பண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை

 

iyarkai

“காலை இஞ்சி.. கடும்பகல் சுக்கு.. மாலை கடுக்காய்.. மண்டலம் உண்டோர் கோல் இன்றி நடப்பாரே – இதுதானே பண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை” என முண்டாசை சரிசெய்தபடி மீசையை முறுக்குகிறார் முத்துச்சாமி. 75 வயதானாலும் 25 வயது இளைஞனிடம் இல்லாத சுறுசுறுப்பை இவரிடம் பார்க்கலாம். திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் உள்ள முத்துச்சாமியின் வீடு இந்தத் தலைமுறை நிச்சயம் காணவேண்டிய ஒரு அருங்காட்சியகம். சாணம் மெழுகிய திண்ணைகள், கயிற்றுக்கட்டில், பனை ஓலை விசிறி, சீமை ஓட்டு மேல்கூரை, பொன்னாங்கண்ணி, வில்வம், கத்தாழை, தூதுவளை, புதினாவுடன் கூடிய மூலிகைத் தோட்டம், தினசரி சாப்பாட்டுக்காக மாடியில் காய்கறித் தோட்டம், அதன் பக்கத்தில் அறிவை மேம்படுத்தும் பெரிய நூலகம்.. என்று இயற்கையோடு இயைந்து, இணைந்து வாழ்கிறார் முத்துச்சாமி. அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அவரது வாழ்க்கை முறையைப் பார்த்து வாயைப் பிளக்கிறார்கள். “எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்பதுதான் நான் வாழும் இந்த வாழ்க்கையின் உண்மை தத்துவம்.

தமிழகத்தின் தேசிய மரம் பனை. ஆனால், கொஞ்சம்கூட யோசிக்காம அதை அழிச்சிட்டு வர்றாங்க. செங்கல் சூளைக்காக பனை மரத்தை தூரோடு வெட்டி எடுத்துட்டே இருக்காங்க. பனைப்பால், பனை நுங்கு, பனை ஓலை, கருப்பட்டி என வாழைக் கன்றுபோல பனையின் அனைத்து பாகங்களும் பயன்படும். பனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஒரு குறளுக்கு 100 மரம் வீதம் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பனை மரங்களை திருப்பூர், காங்கயம், சென்னிமலை, கைத்தமலை, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிமலை, நரசிபுரம், பவானி உள்ளிட்ட பகுதிகளில் நட்டுவைத்தோம். ஆனாலும், பனை மரங்களை அழிப்பது நின்றபாடில்லை” – இயற்கையின் மீது தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்திய முத்துச்சாமி,

தன்னைப் பற்றியும் பேசினார். “வருஷா வருஷம் முதியோர் தடகளப் போட்டியில் எனக்குதான் முதலிடம். அந்தளவுக்கு என் மனசையும் உடம்பையும் இயற்கை உணவு காப்பாத்தி வைச்சுருக்கு. இதுவரை எந்த நோயும் அண்டியதில்லை. காலையில் வரகரிசி உப்புமா, கொஞ்சம் கீரை, அரை வேக்காட்டில் காய்கறிகள், மூலிகை தோசை, ராகி, கேப்பை, கம்பு, கூழ்னு எனக்குப் பிடிச்சத எடுத்துக்குவேன். சிறுதானியங்கள் என் உணவுல பிரதான அங்கம். தமிழரின் வாழ்க்கை முறையே அப்படி இருந்ததுதானே.

இன்றைக்கு இருப்பதுபோல பளபளக்கும் பகட்டு டப்பாக்களுக்குள் நம் முன்னோர்கள் முடங்கிப் போகவில்லையே? வீட்டில் சமையலுக்குகூட, கடைகளில் அரைத்து விற்கப்படும் எந்தவொரு பொருளையும் நாங்க பயன்படுத்துறதில்லை. மூணு வேளையும் முழு கட்டு கட்டுற வேலையும் எனக்குப் பிடிக்காது. காலை மற்றும் பொழுதுசாயும் நேரம் என தினமும் ரெண்டு வேளைதான் சாப்பாடு. மத்த நேரங்களில் சுக்கு கசாயம் போதும். வெளியூர் போனா ஓட்டலைத் தேடிப் போறதில்லை. அதுக்குப் பதிலா, கொஞ்சூண்டு அவல் எடுத்துட்டுப் போயிருவேன். ஒருவேளை பசியாற மூணு கைப்பிடி அவல் போதும். நான் மட்டுமல்ல..

சுப்புலட்சுமியும் அப்படித்தான்” என்று தன் மனைவியை அறிமுகப்படுத்துகிறார். “எந்தச் சூழலிலும் இயற்கைக்கு முரணா வாழக்கூடாதுன்னு இவரு அடிக்கடி சொல்வாரு. செல்போன் அதிகரிச்சதால சிட்டுக்குருவிகள் அழிஞ்சுட்டு இருக்கு, அதனால செல்போனை நாங்க கையால தொடுறதே இல்லை. பெட்ரோலுக்குத்தானே இந்த உலகத்துல பெரும் யுத்தம் நடக்குது. பெட்ரோல் வண்டிகளோட கரும் புகை நம்மைச் சுற்றி நச்சுக்களை பரப்பி இயற்கையை அழிச்சுக்கிட்டே இருக்கு. அதனால, பெட்ரோல் பயன்படுத்தவே கூடாதுன்னு வைராக்கியம் வச்சுக்கிட்டு, இப்ப வரைக்கும் சைக்கிள்தான் ஓட்டுறாரு. அளவுக்கு அதிகமாக தண்ணீரை வீணடிக்கிறதும் நாம பூமிக்கு செய்யுற துரோகம்னு சொல்வாரு. வீட்டுல மின்சார வசதிகூட ரொம்ப நாளா இல்லை. இப்பத்தான் சோலார் பேனல் மூலமா ஒரே ஒரு லைட்டுக்கும், காத்தாடிக்கும் தேவையான அளவுக்கு இயற்கை மின்சாரம் உபயோகிக்கிறோம். இவரு வெளியூர்களுக்கு போனாக்கூட கீழாநெல்லி, துளசி மாதிரியான கன்றுகளைத்தான் வாங்கிட்டு வருவாரு. நாங்க, முடிஞ்ச வரைக்கும் இயற்கையை சீரழிக்காம வாழ்ந்துட்டு இருக்கோம். அதனால, எங்க வாழ்க்கையும் ரொம்ப ஆரோக்கியமாக இருக்கு. ஆனா, தங்களையும் அறியாமல் இயற்கையை அழிச்சிட்டு இருக்கிற சனங்க, ‘எப்படி உங்களால இந்தக் காலத்துலயும் இப்படி எல்லாம் வாழமுடியுது.

 

இந்தக் காலத்துக்கு இதெல்லாம் சரிப்பட்டு வருமா?’ன்னு கேள்வி கேக்குறப்ப சிரிக்கிறதா வேதனைப்படுறதான்னு தெரியல” கணவர் கருத்திலிருந்து கடுகளவும் மாறாமல் பேசினார் சுப்புலட்சுமி. ‘அரசு விழாக்களில் புலால் உணவு பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும்’ என முத்துச்சாமி எழுதிய கோரிக்கை மனுவை ஏற்றுத்தான், ‘இனி, அரசு விழாக்களில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும்’என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்ததாம். பெருமையுடன் சொல்கிறார் முத்துச்சாமி. இயற்கையோடு இணைந்த இவர்களது வாழ்க்கைமுறை பற்றி கேள்விப்பட்டு, இந்தக் காலத்து இளைஞர்கள் பலரும் இவர்களது வீட்டுக்கு வந்து விசாரித்துவிட்டுப் போகிறார்களாம். இவர்களில் பலர், ‘நாங்களும் உங்களைப் போல இயற்கைக்கு மாறிட்டோம் ஐயா’ என்று சொல்ல ஆரம்பித்திருப்பது முத்துச்சாமியின் இயற்கை வாழ்வியல் முறைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி

One Response

  1. M.srividhya 09/03/2021

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline