இயற்கை விவசாய முறைக்கு திரும்புவதற்கு எடுத்து கொள்ளும் முயற்சியில் நமக்கு பெரும் சவால்களாக இருப்பவைகளில் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன் .
1. மனநிலை : கடந்த ஓரிரு தலைமுறைகளாக பழகி போன முறையிலிருந்து மாறிட மறுக்கும் விவசாயிகளின் நிலை மிகவும் வருந்த தக்கது. அல்லது அவர்கள் மாறிடா வண்ணம் பார்த்துக் கொள்ளும் இன்றைய சூழல்கள் / வெவ்வேறு காரணிகள் .
2. பொருளாதார நிலை: உடனடி பொருளாதார தேவைகள், தவறென்று தெரிந்தும் குறுகிய கால தேவைகளுக்குள் விவசாயிகளை முடக்கி விடுகிறது இன்றைய அதிவேக பயணத்திலிருக்கும் பணத்தை மையமாக கொண்ட வாழும் முறை.
3. சமூக மதிப்பு : உழவை இழிவென்று நினைத்து பணியாற்ற மறுக்கும் இளைய தலைமுறை. தனக்கு கிடைத்த சமூக அவமதிப்புகளால் மனமுடைந்து போன விவசாயிகள் தங்கள் குழந்தைகளை அவற்றிலிருந்து காப்பாற்ற அவர்களே மனமுவந்து வேறு துறைகளுக்கு வழியனுப்பி வைக்க வழி செய்கிறது.
4. அரசு திட்டங்கள் : பசுமை புரட்சிக்கு பின்பான விவசாய வழிமுறைகளை ஊக்குவிப்பதாக மட்டுமே உள்ளது. திட்டங்கள் சரியான பயணாளிகளை எப்போதும் சென்றடைவதில்லை. இதற்கான காரணங்களை இங்கு பட்டியலிட்டு தீர்த்து விட இயலாது.
5. ஆட்கள் தேவை : இத்தனை போராட்டங்களுக்கும் மத்தியில் உழவை தன் உயிரினும் மேலாய் மதித்து உழைத்து நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுடன் இணைந்து செயலாற்ற தேவையான மனிதவளமின்மை மிகப்பெரிய சவாலாக உள்ளது.
6. நீர் ஆதாரங்களும் பருவநிலையும் : விவசாயத்திற்கான நீர் தேவை நாளும் மற்றவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலையில் தான் உள்ளது. பருவ மழையில் கிடைக்கும் நீரை தேக்கி பயன்படுத்தி கொள்ளலாம் என்றால் அதற்கான சிறப்பு திட்டங்களோ மிகவும் அரிதாகவே சரியான முறையில் செயல்படுத்த படுகின்றன. இவையெல்லாம் போதாதற்கு பருவமழை ஒவ்வொரு முறையும் ஏமாற்றி கொண்டிருக்கிறது.
7. கால்நடைகள்: இயற்கை விவசாயத்திற்கு கால்நடைகளின் பங்கு மிக அவசியமானது. ஆனால் அவைகளை வைத்து பாதுகாப்பதே பெரும் கேள்விகுறியாகி விடுகிறது மேற்சொன்ன அதே காரணங்களால்.
8. அனுபவம் / அறிவு: நமது அறிவு அனைத்தும், அது அனுபவம், அனுபவத்தில் தான் வரும் என்ற பெயரில் பல நேரங்களில் பகிர்ந்து கொள்ளபடாமலே மடிந்து போய் விடுகிறது.