முருங்கை சாகுபடி

முருங்கை சாகுபடி
murungai_pannaiyar

தமிழகத்தின் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் முருங்கை அதிகளவில் பயிரிடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் மண்மாரி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சந்தைகளில் முருங்கைக்காய்களில் தற்போது வரவு அதிகரித்துள்ளது. இங்கிருந்து கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒரிசா, மேற்குவங்காளம் என்று பல இடங்களுக்கு முருங்கைக்காய்கள் மூட்டை மூட்டையாக பறந்து கொண்டிருக்கின்றன.

கடந்த காலங்களை விட தற்போது முருங்கைக்காய் அதிக அளவில் அண்டை மாநிலங்களுக்கும் பயன்பட ஆரம்பித்திருப்பதனால்தான், விளைச்சல் அதிகமாக இருந்தும் விலை வீழாமல் இருக்கிறது என்கின்றார்கள் விவசாயிகள்.

புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணி முருங்கை விவசாயத்தைப் பற்றிக் கேட்டோம்.

“செடி முருங்கை மர முருங்கை என்று இரண்டு வகை உள்ளது. பெரும்பாலானோர் முருங்கையை பயிரிடுகின்றனர். நானும் அதைத் தான் போட்டிருக்கிறேன்.

செம்மன் நிலத்தில் முருங்கை நன்றாக வளரும். நல்ல மகசூல் எடுக்கலாம். ஆனால் எங்கள் பகுதியில் சுக்கா மண் தான். அந்த மண்ணிலும் ஓரளவுக்கு விலைச்சல் நன்றாக தான் இருக்கிறது. பொதுவாக வறட்சியான நிலத்தில் முருங்கையைப் பயிரிடலாம். செடி முருங்கையைப் பொறுத்தவரை நடவு செய்த ஆறாவது மாதத்தில் இருந்து காய் கிடைக்கும். நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நல்ல விலை கிடைக்கிறது. அதனால் ஏப்ரல், மே மாதங்களில் நடவு செய்தால் அது காய்த்து வரும் பொழுது நல்ல விலை கிடைக்கும். ஆனால் இந்த மாதங்களில் மழை குறைவாகத்தான் இருக்கும். அதனால் தண்ணீர் வசதியும் ஏற்பாடு செய்ய வேண்டும் வடிகால் வசதியும் அவசியம்”.

செடி முருங்கையில் நிறைய வீரிய ரகங்கள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகளை ஒரு துணியில் சுற்றி, சாணி கலந்த தண்ணீர் அல்லது பஞ்சகவ்யாவில் 24 மணி நேரம் ஊற வைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகளோடு ஒரு கருங்கல்லையும் சேர்த்து கட்டி வைத்து விட்டால் விதைகள் மிதக்காமல் இருக்கும்.
நேரடி மற்றும் நாற்று என இரண்டு விதமான விதைப்பு முறைகள் உள்ளன.

நேரடி விதைப்பு முறை:

6 அடிக்கு 7 அடி அளவில் சதுரப்பாத்தி அமைத்து 1×1 அகலம் மற்றும் 1 அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். வட்டப்பாத்தியாகவும் அமைக்கலாம். குழியில் தொழு உரம், செம்மண் நிரப்பி இரண்டு அங்குல ஆழத்தில் விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 300 கிராம் விதைகள் தேவைப்படும்.

நாற்று விதைப்பு முறைகள்:

ஆற்று மணல், தொழு உரம், தோட்டத்து மண், செம்மண் கலந்து நிரப்பப்பட்ட நாற்றுப் பைகளில், நேர்ததி செய்யப்பட்ட விதைகளை ஒரு அங்குல ஆழத்தில் விதைத்து, தினமும் பூவாளியில் தண்ணீர் விட்டு வர வேண்டும். முளைவிட்ட பின், மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும். ஒரு மாத காலம் இப்படி வளர்க்கப்பட்ட நாற்றுகளை, உழுது தயார் செய்யப்பட்ட நிலத்தில் 6 x 7 அடி பாத்தி அமைத்து ஒன்றரை அடிக்கு ஆழம் கொண்ட குழி எடுத்து, தொழு உரமிட்டு நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 900 செடிகள் தேவைப்படலாம். இந்த முறையில் நூறு கிராம் அளவுக்கு விதைகளை மிச்சப்படுத்தலாம்.

எந்த முறையில் நடவு செய்தாலும், மேல் மண்ணைக் காயவிடாமல் தண்ணீர் கட்டிக் கொண்டே இருப்பது நலம். நுனிக் கொழுந்தை கிள்ளிவிட்டுக் கொண்டே வந்து பக்கவாட்டுக் கிளைகளை வளரும்படி செய்ய வேண்டும். அதிகமாக களைகள் வளராமல் பாதுகாக்க வேண்டும்.
செடி முருங்கை பயிரிட்டிருந்தால்.. தர்பூசணி, மிளகாய், தக்காளி, வெண்டை போன்றவற்றை ஊடுபயிர்களாக போடலாம்.

நடவு செய்த மூன்றாவது மாதத்தில் ஒவ்வொரு செடிக்கும் தழை சத்து (100 கிராம் யூரியா), மணி சத்து (100 கிராம் சூப்பர் பாஸ்பேட்), சாம்பல் சத்து (50 கிராம் பொட்டாஷ்) இந்த மூன்றையும் கொடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தழைச்சத்து (100 கிராம் யூரியா) கொடுக்க வேண்டும்.

வேர் அழுகல் நோய், பூ உதிர்தல், பிஞ்சு உதிர்தல், சாறு உறிஞ்சும் பூச்சித் தாக்குதல், செடியின் அடியில் தங்கும் ஒருவகை ஈக்களின் தாக்குதல் போன்ற பிரச்சனைகள் உண்டு, அதற்கு தகுந்த மருந்துகளை அவ்வப்போது அடித்து வரவேண்டும்.

ஒரு செடியிலிருந்து ஒவ்வொரு பருவத்திலும் 35 கிலோ காய்கள் கிடைக்கும். ஒன்றரை வருடங்கள் வரை மகசூல் கிடைக்கும். அதன்பின் விளைச்சல் குறைந்துவிடும். அதனால் மறுபடி விதைக்க தயாராகிவிட வேண்டும்.

பள்ளபட்டியைச் சேர்ந்த அழகர்சாமி (அலைபோசி: 98653-45911) என்ற விவசாயி, மர முருங்கையில் வீரிய ஒட்டு ரகங்கள் பயிரிட்டுள்ளார். வழக்கமாக செடி முருங்கையை விட மர முருங்கை விலை குறைவாகத்தான் போகும். ஆனால் என்னுடைய முருங்கைச் செடி முருங்கையை விட இரண்டு ரூபாய் கூடுதலாக விலை கிடைக்கிறது.

வீரிய முருங்கை நாத்துகள் தயார் செய்து குறைந்த விலையில் கொடுக்கிறேன். இதுவரை இரண்டாயிரம் ஏக்கர் அளவுக்கு முருங்கை பயிரிட ஆலோசனை கொடுத்திருக்கிறேன் என்றவர் வீரிய முருங்கையை நடவு செய்யும் முறை மற்றும் வரவு செலவுகளைப் பற்றி விளக்கினார்.

நிலத்தை நன்றாக உழுது, 18 அடிக்கு 12 அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் 50 கிராம் அசோஸ் பைரில்லம், 25 கிராம் பாஸ்போ பேக்டரியம், 1 கிலோ மண்புழு உரம், 25 கிராம் வேப்பம் புண்ணாக்கு, கொஞ்சம் பஞ்சகவ்யா, கொஞ்சம் இ.எம் கரைசல் விடவேண்டும். மூலிகை பூச்சி விரட்டி மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். இந்த வகையில் சாகுபடியில் பிசின் தொல்லை அறவே கிடையாது. செடியிக் பொழுந்துகளைக் கிள்ளி அந்த இடத்தில் சாணியை அப்பி வைப்பது நல்லது. அதன் பிறகு வளரும் செடியை அப்படியே விட்டுவிட வேண்டும். தொடர்ந்து உரம் மட்டும் கொடுத்து வந்தால் பூ பூத்து காய்க்க தொடங்கிவிடும்.

ஒரு ஏக்கரில் பாதி அளவுக்கு முதலில் நடவு செய்யவேண்டும். ஆறு மாதம் கழித்து மீதி அரை ஏக்கர் நிலத்தில் நடவு செய்யவேண்டும். இப்படி செய்தால் வருடம் முழுவதும் அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். ஏக்கருக்கு 200 செடி வரைக்கும் நடலாம். நட்ட ஆறு மாதத்தில் காய்கள் வரத் துவங்கிடும். இரண்டாவது காய்ப்பிலிருந்து வருடத்திற்கு ஒரு மாதத்தில் 100 கிலோ காய்களுக்கு மேல் கிடைக்கும்.

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.