தோட்டக் கோழிப் பண்ணையம்

தோட்டக் கோழிப் பண்ணையம் :

கோழிகளையும் குஞ்சுகளையும் மற்ற பிராணிகளிடமிருந்து பாது காத்தல்.

sevenstar farmsPhoto :SeveStarFarms

 

கோழிப் பண்ணை அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் தேவையற்ற குப்பை கூளங்கள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

அருகில் புதர்கள் இருந்தால் அவற்றை அகற்றி விடுங்கள்.

தினமும் காலையிலேயே கோழிப் பிளுக்கைகளைப் பெறுக்கி அவற்றைப் பண்ணையை விட்டு அப்பால் ஒரு தனி இடத்தில் கொட்டி மண்ணால் மூடுங்கள்-இதனால் அது நன்கு மட்கி நல்ல உரமாக மாறிவிடும்.

பிளுக்கைகள் குவித்து வைக்கப்பட்டால் அவை காற்றில் மட்கும்போது வெளிவரும் குளோரின், மீதேன் முதலிய நச்சு வாயுக்களின் வாசம் பாம்பு, உடும்பு, பூனை, கீரி, நரி, காட்டுப் பூனை முதலிய பிராணிகளை ஈர்க்கக் கூடியது.

காலையும் மாலையும் பண்ணைக்குள் வெயில் படும்படியாக சற்று உயரமாகக் கூரையை அமையுங்கள்.
இதனால் பண்ணைக்குள் ஈரம் கோர்ப்பது குறையும்.
ஈரமிக்க பண்ணைத் தரை அதில் ஒட்டியுள்ள கோழி எச்சங்களிலிருந்து நச்சு வாயுக்களை வெளிவிடும்.
இதனால் கோழிகளுக்குச்சளித் தொல்லைகள் வரும்.

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பண்ணை முழுவதும் 5 சதவீத வேம்புக் கரைசலைப் பரவலாக பண்ணைத் தரை நன்றாக நனையும்படித் தெளியுங்கள்.
இதனால் உண்ணிகள், பேன்கள், தத்துப் பூச்சிகள், தெள்ளுப் பூச்சிகள் ஆகிய கோழி ஒட்டுண்ணிகள் அனைத்தும் பண்ணைக்குள் இராது.

மேற்கூறிய ஒட்டுண்ணிகள் அதிகமாக இருந்தால் பலமுறை இந்த வேம்புக் கரைசலைத்தெளிப்பதன் மூலமாகவே நன்றாகக் கட்டுப் படுத்தலாம்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் கடுமையான இரசாயன நஞ்சுகளாகிய ப்யூடாக்ஸ், போரான், நுவக்ரான், செல்ஃபாஸ் எதனையும் பண்னைக்குள் தெளிக்காதீர்கள்.

இவை நீண்ட காலத்திற்கு “நின்று செயலாற்றும் திறன்” மிக்கவை! அவ்வாறு இவை “நின்று செயலாற்றி” உங்கள் இளம் குஞ்சுகளை எந்தக் காரணமும் இன்றிக் கொல்லக் கூடியவை! புழு பூச்சிகளுக்காக மண்ணை எப்போதும் கொத்தியும் கால்களால் பறித்தும் கிளறும் குணம் உள்ள தோட்டக் கோழிகளுக்கு இவை பரம எதிரி ஆகும் என்பதை நினைவில் வையுங்கள்.

பண்ணைக்கு அருகில் பண்ணையை நன்கு பார்க்கும் படியாக ஒரு சுறுசுறுப்பான நாயை எப்போதும் கட்டி வையுங்கள்.
அதற்கு மறவாமல் நன்றாகச் சோறு கொடுங்கள்! இல்லாவிட்டால் அது அருகில் வரும் கோழிக் குஞ்சுகளை அவ்வப் போது சாப்பிட்டுப் பசியாறிக் கொள்ளும்!
அப்போது தொட்டுக் கொள்வதற்குக் கொழிப் பிளுக்கைகளை வைத்துக் கொள்ளும்!

நாய்க் காவலின் கீழ் இருக்கும் பண்ணைகளில் பாம்புகளும் மற்ற பிராணிகளும் வருவது இல்லை. அப்படி வந்தாலும் நாய் அவற்றை முன்னதாகவே மோப்பத்த்தின் மூலம் கண்டு கொண்டு குரைக்கும். உங்கள் கோழிகளைத் தின்னாதவாறு பழக்கப் பட்ட நாயாக இருந்தால் அதை உங்கள் பண்ணைக்குள் கட்டிவைக்காமல் விட்டு விடலாம். அப்போது அது பண்ணைக்குள் வரும் மற்ற பிராணிகளி விரட்டி விடும். பாம்புகளையும் கீரிகளையும் நாய் திறமையாகத் தடுத்து நிறுத்தும்.

பருந்து, காக்கை மற்றும் கழுகு ஆகியவை, குஞ்சுகளை அடையிலிருந்து இறக்கி விட்டதும் அடிக்கடி வரும். இதற்கு இளம் குஞ்சுக் கோழிகளை பத்து நாட்கள் வரை கம்பி வலைக் கூண்டுக்குள் அல்லது பந்தல் கம்பி வேய்ந்த இடத்தில் விட வேண்டும்.

அத்துடன் பண்ணை திறந்த வெளியில் அமைந்திருந்தால் ஆங்காங்கே தென்னை மட்டைகளைச் சிறு சிறு கூடாரங்களைப் போலப் பின்னி நிறுத்தி வையுங்கள்.

பிற பறவைகள் விரட்டினால் குஞ்சுகளும் தாய்க் கோழியும் இவற்றிற்குல் ஓடிப் புகுந்து கொள்ளும்.

கோழிகள் உங்களிடம் வந்து தீனியை உங்கள் கையிலிருந்து தின்னப் பழக்கவே பழக்காதீர்கள். இது மற்றவர்கள் நீங்கள் இல்லாத போதுகோழிகளைப் பிடிப்பதற்கு வழி வைக்கும்.

நன்றி :Chandramouleeswaran MK Marudhachalam

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline