விளாமரம்

விளாமரம் அரியவகை மரங்களில் ஒன்றாக இன்று மாறிவிட்டது, இதன் பழங்கள் பலராலும் விரும்மி உண்ணப்பட்டாலும் யாரும் நட்டுவளர்க்க முன்வராத காரணத்தினாலேயே அரியவகை மரமாக மாறிவிட்டது, விளாமரங்களை வணிகரீதில் வளர்த்தால் நல்ல லாபம்பெரலாம் அத்தகைய விளாமரம் பற்றி தெரிந்துகொள்வோமா.

woodapple

பெரோனியா எலிபன்டம் குடும்பத்தைச் சார்ந்த விளா மரம் தென்கிழக்காசியா மற்றும் ஜாவா பகுதியைத் தாயகமாகக் கொண்டது ஆகும். விளா மரத்தின் வேர் இலை, காய், கனி போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது. விளாவானது கடிபகை, பித்தம், விளவு, வெள்ளி எனப் பல்வேறு பெயர்களால் வழங்கப்படுகிறது. இந்தியாவில் விளாவில் இலை, காய், பழம், பழ ஒடு, பட்டை மற்றும் பிசின் போன்றவை பல்வேறு மருத்துவ தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இப்பழங்களில் 70 சதம் ஈரப்பதம், 7.3 சதம் புரத சத்து, 0.6 சதம் கொழுப்பு சத்து, 1.9 சதம் தாது உப்புக்கள், 100 கிராம் பழத்தில் 170 மி.கி. ரிபோபிளேவின் மற்றும் 7.2 சதம் சர்க்கரைச் சத்து ஆகியன அடங்கியுள்ளன. இப்பழத்தை உப்புடன் சேர்த்து சாப்பிடலாம். ஜெல்லி தயாரிப்பதற்கும் இப்பழங்கள் பயன்படுகின்றன.

விதைகளின் மூலம் இம்மரங்கள் பொதுவாக இனவிருத்தி செய்யப்படுகின்றன. மொட்டுக் கட்டுதல் மற்றும் ஒட்டுக் கட்டுதல் மூலமும் இம்மரங்கள் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஆழமான மண் வகைகள் உள்ள பகுதிகளில் இவை நன்றாக வளரும். ஓரளவு மண்ணின் உப்புத் தன்மையையும் தாங்கி வளரும். இது வெப்ப மற்றும் மித வெப்ப பிரதேசங்களில் பயிரிட ஏற்றது. கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்திற்கு மேல் இம்மரங்கள் நன்கு வளராது.

நாற்றுக்களை மழைக்காலங்களில் நட வேண்டும். மரங்களின் கிளைகள் நன்கு இடைவெளி விட்டு வளருமாறு தேவையில்லாத கிளைகளை வெட்டி விட வேண்டும். நட்ட பின், ஐந்தாவது ஆண்டில் இம்மரங்கள் காய்க்க ஆரம்பிக்கும். பொதுவாக இம்மரங்களுக்கு உரம் ஏதும் இட வேண்டிய தேவையில்லை. குறிப்பிட்டு கூறுமளவுக்கு இம்மரத்தில் எந்தவிதமான பூச்சிகிளோ, நோய்களோ தாக்குவதில்லை.

மருத்துவப் பயன்கள் :– விளா சதை நரம்புகளைச் சுருங்கச் செய்வது இதன் பொது குணமாகும். பழம் கோழையகற்றிப் பசியுண்டாக்கும். பழ ஓடு தாதுக்களின் கொதிப்பைத் தணிக்கும். பிசின் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத்துவளச் செய்யும். துவர்ப்புச் சுவையோடு வயிற்றில் இருக்கின்ற வாயுவினை அகற்றி, உடலுக்குக் கிளிர்ச்சியைத் தந்து, புண்களை ஆற்றக் கூடிய செய்கை உடையது. நாவறட்சி, விக்கல், வாதம், பித்தம், மற்றும் குட்டம் போக்க வல்லது. ஒவ்வாமை நோய், இரத்த போக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். மார்பகம், கர்ப்பப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

Nandri : Vasudevan Chinappan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline