தென்னை வளர்ப்பில் சொட்டுநீரின் பாசனம் – விவசாயியின் அனுபவம்

தென்னை வளர்ப்பில் சொட்டுநீரின் பாசனம் – விவசாயியின் அனுபவம்

994009_209677045872793_1699923961_n

அனுபவ விவசாயி சேத்தூர் கிராமத்தில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்டு புது முயற்சியடன் ஒரு ஏக்கருக்கு 1000 காய்கள் வீதம் மாதா மாதம் அறுவடை செய்ய வேண்டும் என்று முயற்சிசெய்து கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் உள்ள தென்னை விவசாயிகளை விவசாய அதிகாரிகள் மூலம் சந்தித்து அவர்கள் ஆலோசனையின் பேரில் தற்போது சொட்டுநீர் அமைத்து தண்ணீர் பாய்ச்சுகிறார்.

ஆரம்பத்தில் சொட்டுநீர் மூலம் பல பிரச்னைகள் ஏற்பட்டது. குழாய் அடைப்புகள் மற்றும் தண்ணீர் அனைத்து மரங்களுக்கும் சரியாக பாயாமல் இருந்தது. அதனை நானே அனைத்து குழாய்களையும் மரங்களுக்கு ஏற்றவாறு குறைத்தும் கூட்டியும் வைத்து தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். தற்போது உரங்கள் தோண்டி வைப்பதில்லை. நீர் உரத்தொட்டி மூலம் தண்ணீர் பாயும்போது கரைத்துவிடுவேன். உரங்கள் மாதம் ஒரு முறை கொடுத்து வருகிறேன்.

அதாவது தென்னைக்கு உர பரிந்துரை ஆண்டுக்கு யூரியா-1.300, பொட்டாஷ்-2.000 கிலோ, சூப்பர் பாஸ்பேட்-2.000. இதில் சூப்பர் பாஸ்பேட் உரம் தண்ணீரில் கரையாது. இதற்கு பதிலாக டிஏபி உரத்தை கொடுத்து வருகிறேன். மேற்கண்ட அளவினை 12ல் ஒரு பங்காக பிரித்து அதில் 75% மட்டும் மாதம் ஒரு முறை உரம் கொடுத்து வருகிறேன். அதாவது 100 மரத்திற்கு ஒரு கேட்வால்வு மூலம் தண்ணீர் பாயுமாறு அமைத்துள்ளேன்.

100 மரம் வரை மாதம் ஒரு முறை உர அளவு:
யூரியா-6 கிலோ (8 கிலோ யூரியா கொடுக்க வேண்டும். இதில் டிஏபி2ல் 2 கிலோ யூரியா உள்ளது). பொட்டாஷ்-12 கிலோ, டிஏபி-4 கிலோ, மக்னீசியம் சல்பேட்-3 கிலோ, போராக்ஸ்-400 கிராம், சிங்க் சல்பேட்-400 கிராம் மாதம் ஒரு முறை கொடுத்து வருகிறேன்.

இதுபோக தென்னை நார்க்கழிவு மரத்திற்கு ஒரு கூடை, ஆட்டு சாணம் ஒரு சட்டி (சாந்து சட்டி அளவு) மரத்தைச் சுற்றி வட்டப்பாத்தியில் போட்டுள்ளேன். இவ்வாறு கொடுக்கும்போது பாளையம் 28 நாளுக்கு ஒரு பாளை வருகிறது. குரும்பைகள் கொட்டுவது நின்றுவிட்டது. ஒரு குலையில் 30-40 குரும்பை பிடிக்கிறது. மாதம் ஒரு அறுவடை தவறாமல் கிடைக்கிறது. தற்போது ஒரு ஏக்கருக்கு 1000 முதல் 1200 காய்கள் வரை கிடைக்கிறது. இன்னும் 1500 காய்கள் கொண்டுவரலாம் என்ற முயற்சியோடு ஒரு கடலைகூட உதிராமல் இருப்பதற்கு நிலக்கரி கழிவுகளால் கிடைக்கும் ஹியூமிக்கால் என்ற உரத்தை கொடுத்து வருகிறேன். மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 50 கிராம் மண்ணில் நேரடியாக இடவேண்டும். தற்போது இந்த முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன்.

சொட்டுநீர் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதால் ஒரு முறை உழவு செய்தால் இரண்டு ஆண்டுக்கு உழவு செய்ய தேவையில்லை. தண்ணீர் மரத்தை சுற்றிலும் பாய்வதால் களைகள் அதிகம் தோப்புக்குள் தோன்றுவது இல்லை. உழவு செலவு மிச்சமாகிறது. உரச்செலவு கூடுதல் மிச்சமாகிறது. மாதாமாதம் உரம் கொடுப்பதினால் உரம் தோண்டி வைக்க தேவையில்லை. உரம் வைக்கும் ஆள் கூலி குறைகிறது. தண்ணீர் பாய்ச்சுவதற்கென்று தனி ஆள் தேவையில்லை. நாமே நமது வேலைகளையும் பார்த்துக்கொண்டு தண்ணீர் பாய்ச்சிவிடலாம்.
சொட்டுநீர் மூலம் குறைந்த செலவில் விவசாயம் செய்து நிறைய வருமானம் பெறலாம்.

தற்போது உள்ள உர விலை ஏற்றம், ஏனைய செலவுகள் கூடுதலாக இருப்பதால் சொட்டுநீர் மூலம் தென்னை வளர்ப்பால் அதிக லாபம் அடையலாம். தண்ணீர் நமக்கு அதிக மிச்சமாகிறது. அதாவது சாதாரணமா 10-15 நாளுக்கு ஒருமுறைதான் தண்ணீர் பாய்ச்ச முடியும். ஆனால் சொட்டுநீரில் தினமும் தண்ணீர் பாய்ச்சலாம். அதாவது கோடைகாலத்தில் ஒரு மணி நேரம் தண்ணீர் இருந்தால் ஒரு நாளைக்கு 3 ஏக்கர் தண்ணீர் பாய்ச்சலாம். குறைந்த தண்ணீரைக் கொண்டு அதிக மகசூல் எடுக்கலாம்

One Response

  1. P.Senthilkumar 06/09/2017

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline