பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.
இது எவ்விடத்தில் தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை. தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில், கேரளா, கோவா, மும்பை தொடக்கம் குஜராத் வரையுள்ள பிரதேசங்கள், தமிழ் நாட்டில், கன்னியாகுமரி தொடக்கம், திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்கள் உட்படச் சென்னை வரை பனைகள் காணப்படுகின்றன. இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பனை மரம் தமிழ் நாட்டின் மாநில மரமும் ஆகும்.
பனையிலிருந்து பெறப்படும் பயன்கள்
இது முறையாகப் பயிரிடப்பட்டு வளர்க்கப்படும் ஒரு தாவரமாக இல்லாதிருப்பினும், இதிலிருந்து மக்கள் ஏராளமான பயன்களைப் பெறுகிறார்கள். இதன் நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும், முளைவிட ஆரம்பித்ததிலிருந்து, வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப், பனைகளுக்குப் பயன் உண்டு. இதனால்தான் இதனைப் பூலோக கற்பகதரு எனக் குறிப்பிடுகிறார்கள். கற்பகத்தரு என்பது வேண்டுபவர்களுக்கு வேண்டியனவெல்லாம் கொடுக்கின்ற, இந்துப் புராணக்கதைகளில் குறிப்பிடப்படும் ஒரு தேவலோகத்து மரமாகும். பனையிலிருந்து பலவகையான உணவுப் பொருள்களும், உணவல்லாத வேறு முக்கியமான பொருட்களும் பெறப்படுகின்றன. முற்காலத்தில் பனையோலைகளே எழுதப்பயன்பட்டு வந்தன. இன்றும் பல பழைய நூல்களைப் பனையோலைச் சுவடிகள் வடிவிலே காணலாம். இவற்றைவிடக் கட்டிடங்களுக்கு வேண்டிய பல கட்டிடப்பொருட்கள், கைப்பணிப் பொருட்கள், மற்றும் தும்பு, நார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருட்கள் என்பனவற்றையும் பனையிலிருந்து பெற முடியும். பொதுவாக, இது வளரும் இடங்களிலெல்லாம், வசதியற்ற ஏழை மக்களின் பொருளாதார நிலையுயர, அடித்தளமாக விளங்குகிறது. பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு கிடைக்கும் பொருட்களின் அளவு:
* பதனீர் – 180 லிட்டர்
* பனை வெல்லம் – 25 கி
* பனஞ்சீனி – 16 கி
* தும்பு – 11.4 கி
* ஈக்கு – 2.25 கி
* விறகு – 10 கி
* ஓலை – 10 கி
* நார் – 20 கி
நன்றி : Keerthana Shanmugam