ரசாயன விவசாயத்தில் 70 லட்சம்… ஜீரோ பட்ஜெட்டில் 82 லட்சம்...
லாபத்தைக் கூட்டும் ஜீவாமிர்தம்..!
பூச்சிகள் தாக்குவதில்லை. நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது. வயதான மரங்களும் காய்க்கின்றன.
வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கரின் ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறை கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் ரசாயன விவசாயத்தில் இருந்து ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாறத் தயாராகும் தென்னை விவசாயிகளுக்கு எழும் பெருத்த சந்தேகம், ‘ஏற்கெனவே ரசாயன உரங்களைப் பயன்படுத்தி அமைத்த தென்னந் தோப்புகளை ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாற்ற முடியுமா?’ என்பதுதான்.
அவர்களுக்கெல்லாம் பாலேக்கர் சொல்லும் பதில்… ‘ஜீவாமிர்தத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து ஜீரோ பட்ஜெட் முறைக்கு எளிதாக மாறி விடலாம்’ என்பதுதான். இதை நடைமுறையிலும் நிரூபித்து வெற்றிபெற்று வருகின்றனர் தென்னை விவசாயிகளில் பலரும்!
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, அருகில் உள்ள சேத்துமடை கிராமத்தைச் சேர்ந்த வி.எஸ். உதயகுமார்… அவர்களில் ஒருவர்!
பொள்ளாச்சியில் இருந்து டாப்ஸ்லிப் செல்லும் வழியில் இருக்கிறது, உதயகுமார் குடும்பத்துக்குச் சொந்தமான ‘மைனர்பாடி’ பண்ணை. கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தென்னை மரங்கள்தான். அவற்றுக்கிடையே ஊடுபயிர்களாக பாக்கு, வாழை, கோகோ என பசுமைக் கட்டி எழில் பொங்கக் காட்சியளிக்கிறது, பரந்து விரிந்து கிடக்கும் அந்த இயற்கைப் பண்ணை.
தாம்படிக்க யானைகள்!
”இந்த ஏரியாவுல நாங்க ஏழு தலைமுறையா விவசாயம் பண்ணிக்கிட்டிருக்கோம். அந்தக் காலத்துல நூத்துக்கணக்கான ஏக்கர்ல விளைஞ்ச கம்பு, கேழ்வரகையெல்லாம் தாம்படிக்கிறதுக்காக எங்க தாத்தா வீ.கே. ஆறுமுகம், யானைகளை வளத்தார். இப்போ அப்படியே விவசாயம் சுருங்கிப் போச்சு. நூத்தம்பது ஏக்கர்லதான் விவசாயம் நடக்குது.
வண்டல் கலந்த செம்மண் பூமி. அஞ்சு கிணறு இருக்குது. அதில்லாம பக்கத்துலேயே ஒரு பெரிய ஓடை. அதுல அரசு அனுமதியோட மோட்டார் வெச்சு தண்ணி எடுத்துக்கிறோம். அதனால, பெரும்பாலும் முழுக்க வாய்க்கால் பாசனம்தான். கொஞ்சத்துக்கு மட்டும் தெளிப்பு நீர்ப் பாசனம் அமைச்சிருக்கேன்.
நாட்டுரகத் தென்னை!
மேற்குதொடர்ச்சி மலைச் சாரல் பகுதிங்கறதால, இங்க தென்னை நல்லா வரும். அதனால, 1970-ம் வருஷத்துக்குப் பிறகு நிறைய பேர் தென்னைக்கு மாறினாங்க. எங்க தாத்தா தென்னை வெள்ளாமையை ‘சோம்பேறி வெள்ளாமை’னு சொல்லி, தென்னைக்கு மாறல. யானைகளுக்காக மட்டும் தீவனத்துக்காக ‘ரங்கூன்’ங்கிற நாட்டு ரகத்துல 320 தென்னை மரங்களை வெச்சிருந்தார். அந்த மரங்களுக்கு இப்போ 70 வயசாகுது. நாங்க விவசாயத்துக்கு வந்ததுக்கப்பறம்தான் தென்னையை அதிகப்படுத்திட்டோம்.
தாத்தா காலத்துல இருந்தே நாட்டு மாடுகளையும் அதிகளவுல வளர்த்துக்கிட்டிருந்தோம். அப்பாவும் உழவுக்கு, வண்டிக்குனு 50 ஜோடி நாட்டு மாடுகளை வெச்சிருந்தார். நான் காலேஜ் முடிச்சுட்டு விவசாயத்துக்கு வந்ததும், உழவு மாடுகளையும் நாட்டு மாடுகளையும் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுட்டு… கலப்பின மாடுகள வாங்கிட்டு வந்து பால் பண்ணை வெச்சேன். உழவு வேலைகளுக்கு டிராக்டர்களை வாங்கிப் போட்டுட்டேன். பால் பண்ணையில சரியா வருமானம் இல்லாததால, அதை விட்டுட்டேன்.
கை கொடுத்த பசுமை விகடன்!
நாலு வருஷத்துக்கு முன்ன நண்பர் மூலமா ‘பசுமை விகடன்’ பத்தித் தெரிஞ்சுக்கிட்டு அதைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பிச்சேன். அது மூலமா ஜீரோ பட்ஜெட் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, ஜீரோ பட்ஜெட் விவசாயிகள நேர்ல போய் பாத்துட்டு வந்தேன். குறிப்பா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ருத்ரப்பா தோட்டம், ருத்ரகிரி சுவாமிகளோட பண்ணையையெல்லாம் பாத்து அசந்து போயிட்டேன். நிறைய பேர்கிட்ட போன்லயும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். அப்படித் தெரிஞ்சுக்கிட்ட விஷயங்களைத் தோப்புல செயல்படுத்த ஆரம்பிச்சேன்.
பயிற்சியில் கலந்து கொண்டதில்லை!
இதுவரைக்கும் எந்தப் பயிற்சிலயும் கலந்துகிட்டதில்லை. ஜீரோ பட்ஜெட்டுக்கு மாறினதுக்கப்பறம்… திரும்பவும் நாட்டு மாடுகளை வாங்க ஆரம்பிச்சேன். இப்போ, 10 தார்பார்க்கர் மாடுகளையும் 15 காங்கேயம் மாடுகளையும் வெச்சுருக்கோம். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மார்வார் ரக குதிரையில ஆறு வெச்சிருக்கேன். ஒரு குதிரை ரெண்டரை லட்ச ரூபாய் விலை போகும்” என்று சுவாரஸ்யமாக முன் கதைகளைச் சொன்னபடி தென்னந்தோப்பைச் சுற்றிக்காட்டினார் உதயகுமார்.
காய்த்துக் குலுங்கும் 70 வயது தென்னைகள்!
நெடிது வளர்ந்து கிடந்த ரங்கூன் ரக தென்னை மரங்களைக் சுட்டிக் காட்டியவர், ”இந்த ரகத்துல 320 மரங்களை தாத்தா வெச்சிருந்தார். அதுல இருந்து உற்பத்தி செஞ்ச கன்னுகளை நட்டதுல… இப்போ 1,500 மரங்கள் இருக்கு. தாத்தா வெச்ச மரங்களுக்கு
70 வயசாகிட்டதால… கொஞ்சம் கொஞ்சமாக காய்ப்பு குறைஞ்சுக்கிட்டே இருந்துச்சு. நாலு வருஷத்துக்கு முன்ன, ‘இதையெல்லாம் வெட்டிப் போட்டுட்டு… புதுசா நடவு செய்யலாம்’னு நிறையபேர் சொன்னாங்க. நான், ஜீவாமிர்தத்தைக் கொடுக்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமாக் காய்ப்பு அதிகரிச்சு… யாருமே நம்ப முடியாத அளவுக்கு ஒரு மரத்துல இப்போ வருஷத்துக்கு சராசரியா 180 காய்கள் கிடைக்குது. ரசாயனம் போட்டப்போ… 120 காய்தான் கிடைச்சுது. இப்போ காயும் நல்லாப் பெருசா இருக்குது. முன்ன, 100 காய்ல இருந்து 13 கிலோ கொப்பரைதான் கிடைக்கும். இப்போ 17 கிலோ கொப்பரை கிடைக்குது. எல்லாமே ஜீவாமிர்தம் செஞ்ச வேலைதான்.
தென்னைக்கிடையில் ஊடுபயிர்கள்!
இப்போ 150 ஏக்கர்லயும் சேர்த்து மொத்தம் 7,500 தென்னை இருக்கு. எல்லாமே 25 அடி இடைவெளி விட்டுத்தான் நடவு செஞ்சுருக்கோம். அதுல 300 மரங்கள் மட்டும் மூணு வயசான இளம் மரங்கள். மிச்சமெல்லாம் 25 வயசுல இருந்து 70 வயசு வரைக்கும் உள்ள மரங்கள். இதுல ரங்கூன் ரகம் போக, மிச்சமெல்லாம் பெரும்பாலும் யாழ்ப்பாணம் ரகம்தான்.
தென்னைக்கிடையில 20 வயசான 4,000 பாக்கு மரங்கள் இருக்கு. 7 அடி இடைவெளியில 6,000 கற்பூரவல்லி வாழையும், 3,000 கோகோ செடிகளும் இருக்கு” என்ற உதயகுமார், ஜீவாமிர்தம் தயாரிக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார்.
தினம் 2,000 லிட்டர் ஜீவாமிர்தம்!
பெரிய அளவில் மூன்று தொட்டிகளில் ஜீவாமிர்தம். மோட்டார் மூலமாக டிராக்டரில் உள்ள டேங்கருக்கு மாற்றப்பட்டு, தோப்பில் உள்ள மரங்களுக்குக் கொடுக்கப்படுகிறது.நாட்டு மாடுகள் 25 மூலமா கிடைக்கிற சாணம், சிறுநீரைப் பயன்படுத்தி தினமும் 2,000 லிட்டர் ஜீவாமிர்தம் தயாரிக்கிறோம். தொழுவத்துக்குப் பக்கத்துலேயே தொட்டிகள் இருக்கறதால சாணமும், சிறுநீரும் சிரமமில்லாம வந்து சேர்ந்துடும். சுழற்சி முறையில ஊடுபயிர்கள் உட்பட அத்தனை மரங்களுக்கும் தினமும் ஜீவாமிர்தம் கொடுக்குறோம்.
நோய்த்தாக்குதல் இல்லை!
தென்னையைத் தவிர மத்த ஊடுபயிர்களுக்கு ஒவ்வொரு வருஷமும் மழைக்கு முன்ன, மரத்தோட வளர்ச்சியைப் பொறுத்து அரை கிலோவில் இருந்து ரெண்டு கிலோ வரைக்கும் கோழி எரு கொடுக்கிறோம். பாக்கு, தென்னைக்கு வருஷத்துக்கு ஒரு தடவை தொழுவுரம் போட்டுடுவோம். மூணு வருஷமா இதை மட்டும்தான் செஞ்சுக்கிட்டிருக்கோம். வேற எந்த இடுபொருளையும் கொடுக்குறதில்லை. வாழையை புழுக்கள், நோய்கள் தாக்குறதில்லை. குருத்தழுகல் வந்து மொட்டையான தென்னை மரம்கூட ஜீவாமிர்தம் கொடுத்த பிறகு காய்க்க ஆரம்பிச்சுருக்கு. நோய் எதிர்ப்புச்சக்தியும் கிடைச்சிருக்கு” என்று ஆச்சரியமூட்டும் தகவல்களாக அடுக்கிய உதயகுமார்,
செலவு குறைவு!
”ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாறுறதுக்கு முன்ன மொத்தத் தோப்புக்கும் சேர்த்து உரம், பூச்சிமருந்துக்கே வருஷத்துக்கு 27 லட்ச ரூபாய் செலவாகும். இப்போ ஜீவாமிர்தம் தயாரிச்சு மரத்துக்குக் கொடுக்குறது, கோழி எரு, தொழுவுரம் போடுறது எல்லாத்துக்கும் சேர்த்தே வருஷத்துக்கு 15 லட்ச ரூபாய்தான் செலவாகுது. கிட்டத்தட்ட 12 லட்ச ரூபாய் லாபக்கணக்குல கூடுதலா சேர்ந்துடுச்சு” என்றார் பெருமையாக.
தொடர்புக்கு
வி.எஸ். உதயகுமார்,
செல்போன்: 99765-59999