மாடித் தோட்டத்தில் ஒரு மகத்தான மகசூல்!

vegitables1 vegitables2

ஏக்கர் கணக்கில் நிலம், கூலி ஆட்கள், இடம், தண்ணீர் என சகலமும் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும் என்பதில்லை, வீட்டில் இருந்தபடியே ஓய்வு நேரத்தில் மொட்டை மாடியில் வீட்டுத் தோட்டம் அமைத்து, முதுமையிலும் கூட சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறார், சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்.
நான் ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர். இந்த வீட்டுக்குக் குடிவந்தப் போது.. இந்த ஏரியாவே.. செடி, கொடி, இல்லாமல் பாலைவனம் மாதிரி இருந்தது. மொத்த ஏரியாவை மாற்ற முடியாட்டியும்.. நம்ம வீட்டையாவது பசுமையாக்குவோம் என்று நினைத்துதான் இந்த வீட்டுத்தோட்டத்தை உருவாக்கினேன் என்றார்.
மொட்டை மாடியில் தட்டுகளில் மண்தொட்டிகளை வைத்து.. அதில் செம்மண், தேங்காய் நார், ஆட்டுப் புழுக்கைகளைப் போட்டுத்தான் பயிர் செய்கிறேன். தக்காளி, பப்பாளி, சிகப்புத் தண்டுக் கீரை, மிளகாய், வெள்ளரி, பீன்ஸ், பீர்க்கங்காய், பசலைக்கீரை, வெண்டை, காராமணி, புடலங்காய், அவரை, முட்டைகோஸ், முருங்கைக்காய், பாகல், கேரட், வாழை என்று அத்தனையையும் வளர்க்கிறேன். சின்னச் செடிகளை தொட்டியிலும், வாழை மாதிரியான பயிர்களை செம்மண் நிரப்பிய சாக்குப் பையிலும் வளர்க்கிறேன். இந்த ஆயிரம் சதுரயில் மட்டும் பூக்கள், காய்கள், கீரைகள் என்று 50 வகையான தாவரங்கள் இருக்கு.
பொதுவாக, காய்கறிச் செடிகளுக்கு சூரிய வெளிச்சம் தேவை. அதுவே அளவிற்க்கு மீறி இருந்தால் ஆபத்தாகிவிடும். அதனால், வெளிச்சத்தைப் பாதியாக குறைப்பதற்காக பசுமைக் குடில் அமைத்திருக்கிறேன். பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணையைத் தண்ணீரில் கலந்து தெளிப்பேன். காலையிலும், மாலையிலும் தண்ணீர் ஊற்றுவேன். தொட்டியில் வழிந்து வரும் தண்ணீர், தொட்டிக்கு கீழ் இருக்கும் தட்டிலேயே தங்கிவிடும். அதனால் அதைத் திரும்பவும் பயன்படுத்த முடியும். அதோடு, காங்கிரீட்டுக்கும் பாதிப்பு இருக்காது.
கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரிக்கும் கலனை வீட்டில் அமைத்திருக்கிறேன். கழிவுகளை அரைத்து அதில் ஊத்திட்டால் வீட்டிற்குத் தேவையான எரிவாயு கிடைத்துவிடுகிறது.  ஆரம்பக்கட்டத்தில் ஆகும் செலவு மட்டும்தான். வேற செலவு கிடையாது. இந்தக் கலனிலிருந்து வெளியாகும் கழிவு நீர்.. நல்ல உரம்.
இதைத்தான் செடிகளுக்கு ஊட்டசத்தாகக் கொடுக்கிறேன். அதனால், ஒரு சொட்டு ரசாயனத்தைக் கூட பயன்படுத்துவதில்லை. ஒரு வருடமாக.. எங்க வீட்டில் விளையும் காய்களைத்தான் நாங்க சாப்பிடுகிறோம். தேவைக்குப் போக மீதமுள்ளவற்றை விற்றுவிடுகிறோம் என்றார்.
வயதான காலத்தில் சந்தோஷம், மனநிம்மதி, ஆரோக்கியம், பணம் என்று எல்லாம் கொடுக்கும் இந்த இயற்கைக்கு, நான் என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று தெரியவில்லை என்றார் நெகிழ்ச்சியாக.
தொடர்புக்கு,
ராதாகிருஷ்ணன்,செல்போன்: 98410 -23448.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline