர்தல் என்னும் பொதக்குழிக்குள் இருந்து காப்பாற்றிக் கொள்ளப் போகிறது?