நூல்கோல் சாகுபடி ஆண்டு முழுவதும் வருமானம்

noolkol_pannaiyar

மலைப்பிரதேசங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்த நூல்கோல் சில ஆண்டுகளாகத் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளான கம்பம், அணைக்கரைப்பட்டி, கே.கே.பட்டி, என்.டி.பட்டி பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.

பல்வேறு மருத்துவக்குணங்களைக் கொண்ட நூல்கோலை கடந்த 12 ஆண்டுகளுக்கு மேல் சாகுபடி செய்து அதிக லாபம் சம்பாதித்துவருகிறார் கம்பம் அணைக்கரைப்பட்டியை சேர்ந்த நூல்கோல் விவசாயி எஸ். பொம்முராஜ். தன்னுடைய அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார்:

கம்பம் பள்ளத்தாக்கில் நெல், திராட்சை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுவந்தது. இதற்கு மாற்று ஏற்பாடாக ஆங்கிலக் காய்கறியான நூல்கோலை சாகுபடி செய்ய முடிவு செய்தேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய ஒன்றரை குழி நிலத்தில் (90 சென்ட்) சாகுபடி செய்தேன். விதை நடவு செய்த 60 நாட்களில் அறுவடைக்குத் தயாரானது. மேலும் செலவும் குறைவாக இருந்தது. 60 நாட்களில் லாபம் கிடைத்ததால் இதைத் தொடர்ந்து சாகுபடி செய்ய அதிகம் ஆர்வம் காட்டிவருகிறேன்.

நோய் தாக்குதல் குறைவு

செம்மண், கரிசல் மண் கலந்த நிலத்தில் நன்கு வளரும் நூல்கோலை, ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய மூன்று அல்லது நான்கு கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதை தரத்துக்கேற்ப ரூ. 840 முதல் ரூ. 1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. தரமான விதைகளைத் தேர்வு செய்து விதைக்க வேண்டும். விதை நடவு செய்த இரண்டு மாதங்களில் அறுவடை செய்து விடலாம். புதிதாக நூல்கோல் சாகுபடி செய்யும் விவசாயிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் அறுவடை செய்துவிட வேண்டும். அனுபவத்தைப் பொறுத்துப் பின்னர் மாற்றிக்கொள்ளலாம்.

ஆண்டு முழுவதும் இதைச் சாகுபடி செய்யலாம் என்பது இன்னொரு வசதி. கோடைக் காலத்தைத் தவிர மற்ற காலங்களில் சாகுபடி செய்வது நல்லது. குறிப்பாகக் குளிர் காலங்களில் விளைச்சல் அமோகமாக இருக்கும். நோய் தாக்குதல் மிகவும் குறைவு, கோடைக் காலத்தில் சாகுபடி செய்தால் வெள்ளை பூச்சி, பழுப்புநோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக இந்தக் காலகட்டத்தில் விளைச்சலும் கணிசமாகக் குறைந்துவிடும். விதை நடவு செய்வதற்கு முன்பு அடியுரமாக இயற்கை உரங்களை இட்டால் விளைச்சல் சிறப்பாக இருக்கும்.

அதிக லாபம்

ஒரு ஏக்கருக்கு விதை, கூலி, வாகனப் போக்குவரத்து என ரூ. 20 ஆயிரம்வரை செலவு ஏற்படும். 60 நாட்களில் ஆயிரம் முதல் 1,200 கிலோ நூல்கோலை அறுவடை செய்யலாம். சராசரியாகக் கிலோ ரூ.10 என விற்பனையானாலும், செலவு போக ரூ.1லட்சம்வரை லாபம் சம்பாதிக்கலாம்.

அரிய மருத்துவப் பலன்கள்

நூல்கோலை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. அத்துடன் புற்றுநோய், ஆஸ்துமா நோய்களை வரவிடாமல் தடுக்கிறது. செரிமானத்துக்கும், ரத்தச் சுழற்சிக்கும் பெரிதும் உதவுகிறது. ரத்தக்கொதிப்பைச் சீராக வைத்திருக்கிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது என இதன் மகத்துவத்தை மருத்துவர்கள் பட்டியல் இடுகின்றனர்.

விவசாயி எஸ். பொம்முராஜ்
தொடர்புக்கு: 9786181118

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline