தினை இனிப்புப் பொங்கல்!
தேவையானவை: தினை அரிசி-200 கிராம், பாசிப்பருப்பு-, 100 கிராம், நெய்-4 தேக்கரண்டி, முந்திரி, திராட்சை-தலா 25 கிராம், ஏலக்காய்-3, வெல்லம் அல்லது பனைவெல்லம்-250 கிராம்.
தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் கலந்து அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு, ஒரு பங்கு தினை அரிசிக்கு, நாலு பங்கு தண்ணீர் என்கிற விகிதத்தில் கலந்து, நன்றாக வேக வைக்க வேண்டும். முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் அல்லது பனை வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, வேகவைத்த தினைச் சோறில் கலந்து, வறுத்த முந்திரி, திராட்சையுடன் ஏலக்காயை இடித்துப் போட்டு கிளறினால், பொங்கல் தயார்.
குறிப்பு: கடைகளில் தினை அரிசி என்று கேட்டு வாங்க வேண்டும். தினை என்று வாங்கினால், அது தோலோடு இருக்கும். அதை நீக்குவது கடினமான வேலையாக இருக்கும். தினை அரிசி காதி கிராஃப்ட் உள்ளிட்ட கடைகளில் கிடைக்கும்.
தினை பாயசம்!
பாசிப்பருப்பு- 50 கிராம், தினை- 100 கிராம், நெய்- 2 தேக்கரண்டி முந்திரி, திராட்சை- 25 கிராம், வெல்லம்- 150 கிராம், பால்-200 மில்லி, தேங்காய் துருவல்-கால் மூடி.
பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். தினையை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து, 1 பங்குக்கு 5 பங்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். நெய்யில் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து கொள்ள வேண்டும். வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி, வேக வைத்த கஞ்சியில் ஊற்றவேண்டும். இறுதியாக, பால், தேங்காய் துருவல் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை இட்டுக் கிளறி லேசாகக் கொதிக்கவிட்டால், பாயசம் தயார்.