ஆர்.டி.ஜி.எஸ். என்பது நிகழ் நேரப் பெருந்திரள் தீர்வு (Real Time Gross Settlement) என்பதன் சுருக்கம் ஆகும். பெயரில் குறிப்பிட்டுள்ளபடி தீர்வு காத்திருக்கும் நேரம் ஏதும் இல்லாமல் நிகழ்நேரத்திலேயே (தொடர்ச்சியாக) நிகரத்தொகை கணக்கீடு ஏதும் இன்றி நடைபெறுகிறது. மொத்தப் பணமதிப்புத் தீர்வு என்பதன் பொருள் பணப் பரிமாற்றங்கள் ஒன்றின் பின் ஒன்றாக (அதாவது ஒரு பணப் பரிமாற்ற அறிவுறுத்தலின் பின் அடுத்தது என்ற அடிப்படையில்) தீர்க்கப் படுகிறது என்பதாகும்
தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை என்.இ.எப்.டி என்பது வலைத்தள இணைப்பின் மூலமாக ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தின் மூலம், முக்கியமாக இந்தியாவிலுள்ள வங்கிகளுக்காக செய்யப்படும் பணப் பரிமாற்றம். ஏதேனும் ஒரு வங்கியின் கிளையில் கணக்கு வைத்திருக்கும் தனி நபர்கள், வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் முதலானோர் இந்த முறை மூலமாக பணம் பெற்றுக் கொள்ள முடியும்.
என்.இ.எப்.டி மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். இடையிலான வித்தியாசங்கள்:
1. இந்த இரண்டுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசம் தீர்வு நடைபெறும் நேரம் தான். ஆர்.டி.ஜி.எஸ். மொத்தப் பண மதிப்புத் தீர்வு அடிப்படையிலானது. இதில் பணப் பரிமாற்றங்கள் ஒவ்வொன்றும் அப்போதைக்கப்போது தீர்க்கப்படும். என்.இ.எப்.டி காலந்தாழ்த்தப்பட்ட நிகரத் தொகை அடிப்படையில் செய்யப்படும் மின்னணு பணப் பரிவர்த்தனை ஆகும். இதில் பணப்பரிவர்த்தனைகள் தொகுக்கப்பட்டு மொத்தமாக தீர்வு செய்யப்படுகின்றன.
2. மத்திய ரிசர்வ் வங்கி விதிகளின்படி ஆர்.டி.ஜி.எஸ் செய்வதற்கான குறைந்த பட்ச அளவு ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும். என்.இ.எப்.டி மூலமாக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு குறைந்தபட்சம் அதிகபட்சம் என்று எந்த வரைமுறைகளும் இல்லை.
3. ஆர்.டி.ஜி.எஸ். தொடர்ச்சியாக நிகழ் நேர அடிப்படையில் நடைபெறுகிறது. என்.இ.எப்.டி மணிநேர அடிப்படையில் நடைபெறுகிறது. வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை ஒன்பது மணி முதல் மாலை ஏழு மணி வரை பதினோரு முறை தீர்வுகள் நடைபெறுகின்றன. சனிக்கிழமைகளில் காலை ஒன்பது மணி முதல் மதியம் ஒரு மணி வரை ஐந்து முறை தீர்வுகள் நடைபெறுகின்றன.
பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள்:
என்.இ.எப்.டி:
ரூ. 1,00,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு – ஐந்து ரூபாய்க்கு மிகாமல் (சேவை வரி நீங்கலாக).
ரூ. 1,00,000 முதல் ரூ. 2,00,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு – பதினைந்து ரூபாய்க்கு மிகாமல் (சேவை வரி நீங்கலாக).
ரூ. 2,00,000க்கும் அதிமான பரிவர்த்தனைகளுக்கு – இருபத்தி ஐந்து ரூபாய்க்கு மிகாமல் (சேவை வரி நீங்கலாக).
ஆர்.டி.ஜி.எஸ்:
ரூ. 2,00,000 முதல் ரூ. 5,00,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு – ஒரு பரிவர்த்தனைக்கு முப்பது ரூபாய்க்கு மிகாமல்.
ரூ. 5,00,000க்கும் அதிமான பரிவர்த்தனைகளுக்கு – ஒரு பரிவர்த்தனைக்கு ஐம்பத்தி ஐந்து ரூபாய்க்கு மிகாமல்.