மீண்டும் மீண்டும் ஒரு பொய் இங்கு உரைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. அதாவது மரபணு மாற்றப்பட்ட விதைகள் மட்டும் இல்லை என்றால் கண்டிப்பாக 120 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் அனைவருக்கும் உணவளிக்க இயலவே இயலாது. இதை கூறி கொண்டிருப்பவர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் மட்டுமல்ல, உங்களுடைய நண்பர்கள் சிலரிடம் கேட்டு பாருங்கள் அவர்களும் அதையே தான் கூறுவார்கள். ஒரு கத்திரிக்காயை மரபணு மாற்றி இரண்டு கிலோ அளவுக்கு விளைவிப்பது கூட பன்னாட்டு நிறுவனங்களின் வெற்றியல்ல, உங்களையும் இவ்வாறு பேச வைத்துள்ளார்களே அதில்தான் உள்ளது அவர்களின் உண்மையான சாமார்த்தியம்.
இங்கு மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் பெறப்படும் உணவு ஆரோக்கியமான சத்துள்ள உணவு என்று எடுத்து கொண்டால், இன்னும் பரந்து விரிந்த இந்த தேசத்தில் UNICEF கொடுத்துள்ள அறிக்கையின்படி இருபது சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைபாட்டினால் பாதிக்க பட்டுள்ளதின் மர்மம் மட்டும் விளங்கவே இல்லை. மரபணு மாற்றத்தினால் விளைவிக்க படும் உணவுகள் உருவத்தில் மட்டுமே பெரிதாக காணப்படும், உள்ளிருக்கும் ஊட்ட சத்துக்களில் இல்லை என்பதற்கு இதனை விட வேறு என்ன சான்று தேவைபடுகிறது. இன்னமும் நன்றாக என் நினைவில் இருக்கிறது, என்னுடைய பால்ய வயதில் என் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பையன் வாங்கி வந்த பாலில் அதிகமாக நீர் சேர்க்கப்பட்டு இருந்ததை அறிந்த அவனுடைய தந்தை மீண்டும் அந்த பாலை கடைக்காரனிடமே சென்று திருப்பி கொடுத்து விட்டு வந்தது. ஒரு பாலில் சத்துக்கள் எதுவும் இல்லாத தண்ணீரை கலந்து அதே விலைக்கு விற்பனை செய்வதனை பொருத்து கொள்ள முடியாத அதே சமூகம், நாம் உண்ணும் உணவில் நம் கண்ணுக்கு தெரியாமல் சத்துக்கள் குறைக்கப்பட்டு உருவத்தில் மட்டும் பெரிதாக்கி விற்பனை செய்யப்படுவதினை எப்படி ஏற்று கொண்டது என்பது தான் இன்னும் புரியாமலேயே உள்ளது.
நம் அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இங்கு சத்துக்கள் குறைந்த, உற்பத்தி மட்டுமே அதிகம் கொடுக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் அறிமுகபடுத்தபடவில்லை. மாறாக கொஞ்சம் உற்று கவனியுங்கள் நண்பர்களே, பின்பு உங்களுக்கு நன்றாக புரியும் இதற்கு பின்பு ஒளிந்து கிடக்கும் நோக்கம். இயற்கை முறையினில் விவசாயம் செய்தால் அதிக மனிதவளம் விவசாய தொழிலில் மட்டுமே இருக்கும். ஆம் தமக்கு தேவையான உணவினை விளைவித்து, ஊட்டம் மிகுந்த உணவை உண்டு, உற்றாருடன் அன்பு புரிந்து, உவகையோடு வாழ்ந்து விடுவோம். அப்படி நடந்துவிட்டால் உலகின் முதன்மையான நாடுகள் என்று கூறப்படும் நாடுகளின் பெருநிறுவனங்களுக்கு, தொழிற்சாலைகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தேவையான மனித வளத்தை இங்கிருந்து பெற முடியாமல் போகும். ஆகவே இங்கு விவசாயிகளின் எண்ணிக்கையினை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும். விவசாய தொழிலில் இருந்து அவர்கள் விடுக்கப்பட்டு வேறு தொழில்களுக்கு அந்த மனிதவளம் பயன்படுத்தபட வேண்டும் அதுதான் இவர்களின் இலக்கு. இரண்டு ஏக்கரில் பெறப்படும் விளைச்சலின் அளவை(நன்று கவனியுங்கள் இங்கு நான் குறிப்பிடுவது சத்தல்ல வெறும் அளவு மட்டுமே) ஒரே ஏக்கரில் பெற்று விட்டால். அந்த ஒரு ஏக்கருக்கான உழைப்பினை தன்னுடைய நாட்டிற்கு பயன்படுத்தி கொள்ள முடியும். அதுதான் இங்கு நடந்து கொண்டு வருகிறது. நன்கு கவனியுங்கள் நன்றாக புரியும் உங்களுக்கு, எடுத்துகாட்டிற்கு உங்களுடைய குடும்பத்தையே எடுத்து கொள்ளுங்கள். உங்களின் தாத்தா பாட்டி காலத்தில் அனைவரும் விவசாயம் சார்ந்த தொழிலை மட்டுமே இயற்கை வழியில் செய்திருப்பார், நன்றாக இன்பமான ஆரோக்கியமான வாழ்வை தான் வாழ்ந்தனர். அடுத்தது உங்கள் அப்பா, அம்மா காலத்தில் கொஞ்சம் விவசாயம் குறைந்து இருக்கலாம் அதாவது அப்பா அல்லது அம்மா விவசாய தொழிலை விட்டு வேறு விவசாயம் சார்ந்த துறைக்கு சென்றிருக்கலாம். அப்படியே இன்றைய தலைமுறையை கொஞ்சம் பாருங்கள் அணைத்து குடும்பங்களிலும் குறைந்தது ஒருவர் அல்லது இருவர் கண்டிப்பாக இந்த விதைகளை கொடுக்கும் நாட்டிற்காக மறைமுகமாகவோ, நேரடியாகவோ உழைத்து கொண்டிருப்பீர்கள். இதனை இங்கு சாதிக்க உங்களிடம் இருந்து பிடுங்க பட்டது உங்கள் தாத்தா பாட்டி உண்டு கழித்த ஆரோக்கியமான உணவு.
அடுத்தது, அனைவருக்கும் எழும் கேள்வி இயற்கை முறையில் மட்டுமே விவசாயம் செய்து கொண்டு இருந்தால் இங்கு வாழும் அனைவருக்கும் உணவளிக்க இயலுமா என்பது, ஆம் நண்பர்களே கண்டிப்பாக இயலாது. இப்பொழுது விவசாயம் செய்யப்பட்டு கொண்டிருக்கும் மண்ணில் மட்டுமே இயற்கை விவசாயம் செய்தால் கண்டிப்பாக இயலாது. இதற்கு என்னதான் வழி என்று காண வேண்டுமென்றால் சற்றே பின்னோக்கி சென்று பார்ப்போம். இவ்வுலகிலேயே சிறிய நாடுகளில் மிக சிறிய நாடான கியூபாவிடம் இருந்தே இதற்கான தீர்வை நம்மால் அடைந்து விட முடியும். வல்லாதிக்க சக்தியாக கருதப்படும் அமெரிக்காவின் அடக்குமுறைகளிடம் தன்னை விடுத்து கொண்டு சுயாட்சி செய்து வந்த காலத்தில் தனது மொத்த உணவு தேவைக்காக தன் மண்ணில் விளையும் கரும்பை கொடுத்து அனைத்தையும் சோசலிச ரஷ்யாவிடம் இருந்தே வாங்கி கொண்டு இருந்தது. சோஷலிச ரஷ்யா உடைந்த அடுத்த கணம் தான் கியூபாவிற்கு புரிந்தது வெறும் கரும்பை மட்டுமே விளைவித்து விளைவித்து தன் மண்ணை மலடாக்கி இருக்கிறோம் என்று. உடனே அன்று கியூபாவை ஆண்டு கொண்டிருந்த பிடில் காஸ்ட்ரோ கொண்டு வந்த திட்டம், கியூபா நாடு முழுவதும் இயற்கை விவசாயம் மட்டுமே பின்பற்றபட வேண்டும் மற்றும் தன் நாட்டிற்கு தேவையான உணவினை விளைவித்து கொள்வதற்கு அனைவரும் பங்களிக்க வேண்டும். அவர்கள் எந்த பணியில் இருந்தாலும் தனக்கு சொந்தமான இடத்தில் என்ன விளைவிக்க முடியுமோ அதனை கண்டிப்பாக விளைவித்தாக வேண்டும். தினமும் தன்னால் இயன்றவரை உணவளிக்கும் விவசாயத்திற்கு பங்களிக்க வேண்டும். கியூபா நாட்டின் குடிமகனின் ஒரு நாள் காய்கறி தேவையானது 350 கிராம் ஆனால் 1992இல் கிடைத்து கொண்டு இருந்ததோ 200 கிராம் மட்டுமே. மேற்கூறப்பட்ட திட்டம் அமலுக்கு வந்த பின்பு சில வருடங்களில் மெல்ல மெல்ல உணவு விளைச்சல் அதிகமடைத்து ஒரு கட்டத்தில் தன்னுடைய தேவைக்கு மேல் விளைச்சலை தொட்டது. அங்கு மரபணு மாற்றப்பட்ட விதைகள் இல்லை, ரசாயன உரம் இல்லை, பூச்சி கொல்லி மருந்துகள் இல்லை. ஆனாலும் அனைவருக்கும் தேவையான உணவு, ஆரோக்கியமான உணவு, சத்துக்கள் நிறைந்த உணவு கிடைத்தது. இங்கு எந்த விவசாய முறையினால் அனைவருக்கும் உணவளிக்க முடியாது என்று சொல்லப்படுகிறதோ அதே இயற்கை முறை விவசாயத்தினால்.
காந்தி ஒரு இடத்தில் கூறி இருப்பார், “இயற்கையால் அனைவரின் தேவையையும் நிறைவேற்ற முடியும், ஆனால் அனைவரின் ஆசையையும் நிறைவேற்ற அந்த இயற்கையால் முடியாது” என்று. விவசாயத்தில் உணவு என்பது தேவை, உற்பத்தி என்பது ஆசை. இயற்கை விவசாயம் என்பது உணவிற்கானது ஆனால் மரபணு விவசாயம் என்பது உற்பத்திக்கானது.
Thanks :Balasubramani Dharmalingam