வேலிக்கு மாற்றாக வளர்க்கலாம் விளா பழ மரம்
நான்கு ஆண்டுகளில் பலன் தரும் விளாம் மர வகையை உருவாக்கியுள்ள ஜெகநாத ராஜா: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், என் சொந்த ஊர். என்னுடைய சிறு வயதில் எங்கள் பகுதியில் மட்டும், ஆயிரக்கணக்கான விளாம் மரங்கள் இருந்தன. அவற்றில், 100 வயதுடைய மரங்களும் அடங்கும்.
ஆனால், இப்போது அவற்றை விரல் விட்டு எண்ணி விடலாம். இதே நிலை தொடர்ந்தால், இன்னும், 20 ஆண்டுகளில் மீதமுள்ள விளாம் மரங்களும் காணாமல் போய்விடும். காய்ப்புக்கு வர, குறைந்தது 20 ஆண்டு காலம் எடுத்துக் கொள்வதே, விளாம் மரங்களின் அழிவுக்கு முக்கியக் காரணம்.
எனவே, குறைந்த ஆண்டில் பலன் தரும் விளாம் மரத்தை உருவாக்க முடிவு செய்தேன். நான்கு ஆண்டுகளுக்கு முன், நன்கு வளர்ந்த தாய் விளாம் மரத்தில், மென்தண்டு ஒட்டு முறையில் ஒட்டுக்கட்டி, புதிய வகை மரக்கன்றை உருவாக்கினேன்.
இந்தப் புதிய வகை கன்று, நான்கு ஆண்டுகளிலேயே காய்ப்புக்கு வந்து விடுவதுடன், மூன்று ஆண்டுகளில் 20 அடி உயரம் வளரும். இந்தப் புது ரகத்திற்கு, ஆர்.ஜே.ஆர்.,1 என, பெயரிட்டு, காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளேன்.
பத்து ஆண்டுகள் மழை இல்லாவிட்டாலும், விளாம் மரம் தாக்குப் பிடிக்கும். வேறு எந்தத் தாவரமும் வளர தகுதியில்லை என, கூறப்படும் மண்ணில் கூட, இவை வளரும். பூச்சித் தாக்குதல் கிடையாது; களை வராது; உரம் ஏதும் தேவையில்லை. இதனால் செலவு, துளி கூட கிடையாது. மேலும், 20 அடிக்கு மேல் இவை வளரும் என்பதால், தங்கள் நிலங்களை சுற்றி வேலிக்கு பதிலாக, விளாம் மரங்களை விவசாயிகள் வளர்க்கலாம்.
மழைக்காலத்தில் கன்றுகளை நட்டால், அதன் பின் தண்ணீர் அளிக்கத் தேவையில்லை. ஒவ்வொரு கன்றுக்கும், 18 முதல், 20 அடி வரை இடைவெளி விட்டு நட வேண்டும். கன்று நட்ட முதல் மூன்று ஆண்டுகள், செடியில் பூ பூக்கும். அவற்றை வளர விடாமல் கிள்ளி விட வேண்டும். இல்லையெனில், காய் பிடித்து, செடி வளராது.
செப்., முதல் நவ., மாதம் வரை, விளாம் மரத்தின் சீசன் இருக்கும். பழச்சாறு, ஊறுகாய் போன்ற மதிப்பு கூட்டும் பொருள்களாக, விளாம் பழங்களை மாற்றி விற்கலாம்.
விவசாயிகளிடம் விளாம் மரத்தின் முக்கியத்துவம், அதன் பாரம்பரியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.ஆண்டுதோறும், 2,000 மரக்கன்றுகள் விற்பனையாகின்றன. ஒரு மரக்கன்றை, 80 ரூபாய்க்கு தருகிறேன்.விளாம் மரம் நம்முடைய பாரம்பரிய மரம் என்ற எண்ணம் மக்களிடையே வளர வேண்டும். அப்போது தான் அவற்றை அழியாமல் பாதுகாக்க முடியும்.
தொடர்புக்கு: 98421-22866.