செரிமான கோளாறை போக்கும் புளி 

pannaiyar_puli

நோய் எதிர்ப்பு சக்தி உடையதும், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டதும், வலி மற்றும் வீக்கத்தை குறைக்க கூடியதுமான புளியின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். இல்லத்தில் இருக்க வேண்டிய முக்கிய பொருட்களில் புளியும் ஒன்று. இதில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின் சி சத்து கொண்ட புளியானது நோய் நீக்கியாக விளங்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது.

புளியை பயன்படுத்தி முகப்பொலிவு தரும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புளி, எலுமிச்சை, தேன். 2 ஸ்பூன் புளி கரைசலுடன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் போடும்போது வறட்சி மாறி பொலிவு ஏற்படும். தோலுக்கு வண்ணத்தை தருகிறது. கரும்புள்ளிகளை மறைய செய்கிறது.

புளிய மரத்தின் அனைத்து பாகங்களும் பயன்தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய புளியை பயன்படுத்தி புண்களை கழுவுவதற்கான மருந்து தயாரிக்கலாம். புளிய இலைகளுடன் வேப்பிலை சேர்க்கவும். இதில் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி எடுத்து புண்களை கழுவும்போது ரத்தகசிவு கட்டுப்படும். தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. சீல் பிடிக்காமல் புண் சீக்கிரம் ஆறும்.புளிய மரத்தின் இலை ரத்தத்தை தடுத்து நிறுத்தும் தன்மை கொண்டது. இலைகளை அரைத்து அடிபட்ட இடத்தில் பூசும்போது உடனடியாக ரத்தக்கசிவு நின்றுபோகும். காயங்கள் விரைவில் ஆறும்.

புளியம்பழத்தை பயன்படுத்தி செரிமான கோளாறை போக்கும் மருந்து தயாரிக்கலாம். புளியம் பழத்தின் ஓடுகளை நீக்கிவிட்டு பழத்தை எடுக்கவும். இதனுடன் தனியா பொடி, 2 கிராம்பூ, 2 ஏலக்காய், சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்துவர பித்தத்தை சமன்படுத்தி பசியை தூண்டுகிறது. கொழுப்பை குறைப்பதுடன் ஈரலுக்கு பலம் தருகிறது. மலச்சிக்கல் பிரச்னை சரியாகிறது. வாந்தி, குமட்டல், வயிறு உப்புசம், பசியின்மைக்கு புளியம்பழம் தேனீர் மருந்தாகிறது.

புளியமரத்தின் இலையை பயன்படுத்தி மூட்டு வலி, வீக்கம், ரத்தக்கட்டுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் சிறிது புளியம் இலைகளை சேர்த்து வதக்கவும். ரத்த கட்டு, வலி, வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வைத்தால் குணமாகும். மூட்டுவலிக்கு மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட புளி பித்தசமனியாகிறது. செரிமானத்தை தூண்டுகிறது. மலச்சிக்கலை சரிசெய்கிறது. தோலுக்கு நல்ல வண்ணத்தை தருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline