ஆஸ்துமாவை அகற்றிட

ஆஸ்துமா என்னும் நோய் நுரையீரலுக்குக் காற்றைக் கொண்டுசெல்லும் மூச்சுப்பாதை (Airway)வீங்கி (Inflammation) குறுகுவதால் ஏற்படுகிறது.

ஆஸ்துமாவை ஏற்படுத்தும் காரணிகள்:

10438321_403551126497561_1066608394644448546_n

ஒவ்வாமையின் விளைவாகவே பெரும்பாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது. தூசு, குளிர்ந்த காற்று, புகை, மூச்சுப்பாதையில் ஏற்படும் தொற்றுகள், ரசாயனப் பொருட்கள், புகைபிடித்தல், மகரந்தங்கள், வளர்ப்புப் பிராணிகளின் முடிகள், வாசனைத் திரவியங்கள் போன்றவை ஏற்படுத்தும் ஒவ்வாமையின் விளைவுதான் ஆஸ்துமாவின் வெளிப்பாடு.

அறிகுறிகள்:

சளியுடனோ அல்லது சளி இல்லாமலோ இருமல் தொடர்ந்து இருக்கும். ஒரு சுவாசத்துக்கும் அடுத்த சுவாசத்துக்கும் இடைப்பட்ட நேரம் குறைந்து காணப்படும். இழுப்பானது அதிகாலை மற்றும் இரவில் அதிகமாக இருக்கும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

முசுமுசுக்கை இலைப்பொடி, மற்றும் தூதுவளை இலைப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் தேன் சேர்த்து உண்ணலாம்.

உத்தாமணி இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் சேர்த்து அருந்தலாம்.

முட்சங்கன் இலையை அரைத்து, நெல்லிக்காய் அளவு பாலில் கலந்து சாப்பிடலாம்.

நஞ்சறுப்பான் இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து அதில் 500 மிகி அளவு மூன்று வேளைகள் தேனில் குழைத்து அருந்தலாம்.

திப்பிலிப் பொடியுடன் கம்மாறு வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.

செடி, திப்பிலி, நாயுருவி விதை, சீரகம், இந்துப்பு சமஅளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம்.

கோரைக்கிழங்கு, சுக்கு, கடுக்காய்த்தோல் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் கலந்து இருவேளை உண்ணலாம்.

சீந்தில் கொடி, ஆடாதோடை, கண்டங்கத்திரி இவற்றைச் சம அளவு எடுத்து, அரைத்து, அதில் நெய் சேர்த்துக் காய்ச்சித் தினசரி இருவேளை ஒரு ஸ்பூன் அருந்தலாம்.

லவங்கம், சாதிக்காய், திப்பிலி வகைக்கு 1 பங்கு, மிளகு 2 பங்கு, தான்றிக்காய் 3 பங்கு, சுக்கு 4 பங்கு சேர்த்துத் தூள் செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து அரை ஸ்பூன் காலை மாலை உண்ணலாம்.

இஞ்சிச்சாறு, மாதுளம்பூச்சாறு, தேன் சம அளவு கலந்து 30 மிலி இருவேளை பருகலாம்.

இம்பூறல் இலைப் பொடியுடன் இரண்டு பங்கு அரிசி மாவு சேர்த்து அடையாகச் செய்து சிற்றுண்டி போலச் சாப்பிடலாம்.

ஆடாதோடை இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து அருந்தலாம்.

மூங்கிலுப்பை வேளைக்கு அரை ஸ்பூன் வீதம் கொடுக்கலாம்.

மூக்கிரட்டை வேரை அரைக் கைப்பிடி எடுத்து ஒன்றிரண்டாகச் சிதைத்து, 4 பங்கு நீர் சேர்த்து 1 பங்காக வற்றவைத்து இருவேளை அருந்தலாம்.

மிளகரணை இலையை உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து உண்ணலாம்.

சிற்றரத்தை, ஒமம், அக்கரகாரம் சம அளவு எடுத்துப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து சாப்பிடலாம்.

துளசி, தும்பை இலை சம அளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம்.

தவிர்க்க வேண்டியவை:

கிரீம் பிஸ்கட், குளிர்பானங்கள், கலர் சேர்க்கப்பட்ட உணவுகள், எண்ணெய், கொழுப்பு, வாழைப்பழம், திராட்சை, எலுமிச்சை, வாசனைத் திரவிங்கள், ஜஸ்கிரீம், கத்திரிக்காய், அதிகக் குளிர், பனி, குளிரூட்டப்பட்ட அறை.

One Response

  1. pazhanivel 15/08/2016

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline