இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை…!!!

பண்ணையார்

நாங்கள் முழுக்க முழுக்க வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்களைப் படித்து அதன்படி விவசாயம் செய்கிறோம்.

விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு! இன்றைக்கு இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற குரல் ஒட்டுமொத்தமாக ஒலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இயற்கை விவசாயத்தில் சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறார் வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த தீபலட்சுமி. அவரிடம் ஒரு நேர்காணல்.

எம்.சி.ஏ. படித்திருக்கும் நீங்கள் விவசாயத்துறையைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

நான் பட்டப்படிப்பு முடித்ததும் பிரபலமான மருத்துவமனையில் ஒன்றில் பணிபுரிந்தேன். ஆனால் என் மனதில் விவசாயம் பற்றிய சிந்தனையே இருந்தது. அதற்குக் காரணம், நான் வளர்ந்த சூழல்! சிறு வயதில் நான் பாட்டி வீட்டில் வளர்ந்தேன். சிறிய கிராமம் அது. அங்கு பலவிதமான பயிர்களை விவசாயம் செய்வார்கள். கூடவே ஆடு, மாடு, முயல், கோழி என்று கால்நடை வளர்ப்பும் உண்டு. திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்தவுடன் வேலையை விட்டு விட்டேன். என் கணவர் பயோடெக்னாலஜி துறையில் பேராசிரியர். என் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அவர், எனக்காக விவசாய நிலம் பார்க்க ஆரம்பித்தார். வேலூர்- சித்தூர் நெடுஞ்சாலையில் ஆந்திரா பார்டரில் கொள்ளமடு என்னும் கிராமத்தில் மூன்று ஏக்கர் நிலம் வாங்கினோம். அதுவே என் விவசாய ஆர்வத்துக்கு போடப்பட்ட முதல் பாதை!

நீங்கள் விரும்பியபடியே விவசாயம் செய்கிறீர்களா?

ஆமாம். நாங்கள் முழுக்க முழுக்க வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்களைப் படித்து அதன்படி விவசாயம் செய்கிறோம். இதற்கு ஒருங்கிணைந்த பண்ணை முறை என்று பெயர். மொத்தமுள்ள 3 ஏக்கரில் 22 சென்ட் நிலத்தில் ஆட்டுப்பட்டி, மாட்டுக்கொட்டகை, வீடு அமைத்தோம். 23 சென்ட் நிலத்தில் மீன் குளம், 80 சென்ட் நிலத்தில் கடலை, நெல், மாற்றுத் தானியங்கள் என சுழற்சி பயிர் முறை செய்கிறோம். 30 சென்ட் இடத்தில் சேம்பு, 40 சென்ட் நிலத்தில் அகத்திக்கீரை, வேலி மசால், முயல் மசால், சூபாபுல் போன்ற பசுந்தீவனங்களை விளைவிக்கிறோம். அதோடு கிணறு, வண்டிப்பாதைக்கும் இடங்களைப் பிரித்தோம். நம் கையில் இருக்கும் குறைந்த

நிலத்திலேயே இப்படி தனித்தனியாகப் பிரித்து விவசாயம் செய்யலாம். இதுதான் இயற்கை வேளாண்மை கூட்டு விவசாய முறை.

நீங்கள் எதிர்பார்த்தபடி லாபம் கிடைத்ததா?

நாங்கள் எதிர்பார்த்தது நடந்தது. முதலில் 80 சென்ட் நிலத்தைப் பண்படுத்தி இயற்கை உரம் போட்டு, மானாவாரியாக நிலக்கடலை விதைத்தோம். நல்ல விளைச்சல்! பத்து மூட்டைகள் வரை கிடைத்தன. நிலக்கடலைக்குப் பிறகு நெல் நடவு செய்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லையானாலும் நஷ்டம் ஏற்படவில்லை. மேலும் அரைக்கீரை, சிறுகீரைகளை விதைத்து, மண்புழு உரம், வேப்பம்புண்ணாக்கு போட்டு விளைவித்ததில் பூச்சி தாக்குதல் ஏதுமில்லாமல் கீரைகள் நன்கு செழிப்பாக வளர்ந்தன. 10 சென்ட் நிலத்தில் ஆயிரம் கட்டு கீரைகள் வரை கிடைத்தன. நல்ல லாமும் கிடைத்தது.

இப்போது நீண்ட நாள்கள் பலன் தருகின்ற எலுமிச்சை மரங்களை நட்டு வளர்க்கிறோம். பாதை ஓரங்களில் தென்னை, மாதுளை, வாழை, கொய்யா, பலா, சப்போட்டா போன்ற பழ மரங்களையும் நட்டு வளர்க்கிறோம். இவை வருடம் முழுவதும் மாற்றி மாற்றி பலன் தரக்கூடியவை.

கால்நடைகளையும் வளர்க்கிறீர்களா?

காசர்கோடு குட்டை ரக மாடுகள் வாங்கினோம். இப்போது நிறைய மாடுகளாக பெருகியுள்ளன. மாடுகளின் சாணம் எருவாகிறது. அது இயற்கை உரமான பஞ்சகவ்யம் தயாரிக்கவும், மண்புழு உரம் தயாரிக்கவும் பயன் படுகிறது.

மாடுகளோடு ஓஸ்மானபாடி ஆடுகளையும் வாங்கி ஆட்டுப்பண்ணையை நடத்துகிறோம். இந்த ஆடுகள் மகாராஷ்டிரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவை. இவற்றிற்கான தீவனமும் எங்கள் நிலத்திலேயே பயிர் செய்வதால் கால்நடைகளுக்கு நல்ல தீவனமும் கிடைக்கிறது. ஆடுகள் மூலமும் நல்ல எருகிடைக்கிறது. இவற்றுடன் கோழிகளையும் வளர்க்கிறோம். கோழி முட்டைகள் விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கிறது. எங்களது இயற்கை வேளாண்மை விவசாயத் தொழில் நன்கு லாபகரமாகவே உள்ளது.

விவசாயத்தை லாபகரமாகச் செய்வது பற்றிய நுட்பத்தைப் புரிந்துகொண்டாலே போதும், வெற்றிமேல் வெற்றிதான்!

By – வாணி தேவி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.