பண்ணைக் குட்டை பாசனத்தில் பளபளக்கும் பாரம்பரிய ரகம் !
‘மொழி கருப்புச் சம்பா…’
‘தண்ணி இல்ல… என்னத்த செய்ய…’ இன்னிக்கு விவசாயத்தைவிட்டு வெளியேறும் பெரும்பாலானவர்களின் கருத்து இதுவாகத்தான் இருக்கிறது.ஆனால், ”தண்ணீர் இல்லேனா விவசாயத்தைவிட்டு வெளியேறணுமா என்ன… தண்ணீர் வளம் குறைந்த இஸ்ரேல்ல விவசாயம் செய்யலையா… நிலப்பரப்பே இல்லாத ஜப்பான்ல விவசாயம் செய்யலையா… வாய்ப்பை உருவாக்கிக்கிட்டா எப்பாடுபட்டாவது விவசாயம் செய்யலாம்” என்று தன்னம்பிக்கை தெறிக்கப் பேசுகிறார்கள், திருநெல்வேலி மாவட்டம் தாளார்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கனகசபாபதி, ரவி திரவியம்.
வெறும் வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல், தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் தாளார்குளம் பகுதியில் சிறப்பான முறையில் விவசாயமும் செய்து வருகிறார்கள், இவர்கள். தண்ணீர்ப் பற்றாக்குறையால் அப்பகுதி விளைநிலங்கள் குவாரிகளாக மாறிவிட்ட நிலையில், பசுமைக் கட்டி சிரிக்கிறது, இவர்களின் நிலம். திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல்-ஆலங்குளம் சாலையில் ஜந்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, தாளார்குளம். அந்த ஊரில், யாரிடம் கேட்டாலும், ‘அடடே அன்னையர் இயற்கை விவசாயப் பண்ணையா!’ என்றபடியே பாதை காட்டுகிறார்கள்.
குடும்பத்துடன் வயல் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கனகசபாபதி, ரவி திரவியம் ஆகியோரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள உற்சாகமாகப் பேசத் துவங்கினர்.
முதலில், கனகசபாபதி. ”சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம் அதிகம். தாத்தா காலத்துல விவசாயம்தான் பண்ணிட்டு இருந்தோம். விவசாயக் கல்லூரியில படிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்.
ஆனா, குடும்பச்சூழல் இன்ஜினீயரிங் பக்கம் திருப்பிடுச்சு. சென்னை, கொல்கத்தா, டெல்லினு பல இடங்கள்ல வேலை பார்த்தேன். கை நிறைய பணம் கிடைச்சாலும், மனசுல ஏதோ ஒரு வெறுமை.
நாலு வருஷத்துக்கு முன்ன தற்செயலா பசுமை விகடன் படிக்க கிடைச்சுது. அதைப் படிச்சதும், மனசுக்கு ரொம்ப இளைப்பாறுதலா இருந்துச்சு. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சதோட… அத்தனைப் புத்தகங்களையும் சேர்த்து வைக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்பறம்தான் விவசாயம் பண்ணனுங்கிற எண்ணம் உதயமாச்சு” என்றவர், பக்கத்தில் இருந்த ரவி திரவியத்தை சுட்டியவர்,
‘ரவியோட மனைவி மீனாவும், என் மனைவி ஜோதியும் அக்கா, தங்கச்சிங்க. இவர் எம்.பி.ஏ. முடிச்சுட்டு வெளிநாட்டுல வேலை பார்த்தார். அப்ப, இன்டர்நெட் மூலமாக ‘பசுமை விகடன்’ படிச்சுருக்கார்.
ஒரு தடவை ஊருக்கு வந்திருந்தப்போ தற்செயலா, ‘விவசாயம் பண்ணலாமா’னு நான் கேட்க, ஏற்கெனவே அந்த எண்ணத்துல இருந்தவர், உடனே ‘சரி’னு சொல்லிட்டார். ரெண்டு பேரும் சேர்ந்து 2010-ம் வருஷம் மார்ச் மாசம் இந்த 27 ஏக்கர் நிலத்தை வாங்கிட்டோம்.
அன்று முள் வனம்… இன்று வளம் கொழிக்கும் நிலம்!
கொஞ்சம் தென்னை மரங்கள் போக முழுக்க முள்ளுக்காடாதான் இருந்துச்சு இந்த இடம். நாங்க எல்லாரும் இருந்து வேலை பாத்து நிலத்தைத் திருத்தினோம்.
இப்போ 60 சென்ட்ல தென்னை; 60 சென்ட்ல ரொபஸ்டா, ஏத்தன், கதளி ரக வாழைகள்; நாலு ஏக்கர்ல தீவனப்பயிர்கள்; ரெண்டு ஏக்கர்ல பாகல், புடலை, பீர்க்கன், அவரைனு பந்தல் காய்கறிகள்; ரெண்டு ஏக்கர்ல தக்காளி, வெண்டை, பச்சை மிளகாய், சீனி அவரை, தட்டபயறுனு போட்டுருக்கோம்.
மூணு ஏக்கர்ல ‘மொழி கருப்புச் சம்பா’ ரக நெல்லை, ஒற்றை நாற்று முறையில் நடவு செஞ்சுருக்கோம். மீதியுள்ள இடமெல்லாம் தரிசாத்தான் இருக்கு. கார் காலத்துல நடவு செஞ்சு பனிக்காலத்தில் அறுவடை செய்ற ரகங்களை ‘சம்பா’னு சொல்லுவாங்க. சம்பா ரகம் மற்ற பட்டங்கள்ல வராது” என்று கனகசபாபதி நிறுத்த, அவருடைய மனைவி ஜோதி தொடர்ந்தார்.
”நான் எம்.காம். பட்டதாரி. என் தங்கச்சி மீனா பி.காம். படிச்சுருக்கா. எங்க தோட்டத்துல சாணிக்காக 6 நாட்டுப்பசு, 1 காளை, 4 கன்னு குட்டிகள வளக்குறோம்.நெல் வயலுக்கு உயிர்வேலியா கிளரிசீடியா போட்டுருக்கோம். தீவனப்பயிரான இது, காத்துல இருந்து நைட்ரஜன் சத்தைக் கிரகிச்சு நெல்லுக்குக் கொடுக்கும். இதேமாதிரி எங்க தோட்டத்தில் ரெண்டு கிணறு இருக்கு. அந்தக் கிணறுகள்ல இருந்து 50 அடி தள்ளி 100 அடி நீளம், 50 அடி அகலம், மூன்றடி ஆழத்தில் குழி பறிச்சு, குட்டை அமைச்சுருக்கோம். மழை பெய்யுற சமயங்கள்ல தோட்டத்துல வழிஞ்சு ஓடுற அவ்வளவு தண்ணியும் இந்தக் குட்டைக்கு வந்து சேர்ற மாதிரி அமைச்சுருக்கோம். இதனால கிணத்து நீர்மட்டமும் உயர்ந்துடுது. அதனாலதான் இவ்வளவு வறட்சி காலத்துலகூட எங்க கிணத்துல தண்ணி நிக்குது.தடையில்லாம விவசாயம் செய்ய முடியுது. சின்னத் தொழில்நுட்பம்தான்… ஆனா, அது எங்களுக்கு பெரிய அளவுல கை கொடுக்குது” என்றார்.
பக்கத்துத் தோட்டக்காரரான மாடசாமி, ”நான் ரெண்டு ஏக்கர்ல அம்பை-16 நெல் போட்டிருக்கேன். இந்த இடமே கரிசக்காட்டு பூமிதான். அதை இவுங்க இப்படி சாகுபடி பூமியா மாத்தியிருக்காங்க. எங்க பகுதி முழுக்க கல் குவாரிங்கதான். ஆழமா தோண்டுனாத்தான் இந்தப்பகுதியில தண்ணி கிடைக்கும். அப்படி இருந்தும் இவங்க கிணத்துல தண்ணி இருக்கு.ரசாயன உரம் போடுறவங்களே விக்கிட்டு நிக்குற சமயத்துல, ‘இயற்கை விவசாயம்னு என்னவோ கதை விடுதாக. என்னத்த விளையப் போகுது’னுதான் நினைச்சேன். இப்ப பயிரெல்லாம் விளைஞ்சு நிக்குறதைப் பார்த்தா… எனக்கும் இயற்கை விவசாயம் மேல ஆர்வம் வந்திருக்கு” என்று கனகசபாபதி உள்ளிட்டோரின் முயற்சிக்கு சாட்சி சொன்னார்.
இப்படித்தான் செய்யணும் சம்பா சாகுபடி!
மொழி கருப்புச் சம்பா ரக நெல் சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றிச் சொன்னார், ரவி திரவியம்.”மொழி கருப்புச் சம்பா 120 நாள் பயிர். நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பயிர் செய்ய ஏற்ற ரகம். ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு மூன்று கிலோ விதை தேவைப்படும். ஏக்கருக்கு மூன்று சென்ட் அளவு நிலத்தில் நாற்றங்கால் தேவைப்படும். நாற்றங்காலில் அரை டன் ஆட்டு எரு மற்றும் வாழைக் கழிவுகளைப் போட்டு, 14 நாட்கள் அழுக விட வேண்டும். பிறகு, ஏர் மாடு பூட்டி, ஈர உழவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
விதைநேர்த்தி முக்கியம்!
15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் வாளியில் பத்து லிட்டர் தண்ணீர் நிரப்பி, ஒரு முட்டையை மூழ்க விட வேண்டும். அதில் கொஞ்சம் கொஞ்சமாக கல்உப்பைச் சேர்த்து கரைத்துக் கொண்டே வரவேண்டும்.
ஒரு கட்டத்தில், முட்டை மிதக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில், கரைசலில் விதைநெல்லை போட்டு, அதில் மிதப்பவற்றை அகற்றி விட்டு, மூழ்கிய விதைகளை மட்டும் சேகரித்து… சுத்தமான நீரில் கழுவி, அமுதக்கரைசலில் 24 மணி நேரம் ஊற வைத்து எடுத்து, 12 மணி நேரம் வைத்திருந்தால் முளைக் கட்டும்.
அந்த நெல்லுடன்… 5 கிலோ பிண்ணாக்கு பொடி (வேம்பு, இலுப்பை, ஆமணக்கு ஆகிய மூன்று பிண்ணாக்குகளும் சம அளவு கலந்த பொடி), ஒரு கிலோ வேம் ஆகியவற்றைக் கலந்து நாற்றங்காலில் தூவிவிட வேண்டும். முளைத்து வரும் வரை இரவில் நீர் கட்டி, பகலில் வடித்துவிட வேண்டும். 18-ம் நாள் நாற்று அரை அடி உயரத்துக்கு மேல் வளர்ந்து விடும்.
குத்துக்கு இரண்டு நாற்றுகள்!
நாற்று தயாராகிக் கொண்டிருக்கும் போதே நடவு வயலையும் தயார் செய்துவிட வேண்டும். ஏக்கருக்கு ஒரு டன் மட்கிய எரு, சாணம், கொழிஞ்சி, ஆவாரை, எருக்கு, பனை ஓலை, தென்னைநார்க் கழிவுகள் மற்றும் குளத்துக்கரம்பை ஆகியவற்றைக் கொட்டி, இரண்டு உழவு செய்து… பத்து நாட்கள் தண்ணீர் கட்டி வைக்க வேண்டும்.
நடவு செய்யும் அன்று உழவு ஓட்டி, மண்ணை சேறாக மாற்றி, பரம்படிக்க வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 200 கிலோ என்ற கணக்கில் இடித்த வேப்பங்கொட்டையைத் தூவி, முக்கால் அடி இடைவெளியில், குத்துக்கு இரண்டு நாற்றுகள் வீதம் நடவு செய்ய வேண்டும்.
இப்படி நடவு செய்தால்… ஒரு நாற்று பழுதானாலும், அடுத்த நாற்று பிழைத்துக் கொள்ளும். நடவு செய்த ஏழு நாட்களுக்குள் பழுதான நாற்றுகளுக்கு பதில் புதிய நாற்றுகளை நடவு செய்துவிட வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலுமாக வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் விட்டு வர வேண்டும்.
ஜீவன் தரும் ஜீவாமிர்தம்!
நடவு செய்த 15-ம் நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை தண்ணீரில் கலந்துவிட வேண்டும்.30 நாட்களுக்கு ஒரு முறை ஜந்து லிட்டர் இ.எம். திரவத்தை 95 லிட்டர் நீரில் கலந்து, இலைவழித் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்.
75-ம் நாளில் ஆறு லிட்டர் மாட்டுச் சிறுநீரை, 60 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 85 மற்றும் 95-ம் நாட்களில் 50 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் மூலிகை பூச்சிவிரட்டியைக் கலந்து தெளிக்க வேண்டும்.105-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றும். அதன் பிறகு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட்டு, 120 நாட்களுக்கு மேல் அறுவடை செய்யலாம்” என்று சொன்னார் ரவி திரவியம்.
அவலாக விற்றால், அமோக லாபம் !
கனகசபாபதி மற்றும் ரவி திரவியம் ஆகியோர் மொழி கருப்புச் சம்பாவை அறுவடை செய்து அவலாக மாற்றிதான் விற்கிறார்கள். அதுபற்றிப் பேசியவர்கள், ‘மூணு ஏக்கர்ல இந்த ரகத்தைப் போட்டதுல 3 ஆயிரத்து 500 கிலோ நெல் கிடைச்சது. மொத்தத்தையும் அவலா மாத்தினப்போ 2 ஆயிரத்து 100 கிலோ அளவுக்கு அவல் கிடைச்சது (100 கிலோ நெல்லுக்கு 60 கிலோ அவல்). இயற்கை விவசாயத்துல விளைஞ்சதால ஒரு கிலோ அவல் 70 ரூபாய்னு வித்தோம். எப்படியும் 50 ரூபாய்க்குக் குறையாம வித்துடும்” என்றனர்.
தொடர்புக்கு,
ரவி திரவியம், செல்போன்: 96006-71858
கனகசபாபதி, செல்போன்: 95001-44078