இப்படித்தான் தயாரிக்கணும் இயற்கை விபூதி !
இயற்கை விபூதி தயாரிக்க நாட்டுப்பசு மாட்டின் சாணம்தான் உகந்தது. 20 கிலோ சாணத்தை கல், மண் இல்லாமல் சுத்தப்படுத்தி, சின்னச் சின்ன வடை போல தட்டி, ஒரு வாரம் வெயிலில் காய வைக்க வேண்டும்.
காய்ந்த வறட்டியை துணியில் மூட்டையாகக் கட்டி, பூச்சிகள் தாக்காத அளவுக்கு உயரமான இடத்தில் கட்டித் தொங்கவிட வேண்டும். மூன்று மாதங்களுக்கு பிறகு,
10 அடிக்கு 10 அடி அளவில் செங்கற்களைப் பரப்பி, அதன்மீது நெல் கருக்காவை (பதர்) பரப்ப வேண்டும். பிறகு, காயவைத்த சாணத்தை, தண்ணீரில் நனைத்து, செங்கற்கள் மீது பரப்பி, மீண்டும் கருக்காவைப் பரப்ப வேண்டும்.
இப்படி, கருக்கா, வறட்டி என்று மாற்றி மாற்றி, பரப்பி கோபுரம் போல, பத்து அடுக்கு உருவாக்க வேண்டும். அதன் உச்சியில் திருநீற்றுப் பச்சிலைச் செடியை வைத்து, குறைந்த அளவில் சூடத்தை வைத்து மூட்டம் போட வேண்டும். தீ எரியாமல், புகையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் வரை, இப்படி புகைந்து கொண்டிருக்கும். நன்கு வெந்த நிலையில் கெட்டியான விபூதியாகக் கிடைக்கும்.
இதை நன்கு இடித்துத் தூளாக்கி, இரவு நேரத்தில் மூன்று நாட்கள் பரப்பி வைத்து, நன்கு சலித்துப் பயன்படுத்தலாம். 20 கிலோ சாணத்தில் இருந்து, 2 கிலோ விபூதி கிடைக்கும். இன்றைய சந்தை நிலவரப்படி, ஒரு கிலோ விபூதி குறைந்தபட்சம் 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
செம்புப் பாத்திரம்
கோயில்கள்ல… பயன்படுத்தற பாத்திரங்கள், கோபுர கலசம்னு பலதும் செம்புல செய்ததான் இருக்கும். குறிப்பா பெருமாள் கோயில்ல தீர்த்தம் கொடுக்கும்போது கவனிச்சுப் பாருங்க. கோயில்ல, தங்கம், வெள்ளினு சகலவிதமான பாத்திரப் பண்டம் இருந்தாலும்… துளசியும், தண்ணியும் கலந்த தீர்த்தத்தைக் கொடுக்கறதுக்கு, செம்புப் பாத்திரத்தைத்தான் பயன்படுத்துவாங்க. இதுல முக்கியமான நுட்பம் இருக்கு. செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சிருந்தா, அதுல இருக்கற கெட்டது செய்யற நுண்ணுயிரிங்க தன்னால நீங்கிடும். அதனாலதான், வீட்டுலகூட செம்புப் பாத்திரத்துல தண்ணிய சேமிச்சு வெச்சு பயன்படுத்துற பழக்கம் காலகாலமா நம்மகிட்ட இருந்துச்சு. செம்புப் பாத்திரங்கள் ஒரு சொத்தாவும் இருக்கும். ஆனா, இப்போ, ‘வாட்டர் ஃபில்டர்’னு ஒரு வஸ்துக்கு தண்ணியை சுத்தம் பண்றதுக்காக ஆயிரக்கணக்குல செலவழிக்கிறோம்!