நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு
தூசு நிறைந்த சூழலுக்கு மத்தியில் வன அதிகாரி ஒருவரின் உதவியுடன், வெப்பமண்டலக் காட்டில் வாழும் 50 வகை மரங்களை வளர்த்திருக்கிறார்கள் மதுரை முத்தமிழ்நகர் மக்கள்.
மதுரை அண்ணாநகர் கிழக்கில் உள்ள எல்.ஐ.ஜி. காலனியில், முத்தமிழ் குடியிருப்புப் பகுதியில் மாநகராட்சி பூங்கா இருக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால், வாகன நிறுத்தும் இடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் இருந்த இடம் இப்போது மூலிகைப் பூங்காவாக மாறி இருக்கிறது.
தும்பை, தூதுவளை, ஓமவல்லி, கண்டங்கத்திரி, வல்லாரை, நாராயணசஞ்சீவி, கீழாநெல்லி, தும்பை என்று ஏராளமான மூலிகைகள் இங்கு இருக்கின்றன. வெப்பமண்டலக் காடுகளில் உள்ள பல அபூர்வ மரங்கள் இங்கிருப்பதுதான் இந்தப் பூங்காவின் சிறப்பு.
மதுரைக்கு பெயர்க் காரணம் தந்த, மருத மரங்களையும் இங்கு பார்க்கலாம். மீனாட்சியம்மன் கோயிலின் தல விருட்சமான கடம்ப மரத்தையும் இங்கு பார்க்கலாம். மயிலடி (இதன் இலைகள் மயிலின் பாதம் போல் இருக்கிறது), ஏழிலைப்பாலை (ஜார்க்கண்ட் மாநில அரசின் மரம்), இலுப்பை, மகிழம், மலைவேம்பு, இயல் வாகை, அயல் வாகை, தூங்குமூஞ்சி வாகை, அரசு, பூவரசு, மலைப்பூவரசு, ஆலமரம், அத்தி, இச்சி, மருதமரம், நீர்மருது, கருமருது, உதியன்மரம், புன்னை, கடம்பு, வெள்ளைக்கடம்பு, நீர்க்கடம்பு, டெபிபியா, போலிச்சந்தன் (இந்தியாவில் அழியும் தருவாயில் இருக்கும் மரம்), மகாகனி, நெட்டிலிங்கம், குமிழ்மரம், கல் இச்சி பொன்மூங்கில், ஈச்சை, நாகலிங்கம், புங்கன், கருமரம், மந்தாரை, வில்வம், மீன்வால்ப்பனை, பிள்ளை மருது, மான்காது சவுக்கு, தேன்சிட்டு மரம், கூந்தல்பனை பால்பேட்மிட்டன் மரம், உசிலை என்று சுமார் 50 வகை மரங்கள் இங்கு இருக்கின்றன.
நாவல், அரைநெல்லி, முழுநெல்லி, சிங்கப்பூர் செர்ரி, எலுமிச்சை, தென்னை, மாதுளை, நாவல், விளாமரம், கொய்யா, மா, முருங்கை, கொடுக்காப்புளி போன்ற பலன் தரும் மரங்களையும் செம்பருத்தி, தாழை, பன்னீர் புஷ்பம், இட்லிப்பூ, மனோரஞ்சிதம், செந்தாழம் போன்ற மலர்ச் செடிகளையும் வளர்த்திருக்கிறார்கள். இந்தப் பூங்காவுக்கு புதிது புதிதாய் பறவைகள் வருவதைப் பார்த்து, அவை கூடு கட்டி வாழ்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த வனத்தை உருவாக்க, முத்தமிழ் குடியிருப்பு மக்களுக்கு உதவியவரான வன அதிகாரி ராஜ்குமார் கூறுகையில், “கட்டாந்தரையாக இருந்த இந்த இடத்தை, சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் மனு கொடுத்து பூங்கா அமைப்பதற்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு பெற்றனர் இப்பகுதி மக்கள். பிறகு, குடியிருப்போர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் முத்துக்குமார் மூலம், பொதுநல வழக்கு போட்டு பூங்காவை அமைத்தனர். அவர்களின் ஆர்வத்தைப் பார்த்து, என்னுடைய பங்காக சில அபூர்வ மரங்களை நட்டுப் பராமரித்தேன். அடிமண்ணை மாற்றி, ஆட்டுப் புழுக்கையை உரமாக இட்டு வளர்த்ததில், அந்த மரங்கள் ஓரளவுக்கு வளர்ந்தன. இதனால், காடுகளில் மட்டுமே பார்க்க முடிகிற அபூர்வ மரங்களையும் இங்கே வளர்க்க முயன்றேன்.
மக்களின் ஒத்துழைப்போடு அந்த முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. இங்கு இருக்கும் பெரும்பாலான மரங்கள், வெப்பமண்டலக் காடுகளில் வாழ்பவை என்றாலும், இவற்றில் நீர் மருது உள்ளிட்ட பல மரங்களுக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படும்.
எனவே, மரங்களின் தூருக்கடியில் கற்றாழை உள்ளிட்ட குத்துச்செடிகளை அதிகமாக நட்டு வைத்துள்ளோம். இவை தண்ணீரைச் சேகரித்து வைத்துக் கொண்டு, டிரிப்ஸ் போல பெரிய மரங்களுக்குத் தண்ணீர் அளித்துக்கொண்டே இருக்கும் என்பதால், கடும் வறட்சியிலும் கூட மரங்கள் பட்டுப்போகாமல் தப்பித்துக் கொள்ளும்.
இந்த பூங்காவுக்கு வந்து, ஒரே ஒரு முறை இயற்கைக் காற்றைச் சுவாசித்தவர்கள், இதேபோல தங்கள் பகுதி பூங்காவிலும் மரக்கன்று நடுமாறு கோரிக்கைவிடுத்து வருகிறார்கள்”என்றார்.
“மாநகராட்சி செய்ய வேண்டிய வேலையை, முத்தமிழ் குடியிருப்பு மக்களே செய்து வருகிறோம். பகலில் காவலுக்கு காவலாளியை நியமித்திருக்கிறோம். இரவு நேரத்தில் மூலிகைகளை பறிக்கிறேன் பேர்வழி என்று செடியையே சிலர் அழித்து விடுகிறார்கள். அரிய மரங்கள் எல்லாம் ஓரளவுக்குப் பெரிதாக வளர்ந்து விட்டதால், அவை திருடப்படும் அபாயமும் இருக்கிறது. எனவே, இரவுக் காவலாளி நியமிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காவுக்கு வருவோர் அருகில் உள்ள குப்பைத் தொட்டியைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள். அதை அகற்ற வேண்டும். பூங்கா பராமரிப்புக்கு மாநகராட்சியால் முழுமையாக உதவ முடியாதபட்சத்தில், தனியார் உதவியைப் பெறலாம் என்றிருக்கிறோம்” என்றார்.