பூமியை விழுங்கி விடும் ஆவேசத்துடன் ஆக்ரோஷமாய் தனது அனகோண்டா நாக்குகளை நீட்டியது மழை. பெருமழை என்பதையும் பேய்மழை என்பதையும் வாசித்துப் பழகிய சென்னை வாசிகளுக்கு நேரில் பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் வாய்த்தது. அது பேரச்சம் கலந்த வாய்ப்பு.
நிமிடம் தோறும் ஒரு இஞ்ச், அரையடி என உயர்ந்த தண்ணீர் சாலைகளை விழுங்கி ஏப்பம் விட்டு, வீட்டு வாசல்படிகளில் அழையா விருந்தாளியாய் நுழையத் துவங்கியது. நதிகள் தங்கள் கழுத்துவரை நீர் வளையங்களை ஏற்கனவே மாட்டியிருந்ததால் துளிகளுக்கே அது தளும்பத் துவங்கியது.
நதிகளிடம் அனுமதிவாங்காமல் மனிதர்கள் காங்கிரீட் மரங்களை நட்டிருந்தார்கள். தண்ணீர், மனிதர்களிடம் அனுமதி வாங்காமல் நதிகளின் பாதையை உருவாக்கிக் கொண்டன. எங்கும் தண்ணீர். எங்கும் பதட்டம். சென்னையில் மழை பெய்யவில்லை என்பதே நீண்டநாள் கவலையாய் இருந்தது. ஏன் கடவுள் மழையை சென்னைக்கு அனுப்பவில்லை என்பது இப்போது தான் புரிகிறது.
மழை பல பாடங்களையும் கற்றுத் தந்தது. மனிதாபிமானத்தின் கதவுகளை அறைந்து சாத்தியிருந்த வீடுகள் கூரைகளையும் சேர்த்தே திறந்தன. தங்கள் பெயருக்குப் பின்னாலும், முன்னாலும் பட்டங்களையும், பதக்கங்களையும் குத்தி வைத்திருந்த மக்கள் கழுத்துவரை தண்ணீரில், சாக்கடைகளை உதாசீனப்படுத்தி நடந்தனர்.
போர்ட்டிகோவில் முழங்காலளவு நீரில் தெரு நதியை வேடிக்கை பார்த்தபடி வாசலில் நின்றிருந்த என்னிடம் ஒருவர் வந்து இரண்டு பால் பாக்கெட்களை நீட்டினார். “உடனே காய்ச்சிடுங்க… இல்லேன்னா கெட்டுடும்” என்றார். யாரது.. நம்மைத் தேடி வந்து பால் பாக்கெட் தருவது ? பால் பாக்கெட் கிடைக்காமல் ஊரே நெட்டோட்டம் ஓடும் இந்த நேரத்தில் என மனதில் குழப்ப ரேகைகள்.
‘… நீங்க ?…’ என இழுத்தேன்.
பக்கத்து வீடு தான். மாடில குடியிருக்கேன். என்றார். என் வீட்டை ஒட்டியபடி இருந்தது அந்த வீடு. நாலடி இடைவெளியில் இருந்தது வீட்டுச் சுவர். கூனிக் குறுகினேன்.
‘நன்றி.. என்ன பண்றீங்க.. ‘ என முதன் முறையாக விசாரித்தேன். கால்களுக்குக் கீழே கிடந்த ஈரம் இதயங்களிடையே பரவியது.
மின்சாரம் செத்துப் போய் இரண்டு நாளாகியிருந்தது. நான்கு நாட்கள் அது உயிர்த்தெழவேயில்லை. வீட்டுக்குள் ஒற்றை மெழுகுவர்த்தியைச் சுற்றியமர்ந்து குழந்தைகளுடனும், மனைவியுடனும், வீட்டிலுள்ளவர்களுடனும் கதைபேசிய கணங்களில் உணர்ந்தேன் வெளிச்சம் எவ்வளவு தூரம் எங்கள் உறவுகளுக்குள் இருட்டை விரித்திருக்கிறது என்பதை. இருட்டு எங்களுக்கிடையே வெளிச்சத்தை அதிகரித்திருந்தது.
சுற்றியிருந்து கதைபேசி, விளையாடி, சாப்பிட்டு செலவிட்ட நான்கு நாட்கள் கால்நூற்றாண்டுகளுக்கு முன் நான் வாழ்ந்த வாழ்க்கைக்குள் என்னை இட்டுச் சென்றது. அம்மாவும், அப்பாவும், சகோதர சகோதரிகளும், எங்கள் கிராமத்துத் திண்ணையும் மனதுக்குள் இதமாய் வந்திறங்கியது.
வெளிச்சம் வீட்டில் மூலைகளுக்குள் மனிதர்களைத் துரத்தும். இருட்டோ, ஒற்றைப் புள்ளியில் எல்லோரையும் இணைக்கும் எனும் உண்மையை நான் உணரும் வாய்ப்பாய் அது அமைந்தது.
தொலைக்காட்சி அமைதியாய் மூலையில் கிடந்தது. லேப்டாப்கள் மரத் துண்டுகளைப் போல வீட்டில் மூலைகளில் கிடந்தன. வரிக்குதிரை போல கம்பீரமாய் நிற்கும் செல்போன் சிக்னல், வட்டத்திற்குள் விட்டம் வரைந்து வெறுமனே கிடந்தது. கைப்பிடிக்குள் இருந்த உலகம் சட்டென கைவிட்டுப் பறந்த ஒரு பட்டாம் பூச்சியைப் போல பறந்து மறைந்தது.
மீண்டும் ஒரு முறை தகவல் தொடர்புகள் இன்லென்ட் லெட்டர்களின் முதுகில் பயணித்த காலத்தில் பயணித்த அனுபவம். செல்போன்களும், வாட்ஸப்களும், மின்னஞ்சல்களும் இல்லாத நான்கு நாட்கள் வாசிக்கவும், நேசிக்கவும், எழுதவும் கிடைத்தவை குடும்ப உறவுகள் மட்டுமே. பாசமிகு மனங்கள் மட்டுமே.
புள்ளி வைத்து வட்டம் வரைந்த ஸ்மைலிகளல்ல வாழ்க்கை, இதழில் விரியும் புன்னகை என்பதை புரிந்து கொள்ள இறைவன் அனுப்பிய வரப்பிரசாதமே பெருமழை.
அவசரமாய் ஓடிப் பழகிய கால்கள் ஓய்வெடுத்தன. நேரமில்லை என புலம்பிய மனது அடிக்கடி சொன்னது, “அட அஞ்சு மணி தான் ஆச்சா.. வாங்க கதை சொல்லி விளையாடலாம்…”.
நேரம் எப்போதும் நம்மிடம் இருக்கிறது. அதை டிஜிடல் ஸ்ட்ராக்கள் உறுஞ்சிக் கொள்கின்றன என்பது புரிய வைத்த நிகழ்வாய் அது இருந்தது.
ஐந்து நாட்களுக்குப் பின் மீண்டும் மின்சாரம் வீட்டுக்குள் நுழைந்தபோது ஏதோ விரோதி வீட்டுக்குள் நுழைந்தது போல முதன் முறையாய் உணர்ந்தேன். மனைவி சொன்னார்,
“கரண்ட் இல்லாம இருந்ததே நல்லா இருந்துச்சு…”.
பிள்ளைகள் சொன்னார்கள், “என்ன டாடி.. நெட்வர்க் வந்துச்சா… போச்சு.. இனிமே லேப்டாப்பைத் தூக்கிடுவீங்க…”
அது மழையல்ல,
பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை !
இந்த ஒரு பதிவை மட்டும் எழுதிவிட்டு லேப்டாப்பை ஒதுக்கி வைப்பதென முடிவு செய்து விட்டேன்.
— மழையால் மனிதனாகிய எவனோ ஒருவன்
வணக்கம் நான் உங்கள் வலைத்தளம் பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது.
உங்கள் வலைத்தளத்தில் பறவை வளர்ப்பபை பற்றி எழுதி உள்ளீர்கள் மேலும் பின்சர்ஸ், கோல்டியன் பின்சஸ் பற்றியும் அதன் நோய்கள் பற்றியும், நோய் தடுப்பு முறைகள் பற்றியும் எழுத முடியுமா? என்னிடம் நிறைய குருவிகள் உண்டு அதற்கு திடீரென உடம்பு சியில்லாமல் போய் இறத்து விடுகிறது. என்ன காரணம்?
நானும் வலைத்தளம் நிர்வகிக்கின்றேன்.. பாலியல் ஆலோசனைகள் முடிந்தால் பார்க்கவும்.. இது ஒரு மருத்துவ நோக்கமாகவே நடத்துகின்றேன்.