பண்ணைக் கழிவுகளை மூடாக்காகப் பயன்படுத்தி 23 வகை காய்கறிகள் மற்றும் பழங்களை இயற்கை முறையில் லாபகரமாகப் பயிரிட்டு வருகிறார், ஈரோடு மாவட்டம் நசியனூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன சுந்தரம். தான் இயற்கை விவசாயம் செய்து வருவதோடு தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மட்டுமல்லாமல், மலேசியா சென்றும் விவசாயிகளுக்கு இயற்கை முறையில் வெற்றிகரமாக விவசாயம் செய்வது எப்படி என்றும் பயிற்சியளித்து வருகிறார் மோகன சுந்தரம்.
எங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் 15 ஆண்டுகளாக இயற்கை முறையில் விவசாயம் செய்கிறேன். மா, வாழை, சப்போட்டா, பப்பாளி, கற்றாழை, வெங்காயம், தக்காளி, அவரை, வெண்டை, கீரை, மஞ்சள், பாகற்காய், கத்தரிக்காய் என்று மொத்தம் 23 பழ வகைகளையும் காய்கறிகளையும் பயிரிடுகிறேன். பொதுவாக எல்லோரும் ஒரு நேரத்தில் ஒரு பயிரைத்தான் பயிர் செய்வார்கள். ஆனால், நான் இப்படிப் பல வகை காய்கறிகளையும் ஒரே நேரத்தில் சேர்த்துதான் பயிர் செய்வேன்.
பொதுவாகவே காய்கறி விளைச்சலுக்கு செம்மண்ணும் சரளை மண்ணும்தான் சிறந்தவை. என்னுடைய நிலம், மணல் கலந்த சரளை மண். இப்படி ஒரே நேரத்தில் பல காய்கறிகளையும் பயிர் செய்வதால், பூச்சிகளின் தாக்குதல் மிகக் குறைவாக உள்ளது. அதேபோல விதைகளையும் நான் வெளியில் வாங்குவது கிடையாது. காய்கறிகளைப் பறிக்கும்போது, நல்ல தரமான காய்கறியிலிருந்து விதைகளை தனியே எடுத்து காய வைத்துப் பாதுகாத்து வைத்துக் கொள்வேன்.
காய வைத்த விதைகளை எடுத்து நாற்று பாவ வேண்டும். நாற்று கொஞ்சம் வளர்ந்தவுடன் வயலில் பாத்தி கட்டி, மூடாக்கு முறையில் நட வேண்டும். காய்கறிகள் 45 நாட்களிலிருந்து 60 நாட்களுக்குள்ளாகவும், பப்பாளியை தவிர்த்து மற்ற பழ மரங்கள் 3 வருடத்திற்குள்ளும் நல்ல மகசூல் கொடுக்க ஆரம்பிக்கும். பெரும்பாலும் சப்போட்டா மரம் 7 மாதங்களிலேயே பூக்கள் விட ஆரம்பிக்கும். இந்தப் பூக்களைப் பறித்து விட வேண்டும்.
2 ஆண்டுகள் கழித்து சப்போட்டா மரம் நன்கு வளர்ந்தவுடன் கிடைக்கும் பழத்திலிருந்துதான் விதைகள் எடுக்க வேண்டும். முதல் பூக்களைக் காய்க்க விட்டால், மகசூல் கொடுப்பது வரவரக் குறைந்துவிடும் என்பதால்தான் அந்தப் பூக்களைப் பறித்து விட வேண்டும.
நான் சாகுபடி செய்வது எல்லாம் நாட்டு ரகங்கள் என்பதால், ஈரோட்டைச் சுற்றியிருக்கிற மக்களும் வியாபாரிகளும் என் நிலத்திற்கே நேரடியாக வந்து காய்கறிகளையும் பப்பாளி, நார்த்தை, எலுமிச்சை போன்ற பழங்களையும் வாங்கிச் செல்கிறார்கள். வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய். இயற்கை முறையில் விளைவித்த என் தக்காளியின் விலை 15 ரூபாய். ஈரோட்டுல இருக்கும் பசுமை அங்காடிகளுக்கும் காய்கறிகளை அனுப்பி வைக்கிறேன்.
கால்நடைகளின் பண்ணைக் கழிவுகளை வைத்து ஒரு பார் விட்டு ஒரு பார் மூடாக்கு போட்டு விவசாயம் செய்யறதால மண் செழிப்படைந்து, காய்கறிகளில் தொடர்ந்து காய்ப்பு வந்துக்கிட்டே இருக்கு. இயற்கை முறையில் விவசாயம் செய்வதால், முழுக்க முழுக்க லாபம் மட்டுமே கிடைக்குது.
காய்கறி சாகுபடிக்கான முதலீட்டுச் செலவு என்பது களை எடுக்கிறதுக்குக் கொடுக்கிற ஆட்கள் கூலி மட்டும்தான். வீட்டுல 5 மாடு, 20 ஆடுகள் வச்சு, வளர்த்துட்டு வர்றேன். அதுகளோட சாணமும் கோமியமும் பயிர்களுக்கு உரமாகப் பயன்படுகின்றன. ரசாயன உரத்தைப் போட்டு பயிரிடும் விவசாயிகளை விட இயற்கை விவசாயத்துல 40 சதவிகிதத்துக்கும் மேல லாபம் பார்க்கலாம்” என்று கூறும் மோகன சுந்தரம், இயற்கை உரமான பஞ்சகவ்யம் தயாரித்து மற்ற விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடியில் அதிக விளைச்சல் பெற மோகன சுந்தரம் கூறும் டிப்ஸ்:
பழங்கள் மற்றும் காய்கறிகளில் சத்துக்கள் அதிகமென்பதால், ரசாயன உரங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
மூடாக்கு முறையைப் பயன்படுத்தினால், தண்ணீரை மிச்சப்படுத்தி மண்ணையும் செழிப்பாக்கலாம்.
உரமாகப் பயன்படும் பஞ்சகவ்யத்துடன் சூடோமோனாசைக் கலந்து தெளித்தால், பூச்சிகள் அண்டவே அண்டாது.
மாடுகள் வைத்திருப்பவர்கள், அதன் சிறுநீருடன் கடுக்காயை ஊற வைத்து, பயிர்களுக்கு நீருடன் பாய்ச்சினால் விளைச்சல் பெருகும்
மோகன சுந்தரம் செல் நம்பர்: 94880 20646
panchakavyam kidaikkuma? what price? i will come to your farm and buy please reply to me.
அருமை ஐயா