12 அடிக்கும் மேலாக வளர்ந்த நெல்: புத்தளத்தில் அதிசயம்…
சாதாரணமாக நெற் பயிர் ஒன்று சுமார் ஒரு அடி அல்லது ஒன்றரை அடி வரை வளர்ந்துள்ளதையே நாம் இது வரைக் கண்டிருக்கின்றோம். ஆனால் அந்த பயிர் ஒரு மரமாக அதுவும் 12 அடிக்கும் மேல் வளர்ந்த ஒரு மரமாகக் காணக் கிடைப்பது ஆச்சரியமான விடயம்தானே?
அந்த நெல் மரத்தைக் காணும் வரை அதனை நம்பவில்லைதான். ஆனால் அந்த நெல் மரத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டுத்தான் போனோம். இந்த நெல் மரங்களை வேறு எங்கும் அல்ல. இலங்கை புத்தளம் மாவட்டத்தில் ஆனமடு கொட்டுக்கச்சி பிரதேசத்திலேயே கண்டு வியக்காமல் எப்படி இருக்க முடியும்?!.
ஆனமடு கொட்டுக்கச்சி எத்துன்கொட கிராமத்தில் வசிக்கும் எம்.தனபால என்பவர் பரம்பரையான ஒரு விவசாயி. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் இவருக்கு சில விதை நெற்கள் கிடைத்துள்ளது. அவைகளை அவர் தனது வீட்டுத் தோட்டத்தில் பதியம் போட்டுள்ளார்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால், பதியம் போடப்பட்ட நெல்லின் நெற்கதிர்கள் தினம் தினம் வளர ஆரம்பித்து மரமாக வளர்ந்து இருக்கின்றது.
தற்போது ஒரு நெல் மரம் சுமார் 12 அடிக்கும் மேலாக வளர்ந்திருக்கின்றது. அதன் ஒரு நெற் கதிரின் எடை சுமார் 300 கிராம் அளவில் உள்ளதாக அதன் உரிமையாளரான தனபால தெரிவிக்கின்றார்.
தான் தனது வாழ்நாளில் ஒரு போதும் இவ்வாறான நெல் மரங்களைக் கண்டதில்லை என்று கூறும் அவர், அந்த நெல் மரங்களைப் பாதுகாப்பதற்கு தன்னால் இயன்ற முறைகளைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நெல் மரங்களில் மிகவும் செழிப்பாக நெல் கதிரிட்டுள்ளதால் அந்த நெற் கதிர்களைப் கிளிகள், பறவைகள் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க வீட்டில் உள்ள நுளம்பு வலைகளைப் பயன்படுத்தி வருவதை காண முடிந்தது.