துணிகளில் கடினமான கறைகள் படிஞ்சுருக்கா? இதோ சில டிப்ஸ்..

மிகவும் விருப்பமான துணிகளில் கறைகள் படிவது தான். அதிலும் அவற்றை எப்படி தான் துவைத்தாலும், அவை போகாமல், அந்த துணியின் அழகைக் கெடுப்பது என்றால் அது அதைவிட மிகக் கொடுமையான விஷயம். சொல்லப்போனால் அந்த கறைகள் நம்மால் தான் படிகிறது. அப்படி படியும் கறைகளில் ஒருசில கறைகளை எளிதில் நீக்கிவிடலாம். ஆனால் காப்பி, ஒயின், க்ரீஸ் போன்ற கறைகள் படிந்தால், அந்த துணியே வேஸ்ட் என்று தூக்கிப் போட்டு விடுவோம். ஆனால், அத்தகைய கறைகளையும் எளிதில் நீக்கலாம். இப்போது அந்த கறைகளை எப்படி எளிதில் நீக்குவது என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

காப்பி/ டீ கறைகள்: காப்பி குடிக்கும் போது துணிகளில் அவை பட்டுவிட்டால், உடனே வீட்டில் இருக்கும் டிஷ் வாஷ் சோப்பு நீர்மத்தை, கறை படிந்த இடத்தில் விட்டு, 5 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை நன்கு தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் அலசினால் கறைகள் போய்விடும்.

இரத்தக் கறைகள்: இரத்தக் கறைகள் என்றதும் கொலை செய்யும் போது மட்டும் தான் ஏற்படும் என்று நினைக்க வேண்டா. இந்த வகையான கறைகள் பெண்களுக்கு மாதவிடாயின் போது அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆகவே இந்த நேரத்தில் ஏற்படும் கறைகள் சில துணிகளில் போகாமல் இருக்கும். இதற்கு காரணம் கறை படியும் போது உடனே குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். தாமதமானால் தான் அந்த கறைகள் போகாமல் இருக்கிறது. ஏனெனில் அப்போது இரத்தம் உறைந்து, அந்த இடத்தில் தங்கிவிடுகிறது.

பேனா மை கறைகள்: பெரும்பாலும் இந்த மாதிரியான கறைகள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தான் ஏற்படும். இந்த கறைகளை நீக்க சிறந்த ஒரு மேஜிக் என்ன தெரியுமா? அது தான் ஹேர் ஸ்ப்ரே. அதிலும் இந்த ஸ்ப்ரேவை கறை போகும் வரை தெளித்து நன்கு தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போய்விடும்.

சாக்லேட் கறைகள்: சாக்லேட் பிரியர்கள் இந்த உலகில் மிகவும் அதிகம். அதே சமயம், அந்த கறைகளை ஏற்படுத்துபவர்களும் அதிகம். ஏனெனில் சிலர் ரசித்து ருசித்து சாப்பிடுகிறேன் என்று உருகும் வரை சாப்பிடுவார்கள், பின் அது துணிகளில் ஒட்டும். முதலில் சாக்லேட்டை எப்போது சாப்பிடும் போதும் ப்ரிட்ஜில் வைத்து சற்று கெட்டியாக்கி பின்னரே சாப்பிட வேண்டும். அதிலும் உருகிவிட்டால், ஒரு ஸ்பூனால் எடுத்து சாப்பிட வேண்டும். சரி அந்த கறைகள் படிந்துவிட்டால், நெயில் பாலிஷ் ரிமூவரை அந்த கறையின் மீது தெளித்து, தேய்க்காமல் சற்று நேரம் விட்டுவிட வேண்டும். இதனால் அந்த கறைகள் அந்த ரிமூவரை உறிஞ்சிவிடும். பிறகு அதனை துவைத்தால், அது போய்விடும்.

ஒயின் கறைகள்: ஒயின் கறைகள் துணிகளிலோ அல்லது டேபிள் கவரிலோ படிந்துவிட்டால், அதன் மேல் வட்ட வடிவமான ஒரு ஒளிவட்டம் போல் தோன்றும். ஆகவே அதனை நீக்க பேக்கிங் சோடாவை வைத்து துவைத்தால், கறைகள் நீக்கி பளிச்சென்று ஆகிவிடும்.

க்ரீஸ் கறைகள்: சைக்கிள், பைக், கார் போன்றவற்றால் துணிகளில் க்ரீஸ் கறைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வாறு க்ரீஸ் படிந்துவிட்டால், துணி வீணாகிவிட்டது என்று பயப்பட வேண்டாம். அப்போது அந்த கறையை போக்க, கார்ன் ஸ்டார்ச் அல்லது பேக்கிங் சோடாவை அந்த இடத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் டிடர்ஜெண்ட் மூலம் நன்கு துவைத்தால் கண்டிப்பாக போய்விடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline