நவீன கருவிகள் வந்தபோதும் ஏற்றம் இறைத்து பயிர் சாகுபடி: பழமை மறவாத புதுக்கோட்டை விவசாயி
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்னமும் மாடுபூட்டி ஏற்றம் இறைத்து சாகுபடி செய்துவருகிறார் விவசாயி கருப்பன் என்ற கருப்பையா(78).
மழவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அவர் தனது அனுபவம் குறித்து கூறியதாவது:
30 ஆண்டுகளுக்கு முன்பு 40 அடி ஆழத்துக்கு கிணறு வெட்டினோம். மழைக் காலத்துல கிணறு முழுக்க தண்ணீர் நிரம்பிவிடும். ஏற்றம் (2 மாடுகளைப் பூட்டி கிணற்றில் இருந்து தண்ணீரை இறைக்கும் சாதனம்) மூலம் அந்த தண்ணீரை இறைத்து விவசாயம் செய்தோம். அதிகாலையில மாடுகளை பூட்டினோமுன்னா 2 மணி நேரத்துல தண்ணீர் இறைச்சிடுவோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.14 ஆயிரத்துக்கு வாங்கின ஒரு ஜோடி மாடுகள் இன்றைக்கும் எங்க குடும்பத்துக்காக உழைக்கின்றன.
இந்த மாடுகளை வித்துப்புட்டு வேற மாடு வாங்கலாம். ஆனா, இப்பல்லாம் மாடுகளுக்கு உழவு, வண்டி இழுக்குறதுமட்டும்தான் பழக்கி வச்சுருப்பாங்க. ஏற்றத்துல தண்ணீர் இறைக்கத் தெரியாது. மற்ற வேலை மாதிரி ஏனோ, தானோன்னுலாம் தண்ணீர் இறைச்சுட முடியாது. 2 மாடும் கிணற்றுக்கரையிலிருந்து ஒரே மாதிரி முன்னோக்கி போற மாதிரியே பின்னோக்கியும் வரணும். வருடத்துக்கு 6 மாதம் 2 போகம் சாகுபடி செய்வோம். அப்புறம் மானாவாரியா உளுந்து, பயறை வீசிப்போட்டா விளையும்.
காலையில தண்ணீர் இறைச் சாலும், இறைவை இல்லாவிட்டாலும் ஏர் கலப்பை எடுத்தும், மாடுகளை ஓட்டிக் கொண்டும் கூலிக்கு உழவுக்குப்போனால் ஒரு நாளைக்கு ரூ.500 வரை கிடைக்கும். வேலை இல்லாத நாட்களில் தரிசுல கட்டி விட்டா மாடு மேஞ்சுடும். சொந்த வேலையைப் பார்க்க வேண்டியதுதான். வயலுக்கு தேவை யான அளவு குப்பை சேர்ந்திடும்.
சொந்தமா மாடு, கலப்பை இருப்பதால உழவு கூலி மிச்சம். தண்ணீருக்கு செல வழிக்கத் தேவையில்லை. அதனால, விவசாயத்துல பெருசா நஷ்டம் வந்து டாது. அப்படியே முழுசா போனாலுமே விதையும், உழைப்பும்தான் போகுமே தவிர குடும்பத்தை மோச மாக்கிடாது.
அதை வச்சுத்தான் எங்க அப்பா காலத்துல இருந்தே ஏற்றம் இறைத்து குடும்பத்தை ஓட்டுறோம். எங்க ஊருலயும் நிறைய பேரு மாடுகளை பராமரிக்க முடியாமல் கிணத் துல டீசல் மோட்டார் வச்சுத் தண்ணீர் பாய்ச் சுறாங்க. போர்போட்டு விவசாயம் செய்யு றாங்க. விலை கொடுத்தெல்லாம் டீசல் வாங்கி ஊத்தி சாகுபடி செஞ்சா கட்டுபடியாகாது.
விவசாயத்துல நிதானம், அனுபவம் இல்லாம ரொம்பவும் ஆடம்பரத்தைக் காட்டினா இருக்குற நிலத்தையும் இழந்துட்டுப் போகவேண்டியதுதான் என்றார். பழமை யான தொழில்நுட்பங்களைக் கொண்டு விவசாயம் செய்வது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இன்னமும் பழமையை வைத்து சாதிக்கும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்….