பார்த்தீனியம் அழிக்க மருந்து

பார்த்தீனியம் அழிக்க மருந்து

 

 

இந்தியாவின் ஆன்மாவை அழிப்பதற்காக 1960களில் சத்தமில்லாமல் ஒரு கொடூர உயிரி ஆயுதத்தை அனுப்பி வைத்தது அமெரிக்கா. அமைதியாக ஊடுருவி, தேசத்தின் ஒரு கிராமத்தைக்கூட விடாமல் ஆக்கிரமித்து பேரழிவை உருவாக்கிக் கொண்டிருக்கிறது அந்த ஆயுதம்.

பார்த்தீனியம் அழிக்க  மருந்து

இன்று இந்தியாவின் ஒட்டுமொத்த விளைநிலங்களில் 10 சதவீத நிலத்தில் பார்த்தீனியம் இருக்கிறது. விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களும் அதை அழிக்க எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில்தான் முடிந்தன. ஆனால், ஒரு எளிய மனிதர் அதற்கு எதிராயுதம் ஒன்றைக் கண்டுபிடித்து சாதித்திருக்கிறார்.

அவர் பெயர், முருகானந்தம். அமெரிக்கா அனுப்பி வைத்த ஆயுதம், பார்த்தீனியம் என்ற விஷக் களைச்செடி. அதை அழிக்க முருகானந்தம் கண்டுபிடித்த எதிர்விஷம், கில்லர்-700. இந்த விஷத்தைக் கொண்டு இந்தியா முழுதும் பல்லாயிரம் ஏக்கரில் பரவிக் கிடந்த பார்த்தீனியம் செடிகளை அழித்தொழித்திருக்கிறார் முருகானந்தம்.

முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதத்தின் சகோதரி மகன் முருகானந்தம். பாரம்பரியமாக மூலிகைகளோடு தொடர்புடைய குடும்பத்தில் பிறந்தவர். எஞ்சினியரிங் முடித்துவிட்டு, பிஹெச்இஎல் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், தன் பணிச்சூழலில் பார்த்தீனியம் செடியின் ஆக்கிரமிப்பைக் கண்டு திகைத்து, அதை ஒழிப்பதற்காகவே முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.

‘‘1960கள்ல அமெரிக்காவுல அளவுக்கு அதிகமா கோதுமை விளைஞ்சுது. அதனால விலை வீழ்ச்சி அடையறதைத் தடுக்கறதுக்காக கோதுமையைக் கடலில் கொட்டி அழிச்சாங்க. அந்த தருணத்துல இந்தியாவுல பெரும் பஞ்சம் வந்திடுச்சு. ‘கடல்ல கொட்டி அழிக்கிற கோதுமையை எங்களுக்குக் கொடுங்க’ன்னு அமெரிக்காகிட்ட இந்தியா கேட்டுச்சு. அப்போ அனுப்பி வைக்கப்பட்ட கோதுமையில விதையா கலந்து வந்ததுதான் பார்த்தீனியம்.

இது ஒரு விபரீதமான தாவரம். ஒரு செடி, ஆயிரக்கணக்கான செடிகளை உருவாக்கிடும். விளைநிலத்தை எல்லாம் விஷமாக்கிடும். பார்த்தீனியம் முளைச்சுட்டா, வேறு எந்த செடியும் அந்த நிலத்துல வளரவிடாது. கடுமையான ஆஸ்துமாவையும் மிகக் கொடூரமான பார்த்தீனியம் டெர்மடைடிஸ்ங்கிற தோல் நோயையும் இந்தச் செடி உருவாக்கும். இந்த நோயால பாதிக்கப்பட்டவங்க உடம்பில் இருந்து நீரா வடியும். வெயில் பட்டால் திகுதிகுன்னு எரியும். இந்த நோயை தாக்குப்பிடிக்க முடியாம நிறைய பேர் தற்கொலை செஞ்சிருக்காங்க.

அப்போ எனக்கு குஜராத்ல வேலை. புதிய திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்தி மேம்படுத்த வேண்டிய பொறுப்பு என்னோடது. எங்கே நிலங்களைப் பாத்தாலும் பார்த்தீனியம் இருந்துச்சு. ஆட்களை விட்டு அந்தச் செடியை அப்புறப்படுத்த வச்சோம். சில நாட்கள்லயே அரிப்பு, மூச்சுத் திணறல்னு ஆட்கள் திணறிட்டாங்க. இயந்திரங்கள் வச்சு அகற்றினோம். அடுத்த ஒரே வாரத்துல அதைவிட அதிகமா செடிகள் முளைச்சிடுச்சு. மனிதர்களும் தொழில்நுட்பமும் பார்த்தீனியம் முன்னாடி தோற்றுப் போய் நின்னோம்.

வேளாண்மைக் கல்லூரிகள், விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகங்கள்ல பார்த்தீனியத்துக்கு தீர்வு கேட்டோம். ‘இதுவரை எந்த தீர்வும் கண்டறியப்படவில்லை’ன்னு சொன்னாங்க. ரொம்பவே ஆதங்கமா இருந்துச்சு. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா எவ்வளவோ வளர்ச்சிகளை எட்டியிருக்கு. ஆனா, ஒரு தாவரத்துக்கு தீர்வு காண முடியலே… மத்தவங்களை குறை சொல்றதுக்குப் பதிலா நாமே இதுக்கு தீர்வு கண்டுபிடிக்கலாமேங்கிற உந்துதல் உருவாச்சு.

நிறைய படிக்க ஆரம்பிச்சேன். பார்த்தீனியத்தோட வளர் மரபுகள், வாழ்க்கை முறைகள் எல்லாத்தையும் படிச்சேன். எங்க குடும்பத்துக்கு மூலிகைகளோட நிறைய பரிச்சயம் உண்டு. எங்க தாத்தா, அப்பாவெல்லாம் மூலிகை வைத்தியத்துல கை தேர்ந்தவங்க. அப்பா ஒரு குதிரை ஆர்வலர். குதிரைகளுக்கு வரும் ஒரு அபூர்வ நோய் பத்தி ஆராய்ச்சி பண்ணி ஒரு மூலிகை லேகியம் தயாரிச்சார். அந்த லேகியத்தை அரபு நாடுகள்ல இருந்தெல்லாம் வந்து வாங்கிட்டுப் போவாங்க. அப்படியான சூழல்ல வளர்ந்ததால எனக்கும் மூலிகைகள் பற்றி தெரியும்.

சிறு வயதிலிருந்தே மூலிகைகள் பற்றி ஆராய்ச்சி செய்து, மூட்டு வலிக்கு, தீக்காயத்துக்கு, கரப்பான் பூச்சியை அழிக்கிறதுக்குன்னு நிறைய மருந்துகள் தயாரிச்சிருக்கேன். அந்த அனுபவத்துல பார்த்தீனியத்தை அழிக்கிற ஒரு எதிர்விஷத்தை தயாரிக்கிற வேலையில இறங்கினேன்.

ஒரு வருஷம்… பார்த்தீனியம் செடி கூடவே வாழ்ந்தேன். செடிக்கு முன்னாடி மணிக்கணக்கில் உக்காந்திருப்பேன். எல்லாரும் என்னைப் பைத்தியக்காரன்னு சொன்னாங்க. தாவரங்கள்ல ‘டைகார்ட்’, ‘மானோகார்ட்’னு ரெண்டு வகை இருக்கு. இந்த இரண்டு வகைகளையும் அழிக்கிறதுக்கு மருந்து இருக்கு.

ஆனா, பார்த்தீனியம் இந்த ரெண்டு வகையிலயும் வரலே. அதோட தாவரவியல் அமைப்பே வித்தியாசமானது. அதோட சுவாச மண்டலத்தை அழிச்சாதான், அதை முழுமையா ஒழிக்க முடியும். எனக்குத் தெரிஞ்ச அத்தனை யுக்திகளையும் பயன்படுத்தி இறுதியா ஒரு மருந்தை உருவாக்கினேன். மூலிகைகளோட சில ரசாயனங்களும் சேர்த்து உருவாக்கப்பட்ட அந்த மருந்தை பெங்களூர் வேளாண் ஆராய்ச்சி மையத்துக்கு கொடுத்தேன். கிட்டத்தட்ட 6 வருஷம் அந்த மருந்தை ஆய்வு செஞ்சு, இறுதியா அங்கீகரிச்சாங்க.

அந்தத் தருணத்தில கர்நாடக கவர்னர் மாளிகையோட பெரும்பகுதியை பார்த்தீனியம் ஆக்கிரமிச்சிடுச்சு. கவர்னர் பானு பிரதாப் சிங்குக்கு அந்த செடி ஒவ்வாமையை உருவாக்கிடுச்சு. செடிகிட்டே போனாலே மயங்கி விழுந்துடுவார். கவர்னர் மாளிகை பார்த்தீனியத்தை அழிக்கிற வேலையை எங்ககிட்ட ஒப்படைச்சாங்க. மூன்று கட்டமா மருந்து தெளிச்சு அழிச்சோம். அடுத்து இந்தியாவோட எல்லாப் பொதுத்துறை நிறுவன வளாகங்கள்லயும் மண்டிக்கிடந்த பார்த்தீனியங்களை அழிச்சோம். இப்படி பல ஆயிரம் ஏக்கர்ல பார்த்தீனியத்தை அழிச்சிருக்கோம்’’ என்கிறார் முருகானந்தம்.

கோயில் கோபுரங்கள் மீது முளைத்து பாரம்பரிய கட்டுமானங்களை சிதைக்கும் செடிகளை அழிக்கவும் ஒரு மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறார் முருகானந்தம். இந்து சமய அறநிலையத்துறை அந்த மருந்தை அங்கீகரித்து பயன்படுத்தியும் வருகிறது. இதுவரை சுமார் 7000 கோயில் கோபுரங்களில் இப்படி முளைத்திருந்த செடிகளை அகற்றியிருக்கிறார் இவர்.

‘‘கோயில்கள் நம் பண்பாட்டு மையங்கள். குறிப்பா, கோபுரங்கள்ல ஏராளமான கலைப் பொக்கிஷங்கள் இருக்கு. அதைப் பாதுகாக்கிற நோக்கத்துலதான் குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் குடமுழுக்கு நடத்துவாங்க. நாம கொஞ்சம் கவனமில்லாம இருந்ததால பழமையான பல கோயில் கோபுரங்கள்லயும் மதில் சுவர்கள்லயும் செடிகள் முளைச்சு கொஞ்சம் கொஞ்சமா அழிச்சுக்கிட்டிருக்கு. செடிகளை அழிக்கிறேன்னு சொல்லி பல கோபுரங்களை சிதைச்சுட்டாங்க.

நான் திருச்சி பூலோகநாத சுவாமி கோயிலோட அறங்காவலரா இருந்தேன். அந்தக் கோயில் கோபுரத்திலயும் செடிகள் முளைச்சிருந்துச்சு. கோபுரத்துக்கு சேதாரம் இல்லாம செடிகளை அழிக்க என்ன வழின்னு யோசிச்சேன். ஓராண்டு ஆராய்ச்சியில அதுக்கும் ஒரு மருந்தை கண்டுபிடிச்சேன். மிகக்குறைந்த செலவுதான். இந்த மருந்து போட்டா, அந்தச் செடியின் வேர் அப்படியே மக்கி மண்ணாகிடும். ஏகப்பட்ட கோபுரங்களை இதன்மூலம் மீட்டிருக்கோம்.

பார்த்தீனியம் மருந்துக்கும் சரி, கோபுர செடி அழிக்கும் மருந்துக்கும் சரி… ஏகப்பட்ட வரவேற்பு. பெரிய நிறுவனங்கள் காப்புரிமை கேட்டு வர்றாங்க. ஆனா, இதை வச்சு காசு பண்றதுல எனக்கு உடன்பாடில்லை. பணம் எனக்குப் பிரதானமில்லை. எனக்குப் பிறகு, இயற்கை மேல ஈடுபாடும், பண்பாட்டு மேல பற்றும் இருக்கிற யாராவது ஒருத்தருக்கு இதைக் கத்துக் கொடுத்துடுவேன். அவ்வளவுதான்!’’- உற்சாகமாகச் சொல்கிறார் முருகானந்தம்.

கடல்ல கொட்டி அழிக்கிற கோதுமையை எங்களுக்குக் கொடுங்க’ ன்னு அமெரிக்காகிட்ட இந்தியா கேட்டுச்சு. அப்போ அனுப்பி வைக்கப்பட்ட கோதுமையில விதையா கலந்து வந்ததுதான் பார்த்தீனியம்.சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா எவ்வளவோ வளர்ச்சிகளை எட்டியிருக்கு. ஆனா, ஒரு தாவரத்துக்கு தீர்வு காண முடியலே..

. – வெ.நீலகண்டன்
படம்: புதூர் சரவணன்

திரு முருகானந்தம்(72) அவர்களை தொடர்புகொள்ள 8939280929

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline